நண்பர் இப்ராஹிம்,
புதிய சட்டங்கள் எதையும் இஸ்லாத்தில் இணைக்க முடியாது என்பதும், கம்யூனிசத்தில் இணைத்துக்கொள்ளமுடியும் என்பதும் இந்த இரண்டுக்கும் இடையிலுள்ள முதன்மையான ஒரு வித்தியாசம். இது புரிதலுக்காக, விவாதத்திற்கானதன்று. ஏனென்றால் இந்தத்தலைப்பை நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. ஆகவே எதை எடுத்துக்கொண்டோமோ அதில் தொடர்வோம்.
பாலியல் குற்றங்கள் தொடர்பாக இஸ்லாம் கொண்டிருக்கும் நிலைபாடு மேலோட்டமானது என்பது என்னுடைய குற்றச்சாட்டு. ஏனென்றால் பாலியல் குற்றம் என்பது ஆடை அணியும் விதம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை. அது தனியுடமையையும், ஆணாதிக்கத்தையும் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. இந்த ஆணாதிக்க எண்ணங்களால் தான் பாலியல் குற்றங்கள் உருவெடுக்கின்றன. இதற்கு பழக்கவழக்கம்,ஆடை போன்றவை வாய்ப்பை ஏற்படுத்தித்தருகின்றன. ஆனால் ஆடை குறித்துப் பேசும் இஸ்லாம் ஆணாதிக்கம் குறித்து பேசவில்லை, இன்னும் சொல்லப் போனால் அதை அங்கீகரிக்கிறது. அதனால் தான் இஸ்லாமின் நிலைபாடு மேம்போக்கானது என்கிறேன். மேம்போக்கான பார்வையிலிருந்து எழும் தீர்வுகள் சரியானவையாக இருக்க முடியாது. இதில் கம்யூனிசத்தின் பார்வையான தனியுடமை, ஆணாதிக்கம் போன்றவற்றை சமூகத்திலிருந்து நீக்குவது ஆழமானது என்பதுடன் பாலியல் குற்றங்களை சமூகத்திலிருந்து முழுமையாக நீக்கும் இலக்கையும் கொண்டிருக்கிறது என்பதாலும் கம்யூனிசத்தின் நிலைபாடு சரியானது என்கிறேன்.
\\ஆணுககு எப்படி பெண் நுகர்பொருளோ,அதுபோல் பெண்ணுக்கும் ஆண் நுகர்பொருள். இன்றைய பெண்களின் உடை அலங்காரம் பெண்ணாதிக்கத்தின் வெளிப்பாடே என்பதையும் மறுக்க முடியாது// இன்றைய சமூகத்தில் பெண்களின் நிலை குறித்த உங்களின் இந்தப்பார்வை தவறானது. ஆண்களுக்கு பெண்கள் போகப் பொருளாக, நுகர்பொருளாக, பாலியல் பண்டமாக இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய உலகின் நிலை. இந்த ஆணாதிக்க கருத்தியலை அனைத்து செயல்களிலும் நீங்கள் கவனிக்கலாம். இதை நீங்கள் ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் நுகர்பொருட்கள் என்று குறிப்பிடுகிறீர்கள் என்றால் அது எப்படி என்று கூறமுடியுமா? அதுமட்டுமல்லாம்ல் பெண்களின் உடை அலங்காரம் பெண்ணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஒரு பெண் ஆடையைக் குறைப்பதும், உடலை வெளிக்காட்டிக்கொள்வதே அழகு என நினைப்பதும் ஆணாதிக்கமா? பெண்ணாதிக்கமா? உலகில் பெண்ணாதிக்கம் என்ற ஒன்று எப்போதும் நிலவில் இருந்ததேயில்லை என்பதுதான் வரலாறு. ஆதியில் சமூகத்தை பெண் தலைமை தாங்கி வழிநடத்தினாள், அதன் பிறகிலிருந்து இன்றுவரை ஆண் பெண்ணை அடிமைப்படுத்தி தன்னுடைய ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வருகிறான். இதை நீங்கள் மறுக்கிறீர்களா? உங்கள் கருத்து சரியானது என நீங்கள் நினைத்தால் அது எப்படி என்பதை விளக்குங்கள்.
\\பாலியல் தேவைகள் என்பது இனபெருக்கம் ,ஆசை,இன்பம் அத்தனையும் உள்ளடக்கியதே.இன்னும் சொல்லப்போனால் இனபெருக்கத்தின் தேவையை விட ஆசை,இன்பத்தின் வடிகாலாகத்தான்”பாலியல் தேவை” அதிக பங்கு வகிக்கிறது// என நீங்கள் குறிப்பிட்டிருப்பது இன்றைய நிலை. ஆம் பாலியல் தேவை என்பது ஆசையாக இன்பமாகத்தான் நுகரப்படுகிறது இன்றைய உலகில். ஆனால் நான் குறிப்பிட்டது இதையல்ல, “பாலியல் தேவைகள் என்பது உடல்சார்ந்து இனப்பெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இனப்பெருக்கம் மட்டுமே நோக்கமாக இருக்கும்வரை அங்கு குற்றம் என்பது இயல்பில் இருக்காது. ஆனால் அது நுகர்வாக மாறும்போது அதாவது ஆசை, இன்பம் என்பனபோன்ற வகைப்பாட்டுக்கு மாறும்போதுதான் அங்கு குற்றம் வருகிறது” என்றுதான் நான் குறிப்பிட்டிருந்தேன். அதாவது இனப்பெருக்கம் எனும் உண்மையான நோக்கம் மறைந்து ஆசை, இன்பம், காதல், காமம் என உடலுறவின் தளம் மாறியபோதுதான் பாலியல் குற்றங்களாக அது உருத்திரிந்தது. இதை நீங்கள் ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? மறுக்கிறீர்கள் என்றால் எப்படி?
\\பாலியல் வன்முறைக்கான கிரியா ஊக்கிகளாக கவர்ச்சியான உடைகளுடன் பெண்ணியம் இழந்தவர்களாக கவர்ச்சி பொருள்களாக பெண்கள் பவனி வரும்போது ஆண்களை எப்படி குறைகூற முடியும்?// இது சுத்தமான கலப்படமற்ற ஆணாதிக்கப் பார்வை. பெண்கள் கவர்ச்சியான உடையணிந்தால் ஆண்கள் பாய்ந்துவிடுவார்கள், அப்படி நேரும்பட்சத்தில் அதில் ஆண்களை குறைகூறக் கூடாது என்கிறீர்கள். இஸ்லாம் கூறும் உடையணிந்த பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதே இல்லையா? உள்ளாகிறாள் என்றால் உடை தவிர்த்த வேறு ஏதோ ஒன்று பாலியல் வன்முறையில் தொழிற்படுகிறது என்பது உறுதி. ஒருவனுக்கு நெருங்கிய உறவில் சகோதரி முறையில் ஒரு பெண்ணை குறைந்த ஆடையில் ஒருவன் காண நேர்கிறது என்று கொள்வோம், அதே அவன் அதே அளவு குறைந்த ஆடையில் அன்னிய பெண்ணை காண நேர்கிறது. இந்த இரண்டு நிகழ்வில் எந்த நிகழ்வில் அவனுக்கு பாலியல் வேட்கை கிளர்ந்தெழும்? இரண்டு நிகழ்விலும் ஒரே மாதிரியான பாலியல் வேட்கை அவனுக்கு உண்டாகுமென்றால் ஆடை காரணம் எனலாம், மாறாக ஒன்றில் எச்சரித்து ஆடையை சரிசெய்யவும், மற்றதில் காம வேட்கையும் கொண்டால் ஆடை தவித்து வேறொன்று அதில் செயல்படுகிறது எனலாம். இதில் இரண்டாவதான் மனநிலைதான் ஒருவனுக்கு ஏற்படும் என்றால் அதில் செயல்படும் வேறொன்று என்ன?
இஸ்லாத்தில் நிலைபாடு சரியானதல்ல என்பதற்கு இரண்டு கேள்விகளை உங்களிடம் எழுப்பியிருந்தேன். “ஆணும் பெண்ணும் தனித்திருக்கையில், பெண் ஆணின் உயரதிகாரியாக இருக்கும் பட்சத்தில் மூன்றாவதாக இருக்கும் சைத்தானின் முயற்சிகள் பலனளிக்காது. மேலாடை அணியாத பழங்குடியின சமூகங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த சமூகத்தில் இருக்கும் ஆண்கள் ஆடைகுறைவு என்ற காரணத்தினால் பாலியல் அத்துமீறல்களைச் செய்வதில்லை” இந்த இரண்டுமே ஆடை என்பது பாலியல் வன்முறையில் தகுந்த காரணியல்ல என்பதை நிரூபிக்கப் போதுமானது. ஆனால் இதற்கு பதிலளிக்கப் புகுந்த நீங்கள் \\மேலாடை அணியாத பழங்குடியினரின் சமூகங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களையே முன் மாதிரியாகக் கொண்டு அவர்களைப் போலவே அவர்களின் சமுக சூழ்நிலைக்கேற்ப இயங்கியலின் அடிப்படையில் சட்டங்களை ,நடைமுறைகளை வகுத்துககொள்வீர்களா?அல்லது புரட்சி மூலம் சோஷலிச ஆட்சியை எப்போது உலகம் முழுவதும் கொண்டு வருவது சாத்தியமா? சாத்தியமற்ற ஒன்றை சபையில் சொல்லிவைத்தால் ஆயிற்று என்று கூற வருகிறீர்களா?// என்று கூறியிருக்கிறீர்கள். இதில் உங்கள் இலக்கு என்ன? அந்த இலக்கு நாம் எடுத்துக்கொண்டிருக்கும் தலைப்பிற்கு எந்த விதத்தில் பொருத்தமானது? மேலாடை அணியாத பழங்குடியினத்தில் சோசலிச ஆட்சி ஏற்படாது. புதிய ஜனநாயகப் புரட்சிகான தேவை அந்த சமூகத்தில் இருந்தால், அதற்கான தயாரிப்புகளே அந்த பழங்குடியின சமூகத்தை நடப்பு உலகோடு தொடர்பை ஏற்படுத்தி வேண்டிய நவீன பயன்பாடுகளை முதலாளிய சீரழிவுகள் எதுமின்றி கற்பிக்கும். எதையுமே தட்டையாக புரிந்துகொள்ளாமல் எடுத்துவைத்திருக்கும் வாதங்களை உள்வாங்கி பதிலளிப்பது நல்லது.
அடுத்து,\\வெகுசில நிகழ்வுகளில் அவ்வாறு நடந்து கொள்ளாமல் இருக்கலாம்.வெகுசில நிகழ்வுகளே வெளிவரும். அதை பொருட்படுத்த தேவை இல்லைஎன்றால் நீங்கள் சொல்லுவதுபோல் ஆண்பெண் தனித்திருப்பது சரியான ஒன்றாகவே இருக்கட்டும்// என்று ஆண் பெண் தனித்திருக்கும் விசயத்தில் பதிலளித்திருக்கிறீர்கள். நடப்பு உலகில் பொருளாதார சுரண்டலின் வீரியம் காரணமாக ஆண் பெண் இருவருமே வேலைசெய்து பொருள் ஈட்டியாகவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. இதனால் ஆண் பெண் வேலை நிமித்தம் கலந்து பழக வேண்டியதிருப்பதும், தனித்திருக்க வேண்டியதிருப்பதும் அவசியமாகியிருக்கிறது. தனித்திருக்கும் எல்லாருமே தங்களுக்குள் பாலியல் இணக்கங்களை ஏற்படுத்திக்கொள்கிறார்கள் என்பது தவறானது. சிலர் அவ்வாறு இருக்கின்றனர், அது விதிவிலக்கானது. இந்த விதிவிலக்குகளுக்காக தனித்திருப்பது கூடாது என்பது சரியான தீர்வாக இருக்க முடியாது.
சௌதியில் பாலியல் குற்றங்களைக்கொண்டு சௌதி முழுவதும் இப்படித்தான் என்றோ, சௌதிகள் அனைவரும் இப்படித்தான் என்றோ நான் கூறவரவில்லை. ஒப்பீட்டளவில் சௌதியில் பாலியல் குற்றங்கள் குறைவு என்பதைத்தான் நான் மறுக்கிறேன். காரணம் ஒரு நாட்டின் பாலியல் வன்முறைக்கான புள்ளிவிபரம் என்பது அந்த நாட்டின் முழுமையான வன்முறைகளின் தொகுப்பாக இருக்காது. பதிவு செய்யப்பட்டவைகளை அடிப்படையாகத்தான் இருக்கும். எந்த நாட்டிலும் இதுபோன்ற நிகழ்வுகல் அனைத்தும் பதிவு செய்யப்படுவதும் இல்லை. ஆனால் சௌதியைப் பொருத்தவரை அங்கு பணிபுரியும் பெண்களே அதிகம் பாலியல் வன்முறைக்கு ஆளாவதால் அது வெளிவருவதே இல்லை. இது மற்ற நாடுகளில் பதிவாகாமல் இருப்பதைவிட வெகு அதிகம் என்பதால்தான் மற்ற நாடுகளின் பாலியல் குற்றங்களை விட ஒப்பீட்டளவில் சௌதியில் ஒன்றும் குறைந்துவிடவில்லை என்கிறேன்.
செங்கொடி
பின்குறிப்பு: நான் எழுதுவதில் உங்களுக்கு புரியாத இடம் என்று ஏதாவது இருந்தால் கேளுங்கள் விளக்க முற்படுகிறேன். மாறாக ஜெயகாந்தன், சாகித்ய அகாதமி போன்ற சொல்லாடல்கள் குறிப்பாக வாதம் செய்வதினின்று நம்மை குலைக்க முற்படும். எனவே பரிசீலனை செய்வீர்கள் என நம்புகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.