திங்கள், 20 டிசம்பர், 2010

செங்கொடியின் பதில்கள்

  1. நண்பர் இப்ராஹிம்,
    மீண்டும் மீண்டும் உங்களை குற்றம்சாட்ட விரும்பவில்லை என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். ஏனென்றால் நான் குற்றம்சாட்டிய பிறகும்கூட நீங்கள் அதை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பதால்தான். என்னால் சுட்டிக்காட்ட மட்டும்தான் முடியும் அதைத்தான் செய்திருக்கிறேன். ஆனால் நீங்கள் உங்கள் வழமையிலேயே தொடர்வீர்களென்றால், இது ஒரு பொதுத்தளம் என்பது உங்கள் நினைவுக்கு, அவ்வளவு தான். என்னுடைய வாதத்தை நான் வலுவாகத்தான் வைத்திருக்கிறேன். அதற்கு உங்கள் பதில்களே சாட்சி.ஒருபக்கம் நான் வலுவான வாதங்களையும், மறுபக்கம் அதற்கு நழுவலான பதில்களும் என்றால் வலுவான வாதம் பயனற்றதாய் ஆகிவிடக் கூடாதல்லவா? அதனாலேயே குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
    முதலில் ஒரு வித்தியாசத்தை சுட்டிக்காட்ட வேண்டும். தொடக்க கால மனிதகுல உறவுகள், சமூக வளர்ச்சி குறித்து பலரும் ஆய்வு செய்து தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். அவைகள் பல்வேறு தலைப்புகளில் நூல்களாக இருக்கின்றன. கல்லூரிகளில் பாடத்திட்டங்களாக இருக்கின்றன. இவைகளிலிருந்து நான் கூறினால் அதை \\பண்டைக்கால ஆய்வு நூல்களே ஆதாரம் என்று கற்பனை ஆதாரம் தந்துள்ளீர்கள் ஆய்வுகள் அனைத்தும் உண்மைகள் அல்ல//என்று கூறியுள்ளீர்கள். ஆனால், ஹதீஸ்க‌ளைத்தவிர வேறு எதிலும் இல்லாத ஆதாரமற்ற கதைகளை கூறும்போது \\இங்கே ஒரு வரலாற்று நிகழ்வை பாருங்கள்// என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எது கற்பனைக் காவியம்? எது வரலாறு? பார்ப்பனீயர்கள் புராணத்தை வரலாறாகவும், வரலாற்றை புராணமாகவும் சித்தரிப்பதில் வல்லவர்கள். நீங்களுமா?
    என்னுடைய கூற்றுக்கு நீங்கள் ஆதாரம் கேட்டபோது நூல்களின் பட்டியலையே என்னால் தந்திருக்க முடியும். ஆனால் அவற்றை நீங்கள் கம்யூனிச நூல்கள் என்று எளிதாக ஒதுக்கிவிடுவீர்கள் என்பதால்தான் பண்டைய சமூக வளர்ச்சி குறித்த எந்த ஆய்வாளரின் நூலையும் நீங்கள் படித்துப்பார்க்கலாம் என குறிப்பிட்டிருந்தேன். ஆனால் உங்களுக்கு பரிசீலித்துப் பார்ப்பதற்கோ, ஒன்றை தேடி அறிந்து கொள்வதற்கோ, எது சரி என ஆய்வு செய்வதற்கோ துளியும் முயற்சியோ விருப்பமோ கொள்வதில்லை. ஆதாரம் என்ன என்று கேட்பதெல்லாம் பதில் சொல்வதினின்று நழுவும் ஒரு உத்தி. அதற்கு நீங்கள் அளித்திருக்கும் பதிலும் சாட்சியாக இருக்கிறது.
    உங்கள் பதிலைப் பார்ப்போம். பாலியல் குற்றங்கள் தனியுடமையில் நிலை கொண்டிருக்கின்றன என்றும், அதனால் தான் ஒருவனுக்கு இன்னொரு பெண்ணுக்கு என்ன துன்பங்கள் நேர்ந்தால் என்ன? தனக்கு சுகம் கிடைத்தால் போதும் எனும் ஆணாதிக்க சிந்தனை தோன்றி பாலியல் குற்றங்களை நிகழ்த்துகிறது என்பதை விளக்கி; இந்த தனியுடமையும் ஆணாதிக்கமும் இன்னமும் நிலை கொண்டிருப்பதால்தான் என்ன சட்டம் போட்டு எவ்வளவு காலம் நடைமுறைப்படுத்தியிருந்தாலும் பாலியல் குற்றங்களை களைய முடியவில்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியிருந்தேன். இதற்கு பதில் சொல்லப் புகுந்த நீங்கள் கூறியிருந்ததென்ன? \\நேற்றைய சோஷலிச ரஷ்யாவில் ஒரு பெண் தலைவரை கூட உருவாக்க முடிய வில்லை.இன்றுவரை உலக பிரபல்ய பெண்களில் ஒருவர் கூட கம்யுனிஸ்ட்களை காணோம்.என்பது வேறு விஷயம்// \\ரஷ்யாவில் இந்த பழைய கலாச்சாரம் பரிசிலனையில் இருந்ததா? இல்லை எனின் அதை நடைமுறை படுத்து முன் சோசலிசம் படுத்து கொண்டதா?// \\உங்கள் ரஷ்யாவில் சோதனைக்காக ஸ்டாலின்.லெனின்.மாவோ போல ஒரு பெண் தலைவரை உலகுக்கு காட்டமுடியவில்லை.எத்தனை பேர் பொலிட் பீரோவில் பெண்கள் அங்கத்தினராக இருந்தார்கள்?அதில் அதிகாரமிக்கவராக ,ஒளிர் விட்டவராக யாரும் உண்டா?// \\உங்களது ம.க.இ..க வுக்கு கிளைகள் தோறும், மாவட்டந்தோறும், மாநிலங்கள்தோறும் பெண்களை தலைவராக்கி பொதுவுடமைக்கு முன்மாதிரியாக வழிகாட்டுங்களேன்.நீங்கள் இப்போதே ஆரம்பித்தால்தான் இன்னும் ஒரு பில்லியன் ஆண்டில் சோசலிசத்தையும் பத்து பில்லியன் ஆண்டில் கம்யுநிசத்தையும் கொண்டுவர முடியும்// \\பழைய பல்லவியைபாடாமல் புது பல்லவியை ம,க,இ,க வில் தொடங்குங்கள்.பாலியல் குற்றத்திற்கு தனியுடமை தான் காரணம் என்றால் உங்களது சோஷலிச தலைவர்கள் பாலியர் குற்றம் செய்தது இல்லையா?இல்லை அங்கே அதிகார வர்க்கத்தில் பெண்கள் பொது உடமை யாக்கப் பட்டார்களா?[ஆதிகாலத்தைபோல்]// \\ஸ்டாலின்,லெனின்,போன்ற அதிபதிகளும் பொலிட்பீரோ உறுப்பினர்களும் அனுபவித்த இன்பங்களை ரஷ்ய மக்கள் அனைவரும் அனுபவித்தார்களா? மக்கள் அனுபவித்த துன்பங்களை ஸ்டாலின்.லெனின் பொலிட்பீரோ உறுப்பினர்கள் அனைவரும் அனுபவித்தார்களா?// என்ன இது? மெய்யாகவே சோசலிச காலத்தில் பெண்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தார்களா என்பதை அறிய விரும்பியிருந்தால் அதற்கு ஒற்றைக்கேள்வி போதுமே. ஆனால் உங்களின் நோக்கம் சோசலிச கால ரஷ்யாவையும் மகஇக வையும் இழிவு படுத்தவேண்டும் என்பதாகத்தான் தெரிகிறது. இதே உத்தியைத்தான் கடந்த விவாதத்தில் கலந்து கொண்டவரும் கடைப்பிடித்தார். கேள்விகளுக்கு பதிலோ மறுப்போ அளிக்கமுடியாதபோது இப்படி தேவையில்லாததைப் பேசினால் ஒன்று நான் கோபபடுவேன் அல்லது அவைகளுக்கு விளக்கமளிப்பேன். இரண்டில் எதைச் செய்தாலும் பதில் கூறுவதிலிருந்து நழுவிக்கொள்ளலாம். உங்களின் எதிர்பார்ப்பும் இதுதானா? ஆனால் நான் கோபப்படவும் போவதில்லை, சோவியத்தில் அமைச்சராக இருந்த தோழர் குருப்ஸ்கயா உட்பட யாரைப் பற்றியும் உங்களுக்கு நான் சொல்லவும் போவதில்லை. ஏனென்றால் அதை தெரிந்து கொள்வது உங்களின் நோக்கமுமில்லை.
    சோவியத் ரஷ்யாவிலோ, மகஇக விலோ எத்தனை பெண் தலைவர்கள் இருந்தார்கள் என்பதற்கும் பாலியல் குற்றங்களின் காரணத்திற்கும் அதை தடுப்பதற்கும் என்ன தொடர்பு என்பதை நீங்கள் விளக்க வேண்டும்? ஒரு வேளை சோசலிச காலத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டிருந்ததா என்பது உங்கள் ஐயமாக இருந்தால்; ஆம். வழங்கப்பட்டிருந்தது. பெண் என்ற காரணத்தினால் எந்த வாய்ப்பும் அங்கு மறுக்கப்படவில்லை, தொழில்துறை தொடங்கி நிர்வாகம் வரை அனைத்திலும் பெண்கள் பங்கு கொண்டிருந்தனர். இன்னும் சாதாரண பெண்களுக்கு குடும்பச்சுமை அவர்களின் வாய்ப்பை தடுத்துவிடக்கூடாது என்பதற்காக சமையல் குழந்தை வளர்ப்பு போன்றவற்றை அரசு ஏற்றுக்கொண்டு எல்லா இடங்களிலும் சமையல் கூடங்களையும், குழந்தை வளர்ப்பு மையங்களையும் தொடங்கியது. நம்முடைய விவாதத்திற்கு இந்தத் தகவல்கள் போதுமானது. இல்லை, சோசலிச காலத்தில் பெண்கள் மதிக்கப்படவில்லை என நீங்கள் கருதினால், அதற்கான சான்றுகளைத் தாருங்கள் பின்னர் பேசுவோம். ஆனால் அதற்காகவேனும் நீங்கள் சோசலிச ரஷ்யாவை படிக்க வேண்டியதிருக்குமே என்ன செய்யப் போகிறீர்கள்?
    \\தனியுடமை உருவானதற்கு நீங்கள் …….. தனியுடைமைதான் காரணம் என்பது பொது மடமை// பொது மடமை என்று எதைச் சொல்லுகிறீர்கள் நீங்கள்? ஐயா, நான் தனியுடமை எப்படி பாலியல் குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது என்பதை விளக்கியிருக்கிறேன். ஒன்று எதிர் வாதங்களின் மூலம் அதை மறுத்திருக்க வேண்டும், அல்லது தனியுடமை காரணமல்ல என்பதற்கு புது வாதங்களை தந்திருக்க வேண்டும். அதைவிடுத்து சினிமா, பொது மடமை என்று வார்த்தைகளால் கடந்து செல்வது உங்களையல்லவா அம்பலப்படுத்தும். எனக்குத்தேவை பதில் உங்களின் தப்பித்தலல்ல.
    \\பாலியல் குற்றத்திற்கு தனியுடமை ………. பொது உடமை யாக்கப் பட்டார்களா?[ஆதிகாலத்தைபோல்]// இதன் மூலம் நீங்கள் கூற வருவதென்ன? எந்த சோசலிச தலைவர் பாலியல் குற்றம் செய்தார்? கூற முடியுமா உங்களால்? முடியவில்லை என்றால் நீங்கள் செய்திருப்பது அப்பட்டமான அவதூறு. நேர்மையானவர்கள் அவதூறு பரப்பமாட்டார்கள். தவறி செய்துவிட நேர்ந்தால் மன்னிப்பு கேட்பார்கள். நீங்கள்….?
    \\காமத்திற்கு கண்ணே இல்லாதபோது உள்ளம் எங்கே இருக்கும்?……… குடை பிடிக்க சொல்வீர்கள் போலிருக்கிறது// காமம் என்பது என்ன? கண், உள்ளம் எல்லாம் இருப்பதற்கு அது என்ன தனி உயிரா? புரிந்து தான் உங்கள் வாதங்களை எடுத்து வைத்திருக்கிறீர்களா? காமம் என்பது மனிதனுக்கு ஏற்படும் ஒருவித உணர்ச்சி, ஒருவனுக்குள் இருக்கும் தனியுடமை, ஆணாதிக்க எண்ணங்கள் அந்த உணர்ச்சியை கேடான வழிகளில் பயன்படுத்தி குற்றம் செய்யத்தூண்டுகிறது என்பது தான் நான் கூறியிருப்பது. இன்னொரு முறை படித்துப் பாருங்கள். அதென்ன பெண்களின் அசாதாரண நடவடிக்கை? யாருக்கு அசாதாரண நடவடிக்கை? தொடர்புடைய பெண்ணுக்கா? இல்லை அதைக் காணும் ஆணுக்கா? அசாதாரண நடவடிக்கையாக இருந்தால் ஆண் பாய்ந்து விடுவானா? பாலியல் வன்முறை அங்கு நடந்தால் அது யாருடைய குற்றமாக இருக்கும்? யோசித்துப்பார்த்தால் உங்களுக்கே புலப்படும் குற்றம் எங்கிருக்கிறது என்பது. அப்புறம், நண்பர் இப்ராஹிம், என்ன இது மழை குடை என்று உவமேயம். இது போன்ற கிண்டலான வார்த்தை விளையாடல்களை தவித்துக் கொள்ளலாமே.
    \\உமரைப்போன்ற ஒரு ஆட்சியை கொண்டு வந்தால் இஸ்லாமிய சட்டங்களும் ஒழுக்க விதிகளும் பாலியல் வன்முறைகளை அடியோடு ஒழித்துவிடும்// உமரின் ஆட்சியிலேயே பாலியல் வன்முறைகள் நிகழ்ந்ததாகக் கூட ஒரு ஹதீஸ் கதை உண்டு தெரியுமா உங்களுக்கு? பெண்களும் ஆண்களும் ஒரே பள்ளிவாசலில் தொழுகை நடத்தியதை (முகம்மது அனுமதித்ததை) உமர் ஏன் தடுத்தார்? என்ற கேள்விக்கு பதிலை தேடிப்பருங்கள். யாருடைய ஆட்சியை கொண்டு வந்தால் பாலியல் வன்முறைகள் அடியோடு ஒழிந்துவிடும் என்கிறீர்களோ அந்த உமரின் ஆட்சியில் பள்ளிவாசல்வரை பாலியல் குற்றங்கள் நீண்டிருந்தது உங்களுக்கு புரியவரும்.
    \\நமது இந்தியாவில் சுப்பர் பவர் ஒரு பெண்தான் ,……………… எல்லாதுறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள்// இன்று பெண்கள் எல்லாத்துறைகளிலும் எங்களால் சாதிக்க முடியும் என்பதை சில இடங்களில் புகுந்து காட்டிக்கொண்டிருக்கிறார்கள். என்றால் அதன் பொருள் பெண்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதா? ஆண்களுக்கு நிகராய் வந்து விட்டார்கள் என்பதா? உலக மக்கட்தொகையில் ஏறக்குறைய சரிபாதியாய் இருக்கும் பெண்கள் பத்து விழுக்காடு இடத்தைக்கூட பெற்றுவிடவில்லை. ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள் \\பெண்களுக்கு இன்னும் என்ன உரிமைகள் வேண்டும் சொல்லுங்கள்?// என்று. இது தான் ஆணாதிக்கப் பார்வை என்று முன்னரே நான் குறிப்பிட்டிருந்தேன். அடிமையாய் அவர்களை அடக்கிவைத்திருந்ததை எதிர்த்து சில இடங்களில் கிளம்பியிருக்கிறார்கள். இதைத்தான் ஆண்களுக்கு சமமாய் பெண்களும் வந்துவிட்டதாய் காட்டுகிறார்கள். குடியரசு தலைவர், பாராளுமன்றத் தலைவர் போன்ற இடங்களில் பெண்கள் வந்துவிட்டால் சமூகத்தில் பெண்கள் சம உரிமை பெற்றுவிட்டதாக ஆகிவிடுமா? கடந்த பிஜேபி ஆட்சி கூட அப்துல்கலாமை ஜனாதிபதியாக வைத்திருந்தது, அதனால் அந்தக் கட்சி முஸ்லீம்களை மதித்து தலையாய இடம் கொடுத்திருக்கிறது என்று பொருளாகுமா?
    \\ஒரு காலத்தில் இல்லாததை எல்லாம் இப்போது சொல்லி ………….. குற்றங்களால் யாருக்கும் பாதிப்பில்லை// ஒரு காலத்தில் விளையாடக்கூட பெண்கள் போராட வேண்டியிருந்தது என்பதை புலம்பலாக அல்ல, இப்போதுதான் பெண்கள் வெளிவரத்தொடங்கியிருக்கிறார்கள் என்பதற்காக சுட்டிக்காட்டினேன். வெளிவரத்தொடங்கியிருந்தாலும் இன்னும் ஆணாதிக்கத்திலிருந்து சமூகம் விடுபடவில்லை. பெண்கள் நுகர்வுப்பொருளாக இன்று சீரழிந்திருப்பது ஆணாதிக்கத்திற்குப் பயன்படத்தான். பெண்ணியம் பேசும் சில குழுக்கள் கூட மிகக்குறைந்த உடையணிந்து பொது இடத்தில் உலவுவதும், மது அருந்துவதும், விரும்பிய ஆடவருடன் உறவு கொள்வதும் தான் பெண்சுதந்திரத்தின் அடையாளம் என பிதற்றித் திரிவது கூட முதலாளியத்துடன் இயைந்த ஆணாதிக்கத்திற்கு சேவை செய்வதற்குத்தான். இதை எடுத்துக்காட்டி பெண்கள் சமமாகிவிட்டார்கள் என கூறவருகிறீர்கள் என்றால் நீங்கள் சமூகத்தைப் பார்க்கவில்லை என்பது பொருள். இதுபோன்ற பிரபல, மாதிரிப் பெண்களை பயன்படுத்தித்தான் சமூகத்தின் பெரும்பான்மையான பெண்களை ஆண்களின் நுகர்வுக்காக தயார்படுத்துகிறார்கள். இன்றைய முதலாளித்துவ கலாச்சாரத்திற்கு அது அவசியமாக இருக்கிறது. எப்படி மக்களை சுரண்டுவதை மக்களின் முன்னேற்றமாக சித்தரிக்கிறார்களோ அதேபோல ஆண்களின் காமப் பொம்மையாக மாறுவதை பெண்களுக்கான சுதந்திரமாக சித்தரிக்கிறார்கள். இதைத்தான் நீங்களும் பெண்கள் சம உரிமை பெற்றதாகக் கருதுகிறீர்களா?
    \\செங்கொடி ,பெண் பொருள் ஈட்டுபவளாக இருந்து ,…………. குடும்ப சுமைகளை பகிர்ந்து கொள்ளும் நிலையே உள்ளது// இப்ராஹிம், என்னை பார்த்துவரச் சொல்வதை விட நீங்கள் பார்த்துவிட்டு வருவது சிறந்தது. எந்தப்பகுதியில் இதுபோன்று நடக்கிறது? ஓரிரு வீடுகளில் சில கட்டாயங்கள் காரணமாக (நீங்களும் முன்னெச்சரிக்கையாக சில இடங்களில் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்) சில வேலைகளை ஆணும் பகிர்ந்து கொண்டிருக்கலாம். ஆனால், சமூகம் அவ்வாறு மாறிடவில்லை. அப்படி கட்டாயம் உள்ள வீடுகளிலும் கூட பெண்ணைப்போல் சமையல் வீட்டு பராமரிப்பை ஆண் செய்வதை காணவே முடியாது.
    \\ஆண்களில் அனைவரும் இது போன்ற நிலையில் ………… கொண்டுவர முயற்ச்சிக்க வேண்டாம்// மொத்த ஆண்களும் இப்படி இருக்கிறார்கள் என்று நான் எழுதியதாக எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? எங்கே நான் எழுதியதை எடுத்துக்காடுங்கள் பார்ப்போம். பாலியல் குற்றம் புரிபவர்களின் சிந்தனை எப்படி இருக்கிறது என்பதைத்தான் நான் எழுதியிருக்கிறேன். இதை மறுக்க முடியாத நீங்கள், அனைத்து ஆண்களும் இப்படித்தான் என எழுதியதாக பம்மாத்து செய்கிறீர்கள். என்னே உங்கள் புரிதல்.
    \\ஆதிகாலத்தில் பெண் தலைமையில் ………. குற்றம் நடைபெறாது என்று சொல்ல வருகிறீர்கள்ஆம் இதுதான் வீரியமான கருத்து// ஆம். இது வீரியமான கருத்துதான். திருமணம், பதிவு, இனிசியல் எல்லாம் ஆணாதிக்க வடிவங்கள் தான். அவை நீக்கப்பட வேண்டியவைகள். ஆனால் எப்போது எப்படி என்பதில் தான் அதன் வீரியத் தன்மை தங்கியிருக்கிறது. தொடரும் விவாதங்களில் இதுகுறித்து விரிவாக பார்க்கலாம், போதுமான வீரியத்துடன் உங்கள் தேடல்கள் இருந்தால்.
    \\இப்போதைய குடும்ப கட்டமைப்பில் ………. பாலியல் குற்றம் வெகுவாக குறையும்// இதை உங்களின் பாமரத்தனம் என்பதா? இல்லை வரட்டுத்தனம் என்பதா? என்று எனக்கு புரியவில்லை. திருமண‌ம் உட்பட வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் ஆண்களின் தீர்மானமே செயல்படுத்தப்படுகிறது என்பதை நாம் கண்கூடாகக் கண்டுவருகிறோம். மணமகளையோ, மணமகனையோ தேர்ந்தெடுப்பதில் ஜாதி, அந்தஸ்து, பொருளாதாரம் போன்றவைகளே முக்கியக் காரணிகள். இவைகள் ஆணை முன்வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன. நீங்கள் கண்ட வெகுசில குடும்பங்களில்(பெரும்பான்மை குடும்பங்களில் அவ்வாறல்ல என்றாலும்) பெண்கள் தேர்ந்தெடுத்தாலுமே ஆணாதிக்கத்திற்கு உட்பட்டுத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். வெகு சில குடும்பங்களில் பெண்கள் குடும்பத்தை நடத்துபவர்களாக இருக்கலாம், அதைக் கொண்டு இக்குடும்பத்தில் ஆணாதிக்கம் இல்லை என்றோ பெண்ணாதிக்கம் என்றோ கூறமுடியாது. ஏனென்றால் நீங்கள் புரிந்து கொண்டிருப்பது போல், ஆண்தலைமை தாங்கினால் ஆணாதிக்கம், பெண் தலைமை தாங்கினால் பெண்ணாதிக்கம் என்பதல்ல, ஆணாதிக்கத்தின் வேர்கள் ஆழமானவை. ஒரு குடும்பத்தில் நிகழ்வுகளில் பெண் தீர்மானிப்பவளாக இருந்தாலும் அவளின் தீர்மானம் ஆணாதிக்கத்தை எதிர்த்து இருக்கமுடியாது. ஒரு குடும்பத்தில் ஆண் பொம்மையாக இருந்து பெண்ணே அனைத்தையும் தீர்மானிக்கிறாள் என்று கொள்வோம், அந்த குடும்பத்தில் நிகழும் ஒரு மரணத்தில் ஆணுக்குப் பதிலாக பெண் கொள்ளிவைக்க முடியுமா? இதையே முஸ்லீம் சமூதாயத்திலும் கூறமுடியும், ஒரு குடும்பத்தை பெண்ணே தலைமை தாங்குகிறாள் என்பதற்காக தன்னுடைய மகளின் திருமண‌த்தில் அவளால் மந்திரம் சொல்லி நடத்திவைக்க முடியுமா? ஆக ஒரு குடும்பத்தையோ அல்லது குழுவையோ பெண்ணே தலைமை தாங்கி நடத்தினாலும் ஆணாதிக்கத்தை மீறமுடியாது. ஏனென்றால் நீங்கள் நினைப்பது போல் யார் தலைமை தாங்குகிறார் என்பதை வைத்து ஆணாதிக்கம் தீர்மானம் பெறுவதில்லை, சமூகமே ஆணாதிக்க சமூகமாய் இருக்கிறது. அடுத்து நீங்கள் கூறியிருக்கும் கருத்து பாலியல் வன்முறை குறித்த உங்களின் படிமத்தை காட்சிப்படுத்துகிறது. உரிய வயதில் திருமணம் செய்து கொண்டால் பாலியல் குற்றங்கள் குறையுமா? உரிய வயதில் திருமணம் செய்துகொள்வதைப் பொருத்தல்ல, கிடைக்கும் வாய்ப்பைப் பொருத்து, பயன்படுத்திக்கொள்ளும் தருணத்தைப் பொருத்து, தப்பிக்கும் சாத்தியத்தைப் பொருத்துத்தான் பாலியல் குற்றங்கள் நடைபெறுகின்றன. இதை உரிய வயதில் திருமணம் செய்தால் வெகுவாக குறையும் என்பது முழுக்க முழுக்க பொருத்தமான கூற்றாக இருக்கமுடியுமா? திருமணம் முடித்தவர்களும் பாலியல் குற்றங்களில் வெகுவாக ஈடுபட்டே வருகின்றனர்.

    \\இப்போது பெண்ணுக்கு என்ன உரிமை இல்லாமல் இருக்கிறாள் ………….. அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்// இப்போது பெண்களுக்கு என்ன உரிமைகள் இருப்பதாக கருதுகிறீர்கள் நீங்கள்? ஆணுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கு இருக்கிறதா? மிகுந்த போராட்டங்களின் பயனாக, முதலாளிய தேவைகளின் விளைவாக ஆணாதிக்கத்திற்கு உட்பட்டு பெண்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக வேலை செய்ய அனுமதி, சில இடங்களில் தலைமை தாங்க, சொத்துக்களை நிர்வகிக்க என்பன போன்று, ஆனால் இந்த சலுகைகள் ஆணாதிக்க வரம்புக்குள் தான் இருக்கின்றன. இதைத்தான் நீங்கள் பெண்களுக்கு இன்னும் என்ன வேண்டும்? எனக் கேட்கிறீர்கள். ஆக இப்படிக் கேட்பதின் மூலம் ஆண்தான் பெண்ணுக்கு சிற்சில சலுகைகளை தேவையைப் பொருத்து வழங்கிக்கொண்டிருக்கிறான் என்பதை கோடிட்டுக் காட்டியதன் மூலம் இது ஆணாதிக்க சமூகம் என்பதை நீங்களும் உணர்ந்தே தான் இருக்கிறீர்கள் அல்லவா? முந்திய காலத்தைவிட பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பது பெண்களுக்கு சலுகைகள் கொடுத்தது தான் காரணமா? நிச்சயம் இல்லை. முதலாளித்துவ சமுதாயத்தில் ஆணாதிக்கம் நுகர்வுக் கலாச்சாரத்துடன் இணைந்து புதிய தளத்தை அடைந்திருக்கிறது. சுதந்திரம் என்று கூறிக்கொண்டே காலனியாதிக்கத்தை தொடர்வதுபோல, பெண்ணியம் பெண்கள் உரிமை எனக் கூறிக்கொண்டே ஆணாதிக்கத்தை உயர்த்துகின்றன. ஆண்களுக்கான உள்ளாடை விளம்பரங்களில் கூட குறைந்த ஆடையுடன் பெண்ணை தோன்ற வைக்கும் வக்கிரம் பிடித்த அளவுக்கு இன்று ஆணாதிக்கம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இதுதான் பாலியல் வன்முறை அதிக அளவில் நடப்பதற்கான காரணமாக அமைகிறதேயன்றி பெண்கள் போராடிப் பெறும் சலுகைகளினால் அல்ல.

    விஜய் டிவி நீயா? நானா? குறித்து பேசியிருக்கிறீர்கள். இதுபோன்ற ‘டாக் ஷோ’க்களைப் பார்த்துத்தான் சமூகத்தின் யதார்த்தத்தை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அது மெய்யான யதார்த்தத்திற்கு எதிரானதாகத்தான் இருக்கும். ஏனென்றால் இந்த டாக் ஷோக்கள் சமூகத்திற்கு தேவையானவைகளை எடுத்துக்கொள்வதேயில்லை. விளம்பரதாரர் நிகழ்ச்சியாக நடத்தப்படும் இவைகளின் எல்லை, நடப்பு போக்குகளை தக்கவைக்கும் அமைப்பிலேயே இருக்கும். போகட்டும், உங்களின் கணக்கை பார்ப்போம். \\மிச்சம் இருக்கும் ஆணாதிக்கமும் ………. இங்கே ஆணாதிக்கம் எங்கே உள்ளது?// கணவன் அடக்கியாளும் 20 விழுக்காடும், கணவனே பெருமையாக கருதவைக்கக்கப்பட்டிருக்கும் 30 விழுக்காடும் ஆக சரிபாதி நேரடியாக ஆணாதிக்கத்திற்குள் வந்துவிடுகிறது. கணவனுக்கு சமமாக தங்களைக் கருதும் 30 விழுக்காடு பெண்கள் என்ன அடிப்படையில் சமமாக கருதுகிறர்கள்? ஆணுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் தங்களுக்கும் இருக்கிறது என்பதால் சமமாகக் கருதுகிறார்களா? இல்லை. ஆண்களைப் போல் நம்மாலும் வேலைக்கு போக முடிகிறது என்பன போன்ற சலுகைகளை உத்தேசித்துத்தான் சமம் என எண்ணுகிறார்கள். ஆனால் ஆண் தன்னுடைய சம்பளப் பணத்தை சுதந்திரமாக செலவு செய்வது போல் பெண்ணால் செலவு செய்துவிட முடியுமா? என்ற கேள்வியை எழுப்பினாலே போதும், இந்த சமம் பல்லிளித்துவிடும். கணவனை மீறி செயல்படுவதே உரிமையாக கருதும் 10 விழுக்காடு பெண்களும் என்ன விதத்தில் கணவனை மீறுகிறார்கள்? பாலியல் விவகாரங்கள், ஆடை அணிகலன்கள் எடுப்பது போன்றவற்றில் தான் இருக்கும். கணவனை மீறல் என்பது ஆணாதிக்க மீறலாக, எடுத்துக்காட்டாக பூ, பொட்டு வைக்க மாட்டேன், அல்லது கணவனின் மரணத்தின் பின் எடுக்க மாட்டேன் என்பது போன்ற மீறலாக இருக்குமா? ஆக நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துமே ஆணாதிக்க சமூகம் நிலவுவதைத்தான் சுட்டிகாட்டுகிறது(நீங்கள் விட்டுவிட்ட 10 விழுக்காட்டை நானும் கண்டுகொள்ளவில்லை)

    \\நான் மழை பெய்கிறது என்று சொன்னது, …………. சினிமாவில் மழை பெய்வதை காட்டியுள்ளீர்கள்// இதில் நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பது உங்களுக்காவது புரிகிறதா? இதோ நீங்கள் எழுதிய அந்த வாசகம் \\நான் மழை பெய்தது என்கிறேன்.நீங்கள்,”கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மையம் ஏற்பட்டுள்ளது,அதனால் காற்று சுழன்று அடிக்கிறது,மேகம் திரண்டது,கருமேகம் சூழ்ந்தது,மழை பெய்தது ,என்கிறீர்கள்// நீங்கள் இப்போது சொல்வதுதான் சரி என்றால் விளக்கமாக பொருத்திக்காட்டுங்கள் பின்னர் நான் எனக்கு புரியவில்லை என எடுத்துக்கொள்கிறேன்.

    ஆடைக் குறைவினாலும் பாலியல் குற்றங்கள் ஏற்படும் என்பதை நான் எப்போதும் மறுத்திருக்கவில்லை என்னுடைய முதல் பின்னூட்டத்திலேயே இப்படிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்பது உங்கள் கவனத்திற்கு \\பெண்ணின் ஆடை ஆடவனின் ஆசையை தூண்டுவது, இன்றைய நுகர்வுக் கலாச்சாரப் பழக்கங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் போன்றவைகளை பாலியல் குற்றங்களுக்கான காரணங்களாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். இவை மேலோட்டமானவை. ….. இவைகள் தற்போது இருக்கும் பாலியல் குற்றங்களின் அளவை வேண்டுமானால் சற்று குறைக்கலாம் …… எனவே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காரணங்கள் அதாவது இஸ்லாம் கூறும் காரணங்கள் மேம்போக்கானவை// ஆடைக்குறைவு என்பது பாலியல் குற்றத்திற்கான தூண்டுதல்களின் ஒன்று, ஆனால் அதுவே பாலியல் குற்றங்களுக்கான அடிப்படைக் காரணமல்ல என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. அதனால் தான் இஸ்லாமிய காரணம் மேம்போக்கானது என்றும் கூட சுட்டிக்காட்டியிருக்கிறேன். இதே போல், இன்ப உணர்ச்சியா இனப்பெருக்கமா என்பதிலும் நன் எழுதியிருப்பதை மீண்டும் படித்துப்பார்த்தால் நீங்கள் நினைப்பது பிழை என்பது உங்களுக்கே தெரியும். இதோ அந்த வாசகம், \\வடிகாலாக இல்லாமல், உடலியல் ரீதியான தேவை அவனை செலுத்தாமல், மனம் சிந்தனை அதைச் செலுத்தும்போதுதான் அங்கு இன்பம், காதல், காமம் என்பது தொடங்கி குற்றமாக முடிகிறது// இவைகளை நீங்கள் சுட்டிக்காட்டிய பின் நான் என் நிலையை மாற்றிக்கொண்டேன் என நினைப்பது உங்களின் பிழை. மட்டுமல்லாது, நான் தவறான நிலையில் இருந்து நீங்கள் சான்றுகளுடன் அதை சுட்டிக்காட்டினால் என்னுடைய நிலையை மாற்றிக்கொள்வதில் என்னிடம் எந்த தயக்கமும் இருக்காது.

    \\கம்யுனிச ஆரம்பகால கவர்ச்சி கோசத்தில் மயங்கிய மக்கள் …… குற்றமற்ற உலகமாய் மாற்றி காட்டுவோம்// இந்த விவாதம் தொடங்குவதற்குமுன் சோசலிசம் எப்படி நடந்தது எப்படி முடிவுக்கு வந்தது என்பதை தலைப்பாக தேர்வு செய்திருக்கலாம். அப்படியிருந்தால் அதை நாம் விரிவாக விவாதித்திருக்கலாம். ஏனென்றால் அதுகுறித்து நீங்கள் அதிக ஆர்வத்துடன் இருப்பதை அறிய முடிகிறது. சோசலிச ஆட்சியை மக்கள் நீக்கினார்களா? முதலாளித்துவம் சதி செய்து அதை நீக்கியதா? என்பது நாம் எடுத்துக்கொண்ட தலைப்புக்கு உட்படாது என்பதால் அதை விட்டுவிட்டு மற்றவைகளைப் பார்ப்போம். சோசலிசம் நீண்ட காலம் நிலவில் இருந்தால் பாலியல் குற்றங்கள் உட்பட அனைத்துவகை குற்றங்களையும் சமூகத்திலிருந்து நீக்கியிருக்கும் என நான் கூறினால் அது வெறும் கற்பனை மட்டுமல்ல, எவ்வாறென்றால் கம்யூனிசத்தின் நோக்கமே அனைத்துவகை அடக்குமுறைகளிலிருந்தும் சமூகத்தை விடுவித்து சம உரிமை, சம வாய்ப்பு, சம வசதிகளுடன் மக்களை வாழவைப்பது தான். அப்படி வாழவைப்பதற்காக, மனித குலத்தின் வரலாற்றை ஆய்ந்து, எங்கிருந்து அடக்குமுறைகளும் அடிமைத்தனங்களும் தொடங்கியதோ, அங்கிருந்து தன் சீர்படுத்தலை தொடங்குகிறது. அடக்குமுறைகளுக்கான அடிப்படை எதுவாக இருக்கிறதோ அதை நீக்க புரட்சி நடத்துகிறது. சோசலிசம் நீண்ட காலமாக நடப்பிலிருந்தால் அது எதை தன்னுடைய நோக்கமாக கொண்டிருக்கிறதோ அதை அடையும் என்று கூறுவது வெற்றுக்கற்பனையாக ஒருபோதும் இருக்க முடியாது. ஆனால் இஸ்லாத்தின் நோக்கம் என்ன? மக்களை சமத்துவமாக வாழவைப்பது அதன் நோக்கமல்ல. எவ்வாறெனில், மனிதர்களின் குற்றங்களுக்கும், பாவங்களுக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் தண்டனை தருவேன் என கூறுகிறது. அதே நேரம் மறுமைக்கு முன்னால் குற்றமற்ற சமூகம் இருக்கும் என முன்னறிவிக்கவும் இல்லை. ஆகவே கடைசி நாள் வரை குற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும், அதற்கு நான் தண்டனை தருவேன் என்பதுதான் இஸ்லத்தின் சாராம்சம். குற்றமற்ற சமுதாயத்தை அமைக்கும் நோக்கத்தை கொண்டிருக்காத ஒன்று ஆயிரமல்ல கோடிக்கணக்கான ஆண்டுகள் நடைமுறையில் இருந்தாலும் குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்க முடியாது. எனவே நோக்கமாக கொண்டிராத ஒன்றை, முடியாத ஒன்றை உருவாக்கிக்காட்டுவோம் என்று கூறுவது தான் கற்பனையேயன்றி; எதை நோக்கமாக கொண்டிருக்கிறதோ, எதை முடியும் என்று கூறுகிறதோ, எதற்காக போராடுகிறதோ அதை உருவாக்கிக் காட்டுவோம் என்று கூறுவது கற்பனையாக இருக்க முடியாது. எனவே இஸ்லாமிய ஆட்சியில் குற்றங்களில்லாத சமூகத்தை ஏற்படுத்திக் காட்டுவோம் என்பது கற்பனை மட்டுமல்ல கேலிக்கூத்தானதும் கூட. மட்டுமல்லாது உமரின் ஆட்சியில் கூட பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது என்பதையும் மேலே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

    \\பாலியல் குற்றங்களுக்கு காரணமென்ன ……. நிலவும் பிரச்சனையின் சாராம்சம் தெரியாது// எந்த ஒரு பிரச்சனையிலும் சரியா தப்பா எனும் கோணத்தில்தான் பரிசீலனை இருக்க வேண்டும். தவிர்க்க முடியாத இடங்களில் விதிவிலக்காக நடுநிலமை ஏற்படலாம். இதை மீறி நடுநிலமைக் கண்டோட்டம் என்பது நாடகமாகத்தான் இருக்கும். சரி, நீங்கள் கூறியபடி செய்தித்தாள் செய்திகளையோ எடுத்துக்கொள்வோம். பெண்ணின் காம வெறியால் குடும்பநாசம் என்பது என்றாவது வரும் செய்தி தான். ஆனால் ஒரு நாளுக்கு பத்து செய்தியாக வருவது வன்புணர்ச்சி செய்திகள். ஆணாதிக்க வக்கிரவெறியர்களால் குதறப்படும் செய்திகள் முடிவில்லாமல் வந்துகொண்டே இருக்கின்றன. ஆடையே அணியத் தொடங்காத பச்சிளங் குழந்தை முதல் ஆடை விலகலை அனிச்சைச் செயலாய் மூடமுடியாத கிழவிகள்வரை வன்புணர்ச்சி செய்யப்படுவது தினம் தினம் செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது. இவைகளுக்கு என்ன காரணம் கூறுவீர்கள்? அண்மையில் கௌரவக் கொலைகள் நாடாளுமன்றம் வரை பேசப்பட்டது. இந்த கௌரவக் கொலைகளின் இலக்கு காதலித்து மணமுடிக்கும் பெண்கள். நீதிமன்றங்கள் கௌரவக் கொலைகளுக்கு ஆதரவாய் தீர்ப்பு வழங்குகின்றன. வட மாநிலங்களில் கௌரவக் கொலைகளை தடுத்தால் ஓட்டு கிடைக்காது என்று மக்கள் பிரதிநிதிகள் வெட்கமில்லாமல் பேட்டியளிக்கிறார்கள். தன் சொந்த மகளையே காதலித்ததற்காக கொல்லத் துடிப்பவர்கள் அதே காரணத்திற்காக மகனை கொல்வதில்லையே ஏன்? தினமும் செய்தித்தாள்களில் வரும் இதுபோன்ற செய்திகளை நீங்கள் ஆழமாக மூழ்கிப் பார்த்தாலும், மேலாக மிதந்து பார்த்தாலும், நடுவாந்திரமாக மூழ்கு நீச்சலில் பார்த்தாலும் ஆணாதிக்கம் எனும் முடிவைத்தான் நீங்கள் வந்தடைய வேண்டியதிருக்கும்.

    \\இதைவிட வேறு என்ன தெரிந்துகொள்ளுமாறு செயல்பட்டு விட்டீர்கள்? கிரக்கிக்கத் தெரியவில்லை உளவாங்கி கொள்ள தெரியவில்லை,அப்படியெனில் செயல்முறை விளக்கம் வேண்டும் என்றால் நடைமுறை படுத்த முடியாத ஒன்று என சொல்லவருகீறிர்கள்// நான் எடுத்துவைக்கும் வாதங்களை உள்வாங்கிப் பதிலளியுங்கள் என உங்களைக் கேட்டால் கம்யூனிசம் நடைமுறைப் படுத்தமுடியாதது என்று என்மீது ஏற்றிக்கூறுகிறீர்கள். ஓ… இதைத்தான் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சுப்போடுவது என்பார்களோ.

    தொடரும்
  2. தொடர்கிறது
    \\ஒரு வீட்டுக்காரனுக்கு அழகான குழந்தை ….. உங்களுக்கு புரிதல் இல்லை.என்பீர்கள்// உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை அல்லது நீங்கள் புரிந்து கொள்ள முனையவில்லை என்பதை நீங்களே அழகாகக் கூறிவிட்டீர்கள். இன்பத்தையும் துன்பத்தையும் பொதுவில் வைப்பது என்பதை உங்களால் இப்படித்தான் புரிந்துகொள்ள முடியும் என்றால் உங்களுக்கு புரிதல் இல்லை என்று கூறுவதில் தவறொன்றும் இல்லையே. குழந்தையை வளர்ப்பதும், பராமரிப்பதும், பாதுகாப்பதும் பெற்றொர்களின் கடமையாக இருப்பது விலக்கப்பட்டு அரசு பொறுப்பில் பொதுவில் இருந்தால், புதிய குழந்தையின் வரவுக்கு அனைவரும் மகிழ முடியும், இன்னொரு குழந்தையின் இழப்பிற்காக அனைவரும் வருந்தவியலும். ஒன்றை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அது என்ன சொல்கிறது என கற்க வேண்டும், அது சரியா தவறா என ஆராயவேண்டும். சரி என்றால் தைரியமாக ஏற்கவும், தவறு என்றால் தயக்கமில்லாமல் தள்ளவும் முடியவேண்டும். ஆனால் இரண்டு நிலைகளிலும்(இஸ்லாம், கம்யூனிசம்) இந்த மனப்பான்மை உங்களைப் போன்றோரிடம் இருப்பதில்லை என்பதுதான் வேதனைக்குறியது.

    \\சூழ்நிலைகளில் சிக்காதவரை 95 சதவீத மக்கள் கற்புக்கரசர்கல்தான். மனிதனின் காம உணர்வுகளுக்கு முன் பொது உடமையாவது, கத்தரிக்கையாவது// ஆம். சூழ்நிலையில் சிக்காதவரை பெரும்பாலானவர்கள் நேர்மையானவர்கள் தான், சூழ்நிலை நேர்ந்துவிட்டால் வரம்பு மீறிவிடுகிறார்கள். இங்கு சூழ்நிலை என்பது என்ன? காம உணர்வா? அது எல்லோருக்கும் இருக்கிறது, என்றால் சூழ்நிலை என்பதென்ன? செயல்படுத்தும் வசதியும் தப்பிக்கும் வாய்ப்பும் இது தான் சூழ்நிலை என்பது. சரி இந்த சூழ்நிலை அமைந்த எல்லோருமே வரம்பு மீறிவிடுகிறார்களா? இருக்கமுடியாது. ஆணாதிக்கம் எந்த அளவில் ஒருவனை ஆள்கிறதோ, தனியுடமைச் சீரழிவு எந்த அளவுக்கு அவனில் ஆழ்கிறதோ, அந்த அளவிற்குத்தான் ஒருவன் வரம்பு மீறிப்போவான்.

    சௌதி பாலியல் குற்றங்களில் ஏதோ நான் ஒப்புக்கொள்ள மறுப்பதுபோல் போக்குகாட்டியிருக்கிறீர்கள். ஆனால் நான் மிகத்தெளிவாகவே கேட்டிருக்கிறேன், \\இஸ்லாமியத்தீர்வு என்ன? குரான் குறிப்பிடும் தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும், பெண்கள் பிற அன்னிய ஆடவர்முன்னால் தங்களை மறைத்துக்கொள்ள வேண்டும் என்பது தானே. 1400 ஆண்டுகளுக்கும் அதிகமாக சௌதியில் இது நடைமுறையில் இருக்கிறது. உங்கள் வாதத்தை அப்படியே நான் ஒத்துக்கொள்கிறேன் என்று கூட வைத்துக்கொள்வோம். மற்ற நாடுகளைவிட சௌதியில் பாலியல் குற்றங்கள் கொஞ்சம் குறைவாக இருக்கிறது என்றே கொள்வோம்(ஒரு வாதத்திற்கு) ஆக இஸ்லாமியத் தீர்வினால் பாலியல் குற்றங்களை கொஞ்சம் குறைக்கலாமே தவிர இல்லாமல் செய்ய முடியாது. இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?// என்று. மீண்டும் கேட்கிறேன், உங்கள் பதில் என்ன?

    இப்ராஹிம், உங்களைப் போல் கேட்ட கேள்விகளை வேறொன்றாக திரிக்காமல் தெளிவான, நேரிய‌ பதிலை அளித்திருக்கிறேன். தேவைப்படின் இன்னும் அதிக விபரங்களுடன் ஆயத்தமாக உள்ளேன். இவைகளை பரிசீலனை செய்யத் தயாரா நீங்கள்? எது இலக்கு(ஊர்) என்பதையும், அந்த இலக்கை சென்றடையும் திசை(வழி) எது என்பதையும் போதிய உள்ளடக்கத்துடன் எடுத்துவைத்திருக்கிறேன். எது இல்லாத ஊருக்கான வழி என்பதையும் இது எடுத்துக்காட்டியிருக்கிறது. நீங்கள் இஸ்லாமியத்தீர்வை தாராளமாக பின்பற்றலாம். அது உங்கள் உரிமை. ஆனால் அதுதான் சரியான தீர்வு என்று சொல்லாதீர்கள், சொன்னால் அதற்கான சான்றுகளை, தரவுகளை, விளக்கங்களை எடுத்துவைக்க வேண்டும். அல்லாவிடின் மீள்பார்வை செய்யுங்கள் உங்கள் நிலையை.நீங்கள் மீள்பார்வை செய்யாவிடினும், உங்கள் தவறான நிலைப்பாடுகளால் நீங்கள் இடறும்போது கம்யூனிஸ்ட்கள் எங்கள் கரம் நீளும் உங்களைத் தாங்கிப் பிடிக்க, ஏனென்றால் அது எங்கள் கடமை.

2 கருத்துகள்:

  1. நண்பர் இப்ராஹிம்,

    மூன்று நாட்களுக்குள் உங்கள் வாதத்தை வைத்துவிடுவதாக ஒப்புக்கொண்டிருந்தீர்கள், நான்கு நாட்கள் கடந்துவிட்டது. உங்கள் தரப்பு வாதத்தையோ, தாமதத்திற்கான காரணத்தையோ பதிவிடுமாறு கோருகிறேன்.

    செங்கொடி

    பதிலளிநீக்கு
  2. தோழர் செங்கொடி...

    தங்கள் விவாதங்களை தொகுத்து புத்தக வடிவில் வெளியிடலாமே..atleast u can make this as a pdf file and can give to all left ideological ரைட்டுக்கும் குடுக்கனும்னுதன் நம்ம ஆசை.. பூவராக பெருமாள் காப்பாதிய பூமி , எல்லையற்ற மூன்று ஆமைகளின் முதுகில் மிதக்கும் வரை அவர்கள் வாங்கிப்படிக்க மாட்டார்கள்.. and also one thing .. மதங்கள் அவை தோன்றிய கால கட்டங்களுக்கேற்ப விஞ்ஞான வளர்ச்சியின் போக்கை ஒத்துக்கொள்ளவோ அல்லது மறுத்தளிக்க இயலாத போது தள்ளப்படும் நிலையின் வெளிப்பாடே... கல்கி அவதாரம் judgement day போன்ற கற்பனாவாத கட்டியங்கூற்றுகள் என்பது என் கறுத்து.. தங்கள் கருத்தும் இதுவாகவே இருக்கும் பட்ச்சத்தில்.. மதங்களின் பக்குவமற்ற அல்லது பக்குவமடையயாத அறிவியலுக்க்கு முன் விழி பிதுங்கும் நிலைகளை தங்கள் வலைதளத்தில் வாதங்களாக ஏற்றலாம் உடனுதவ தயாராக இருக்கிறேன்... "religion is nothing but opium of the masses..." ibrahim maas ena therinthirunthum avardudan vaathappoor purivathu een...இவர்களை வழிநடத்ததான் முடியும். அடுத்த தலைமுறையையாவது பின் பற்றும் பாதையை அவர்களாக தேர்ந்தெடுத்தால் சரி.. அவ்வாறு தேர்ந்தெடுத்த தலைமுறையை சேர்ந்தவனென்ற முறையில் என்க்கு அச்சுதந்திரம் கிடைக்காதவர்ளை கானும் போது , ஓர் ஆதங்கமுண்டு

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.