நண்பர் இப்ராஹிம்,
மீண்டும் மீண்டும் உங்களை குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் உங்கள் பதிலிலிருக்கும் வீரியமின்மை என்னை சோர்வடையச் செய்கிறது. உங்களின் பதிலை பொதுமைப்படுத்திப் பார்த்தால் உலகில் ஆணாதிக்கம் என்ற ஒன்று இல்லை என்பதாகத்தான் இருக்கிறது. மட்டுமல்லாது, ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்பதற்கு மாற்றீடாக காமாதிக்கம் எனும் சொல்லை பயன்படுத்தியிருக்கிறீர்கள். நான் கூறியிருக்கும் பதிலை கிரகித்துக்கொள்ளாமல் பதில் சொல்ல வேண்டும் என்று மட்டுமே முயன்றிருக்கிறீர்கள்.
என்னுடைய December4, 2010 at 10:57 மாலை பின்னூட்டத்தில் முதலிரண்டு பத்திகளில் தனியுடமைக்கும் பாலியல் குற்றங்களும் உள்ள தொடர்பு, உலகில் ஆணாதிக்கமே நிலவிவருகிறது என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறேன். அதற்கு நீங்கள் கேட்டபடி ஆதாரம் தரவேண்டுமென்றால் அது கம்யூனிச நூல்களாகவே இருக்கும் அதனால் பண்டைய உறவுமுறைகள் குறித்த, சமுதாய ஆய்வு நூல்கள் எதனையும் நீங்கள் படித்துப்பார்க்கலாம். படித்துப்பார்த்தால் நான் கூறியிருப்பதன் சாரம் கொஞ்சமாவது உங்களுக்கு புரியவரும். சரி தனியுடமை, ஆணாதிக்கம் குறித்த என்னுடைய கருத்துக்கு உங்களின் மறுப்பு என்ன? என்று பார்ப்போம். \\பாலியல் குற்றம் நடப்பதும் ,ஒருவர் மறுப்பின் பாலியல் வன்முறை ஏற்படுவதும் ஆணாதிக்கமும் இல்லை,பெண்ணாதிக்கமும் இல்லை.அது காமஆதிக்கம். ஆணாதிக்கம் இல்லை என்று சொல்லிவிட்டேன்//\\உங்கள் ஆய்வில் ஆணாதிக்கம் தெரிகிறது. எனது ஆய்வில் காமாதிக்கம் தெரிகிறது .இங்கே ஆணாதிக்கம் என்பது மன முரண்டுதான் தவிர,வேறொன்றுமில்லை//\\ஆணினத்திற்கு காம உணர்வு அதிகம் .மிருகங்களில் கூட ஆணினமே பாலியல் தேவையை நாடி அலைகிறது.ஒரு பெண் நாயை பல ஆண் நாய்கள் துரத்துவதை சாதரணமாக காணலாம். இதை நீங்கள் ஆணாதிக்கம் என்பது சரியன்று.காமாதிக்கம் என்பதே சரி// இவைகளில் ஆணாதிக்கம் இல்லை என்பதற்காக நீங்கள் எடுத்துவைத்திருக்கும் மறுப்புவாதம் என்ன? ஒன்றுமில்லை.
பாலியல் குற்றம் என்பதில் நீங்கள் பார்க்கமறுக்கும் பார்வை: ஒருவனுக்கு ஒரு பெண்ணை அவளின் விருப்பத்தை மீறி தன்னுடைய சுகத்தை மட்டும் முன்னிருத்தி செயல்படத்தூண்டும் தூண்டுதல் எப்படி ஏற்படுகிறது என்பதுதான். அவளும் நம்மைப்போன்ற சக பிறவிதான் எனும் எண்ணத்தை எது தடுக்கிறது? அவளுக்கும் நமக்கும் தொடர்பில்லை அவள் யாரோ, நாம் யாரோ, நமக்கு சுகம் கிடைக்க வேண்டும் அவ்வளவுதான், அதன் பிறகு அவளுக்கு ஏற்படும் பாதிப்புகள் சமூக ரீதியாகவும் உளரீதியாகவும் அவள் அனுபவிக்கும் துன்பங்கள் என்னுடையதல்ல எனும் எண்ணம் தானே அவனை பாலியல் வன்முறை செய்யத் தூண்டுகிறது. அதாவது ஆணும், பெண்ணும் கொள்ளும் கூடலில் (அது வன்முறையிலானதாக இருந்தாலும், இல்லையென்றாலும்) அவரவர்களுக்கு ஏற்படும் இன்பமும் துன்பமும் அவரவர்களுக்கு எனும் எண்ணம் இருப்பதால் தானே வன்முறை செய்யத் தூண்டுகிறது. இதை தனியுடமை என்று கொள்ளலாமா கூடாதா? ஒரு சமூகத்தில் இன்பமும் துன்பமும் பொதுவாக இருந்தால் வன்முறை எண்ணங்கள் ஏற்படாது. அப்படியான பொதுவாக இருந்த சமூகத்திலிருந்து தனியுடமை ரீதியில் சமூகம் பிரிந்து போனதினால் தான் பாலியல் குற்றங்கள் ஏற்பட்டன. இந்த தனியுடமை எண்ணம் இன்றுவரை வேரூன்றி நிற்கிறது என்பதால் தான் எவ்வளவு கடுமையான சட்டங்களைப் போட்டு எத்தனை நீண்ட காலம் நடைமுறைப்படுத்தியிருந்த போதிலும் பாலியல் குற்றங்களை சமூகத்திலிருந்து நீக்கமுடியவில்லை. ஏனென்றால் பாலியல் குற்றங்கள் தனியுடமையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. தனியுடமையை சமூகத்தில் தக்கவைத்துக்கொண்டு சட்டங்கள், ஒழுக்க விதிகள் என்று எதனைக் கொண்டுவந்து தலைகீழாக நின்றாலும் பாலியல் வன்முறைகளை முற்றிலுமாக நீக்க முடியாது.
ஆணாதிக்கம் என்பது என்ன? நடப்பு உலகில் நிர்வாகம் உள்ளிட்டு அனைத்துத் துறைகளிலும் ஆண்களே ஆதிக்கம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். இயற்றப்படும் சட்டங்கள், செய்யப்படும் வசதிகள் அனைத்தும் ஆணின் வாய்ப்பை உறுதி செய்யும் விதத்திலேயே செய்யப்படுகின்றன. ஒரு ஆண் தனித்தன்மை மிக்கவனாக சுதந்திரமானவனாக இருக்கிறான். இதே சுதந்திரமும், தனித்தன்மையும் பெண்ணுக்கு இருக்கிறதா? நீங்கள் சுலபமாக சொல்லிவிடமுடியும். ஆணுக்கு கொடுக்கும் சுதந்திரத்தையும் தனித்தன்மையையும் பெண்ணுக்கும் கொடுத்தால் சமூகம் கெட்டுப் போய்விடும் என்று. ஏன்? ஆண் வெளிப்படுத்தும் வேட்கையைப் போலவே பெண்ணும் வெளிப்படுத்தினால்…..? ஆக சமூக ஒழுங்கே பெண்ணை அடிமைப்படுத்தும் விதத்திலேயே கட்டியமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண் பாலியல் குற்றத்தை செய்யும் போது அவன் மீது சமூகம் பார்க்கும் பார்வைக்கும், அதே போன்ற பாலியல் குற்றத்தை பெண் செய்தால் சமூகம் அவளைப் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கிறது. பெண் எந்த அளவுக்கு கட்டுப்பட்டு நடக்கிறாளோ அந்த அளவுக்கு சமூகம் ஒழுங்குடன் இருக்கிறது என்பதுதான் ஆணின் பார்வையாக இருக்கிறது. எனவே ஆணுடன் ஒப்பிடும்போது பெண் அறிவில் குறைந்தவளாகவும், ஆற்றலில் குறைந்தவளாகவும், எதிர்கொள்ளும் துணிவில் குறைந்தவளாகவும் இருப்பதற்காக குடும்பச்சுமைகள் அனைத்தும் பெண்கள் தலையில் சுமத்தப்படுகிறது. குழந்தை வளர்ப்பு, வீடு சூழல் பராமரிப்பு, சமையல் உள்ளிட்ட பணிகளை பெண்களுக்கென்று ஒதுக்கி, ஆண் பொருளாதரம் ஈட்டல் என்பதை கையிலெடுத்துக்கொண்டான். அதனாலேயே பொருளாதர பலம் மிக்கவனாகவும் ஆனதால் பெண் இன்னும் ஆணைச் சார்ந்தே இருப்பவனாகிப் போனாள். ஆணாதிக்கமும் இல்லை பெண்ணாதிக்கமும் இல்லை எனக் கூறும் நீங்கள், இப்படி சிந்தித்துப்பாருங்களேன். இது பொருளிய உலகாக இருப்பதனால் யார் பொருளாதாரம் ஈட்டுகிறார்களோ அவர்கள் குடும்பச் சுமைகள் அதாவது குழந்தை வளர்ப்பு, வீடு பராமரிப்பு, சமையல் போன்றவற்றை செய்யவேண்டியதில்லை என்று வைத்துக்கொள்ளலாமா? ஆனால் நடப்பு உலகில் என்ன மாதிரி இருக்கிறது? பெண் பொருள் ஈட்டுபவளாக இருந்தாலும் கூட குடும்பச்சுமைகளை பெண்ணே செய்ய வேண்டும், ஆண் பொருளீட்டுபவனாக இல்லாவிட்டாலும் குடும்பச்சுமைகளை அவன் செய்யவேண்டியதில்லை. ஏன் சமூகம் இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது? இந்த ஒற்றைக் கேள்வியை நீங்கள் புரிந்துகொண்டால் போதும், ஆணாதிக்கம் என்றால் என்ன? இந்த உலகில் ஆணாதிக்கம் நிலவுகிறதா இல்லையா? என்பதை புரிந்து கொள்ளலாம். இதைத்தான் நீங்கள் உட்பட மதவாதிகள் பெண் இயல்பிலேயே பலவீனமாக படைக்கப்பட்டிருப்பதாக கருதுகிறீகள். ஆணுக்கு காம உணர்வு அதிகம் பெண்ணுக்கு குறைவு என்ற கருதுதலும், பெண்ணே குழந்தையை பெற்றெடுக்க வேண்டியவளாக இருப்பதும் சேர்ந்து பெண்ணை ஆணின் பாதுகாப்பில் இருக்க வேண்டியவளாக கட்டமைக்க, ஆண்களோ தங்களது சுதந்திர பாலியல் வேட்கைக்காக வாய்ப்பைப் பொருத்து அன்னியப் பெண்களை வேட்டையாடுகிறார்கள். பெண் என்றால் ஆணின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியவள் அப்படி ஆணில் கட்டுப்பாட்டில் இல்லாத சமயத்தில் சிக்கிவிட்டால் நம்மால் அனுபவித்துவிட்டு தப்பிவிட முடியும் எனும் ஆணாதிக்க சிந்தனை ஒருவனுக்கு இல்லாவிட்டால் அவனால் ஒரு அன்னியப் பெண்ணை காமப்ப்பார்வை பார்க்கமுடியுமா? இந்த ஆணாதிக்கத்தை தக்கவைத்துக்கொண்டு ஆண்டவன் போட்ட சட்டத்தைக் கொண்டு தண்டித்தாலும், ஆள்பவன் போடும் சட்டத்தைக் கொண்டு தண்டித்தாலும் பாலியல் வன்முறைகளை சமூகத்திலிருந்து முற்றிலுமாக நீக்கிவிட முடியாது.
இவைதான் சமூகத்தில் பாலியல் குற்றங்களுக்கான அடிப்படைகளாக இருக்கின்றன. இந்த அடிப்படைகளை நீங்கள் புரிந்து கொள்ளாதது தான் ஆடை, பழக்க வழக்கங்கள் போன்ற மேம்போக்கான காரணங்களை பாலியல் வன்முறைக்கான காரணமாக எண்ணுகிறீர்கள். இதையே ஒரு உதாரணத்தின் மூலம் தோராயமாக நீங்கள் ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள். \\நான் மழை பெய்தது என்கிறேன்.நீங்கள்,”கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மையம் ஏற்பட்டுள்ளது,அதனால் காற்று சுழன்று அடிக்கிறது,மேகம் திரண்டது,கருமேகம் சூழ்ந்தது,மழை பெய்தது ,என்கிறீர்கள்// ஆம். நீங்கள் மழைபெய்யும் காட்சியை மட்டும் கண்டுவிட்டு மழை பொழிகிறது என்கிறீர்கள். நான் அதை நுணுகி ஆய்ந்து அதன் காரணங்களை விளக்குகிறேன். காரணங்களை நீக்கினால் தான் விளைவுகளைத் தடுக்க முடியும் என்கிறேன். இதைக் கொண்டு எளிமையாக ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். பாலியல் குற்றங்களுக்கு தனியுடமையும், ஆணாதிக்கமும் காரணமாக இருப்பதால் அந்த இரண்டையும் சமூகத்திலிருந்து நீக்குவதுதான் பாலியல் குற்றங்களை நீக்குதற்கான தீர்வு என்கிறது கம்யூனிசம். ஆனால் ஆணாதிக்கத்தையும், தனியுடமையையும் தக்கவைத்துக்கொண்டு பெண்களை புர்கா அணிய வைப்பதன் மூலமும் கடுமையான சட்டங்களை நடைமுறைப் படுத்துவதின் மூலமும் பாலியல் குற்றங்களையும் நீக்கிவிட முடியும் என்பது இஸ்லாமியத் தீர்வு. இந்த இரண்டில் எது மேம்போக்கானது? எது ஆழமானது? நான் கம்யூனிசத்தீர்வுகளே சரியானதாகவும் ஆழமானதாகவும் இருக்கிறது என்பதை இதுவரையிலான பதிவுகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறேன். ஆனால் நீங்கள் இஸ்லாமியத்தீர்வு சரியானது என்பதற்கான ஆழமான வாதங்களை எடுத்துவைக்காமல் என்னுடைய வாதங்களை மேம்போக்காக மறுப்பதிலேயே ஆர்வம் செலுத்துகிறீர்கள்.
\\குறுகியகாலமே நடைமுறையில் இருந்து காணாமல் போகிவிட்ட ,நடைமுறைபடுத்த இயலாத சோசலிசத்தையும் அதன்மூலம் தான் பாலியல் வன்முறைக்கு தீர்வுகாணமுடியும் என்பதையும் மறு பரிசிலனை செய்யத் தயாரா?// நிச்சயமாக. கம்யூனிசம் தரும் தீர்வை தவறு என நீங்கள் நிரூபித்துவிட்டால் அடுத்த கணமே சரியான தீர்வை நோக்கி நகர்ந்து விடுவதில் எந்தப் பிழையும் இல்லை. நான் தயார். நீங்கள் தயாரா என்பதுதான் கேள்வி. இஸ்லாமியத்தீர்வு என்ன? குரான் குறிப்பிடும் தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும், பெண்கள் பிற அன்னிய ஆடவர்முன்னால் தங்களை மறைத்துக்கொள்ள வேண்டும் என்பது தானே. 1400 ஆண்டுகளுக்கும் அதிகமாக சௌதியில் இது நடைமுறையில் இருக்கிறது. உங்கள் வாதத்தை அப்படியே நான் ஒத்துக்கொள்கிறேன் என்று கூட வைத்துக்கொள்வோம். மற்ற நாடுகளைவிட சௌதியில் பாலியல் குற்றங்கள் கொஞ்சம் குறைவாக இருக்கிறது என்றே கொள்வோம்(ஒரு வாதத்திற்கு) ஆக இஸ்லாமியத் தீர்வினால் பாலியல் குற்றங்களை கொஞ்சம் குறைக்கலாமே தவிர இல்லாமல் செய்ய முடியாது. இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? ஆனால் இதையே 100 ஆண்டுகளுக்கும் குறைவாக நிலவில் இருந்த சோசலிசத்தைக் கொண்டு பழைய ஜார் காலத்திய ரஷ்யாவைவிட சோசலிச காலத்து ரஷ்யாவில் பாலியல் குற்றங்களை குறைத்துக்காட்டினோம். 1400 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஒரு நாட்டில் சோசலிசம் அமலில் இருந்தால் அது உலகம் முழுவதிலும் தாக்கம் செலுத்தி, மக்களை போராடத்தூண்டி புரட்சியை நடத்தி சோசலிச சமூகமாக மாற்றியிருக்கும். முதலாளித்துவ சீரழிவுகளுக்கு மீண்டும் திரும்ப முடியாத தூரத்தில் சென்று பாலியல் மட்டுமல்ல அனைத்துவித குற்றங்களையும் சமூகத்திலிருந்து நீக்கிக் காட்டியிருக்கும். ஏனென்றால் அது அடிப்படையான விசயங்களைக் கொண்டிருக்கிறது, மதங்களைப் போல் மேம்போக்கானவைகளையல்ல.
இந்தமுறை நான் உங்கள் வாதங்களை வரிக்கு வரி எடுத்துக்கொண்டு பதிலளிக்கவில்லை. பொதுவாக வைத்து நான் தந்திருக்கும் இந்த விளக்கங்களே அவை எல்லாவற்றிற்குமான பதிலை உள்ளடக்கியிருக்கிறது என்பதால் தனித்தனியே மீண்டும் விளக்குவது நேர விரயமாக இருக்கும் என எண்ணுகிறேன். தனித்தனியே விளக்க வேண்டுமென்றாலும் நான் ஆயத்தமாக இருக்கிறேன்.