செவ்வாய், 4 ஜனவரி, 2011

  1. நண்பர் இப்ராஹிம்,
    ஹதீஸ்கள் கதையா? முகம்மது முன்மதிரியாக இருந்தாரா? இந்த இரண்டு கேள்விகள் மட்டுமே தோராயமாக உங்கள் பதிவு மொத்தத்தையும் ஆக்கிரமித்திருக்கிறது. இதை மட்டுமே கொண்டு முடித்து விடக்கூடாது என்பதற்காக மேலதிகமாக ஒன்றிரண்டு வார்த்தைகள். கேட்க்கப்பட்ட கேள்விக்கு நேர்மையாக பதில் கூற முனையுங்கள் என கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டது எனக்கு. நான் சுதந்திரமானவன் என கூப்பாடு போட்டுவிடுவதால் மட்டுமே ஒருவனுக்கு சுதந்திரத்தின் பொருள் புரிந்திருப்பதாய் கொள்ள முடியுமா? தன் எண்ணங்களை வெளிப்படையாக தைரியமாக கூறமுடியாதவனாக, தனக்குத்தானே சுதந்திரத்தை மறுப்பவனாக இருந்துவிட்டு நான் சுதந்திரமானவன் என கூப்பாடு போடுவதில் பலன் ஒன்றுமில்லை. உங்களால் பதில் கூற முடியவில்லை என்றால், வெளிப்படையாக அதைக் கூறிவிடுங்கள். நேரமாவது மிச்சமாகட்டும். அதை விடுத்து பதில் என்ற பெயரில் உளறி வைப்பது, என்னுடைய நேரத்தை மட்டுமல்ல உங்களுடைய நேரத்தையும் சேர்த்து வீணாக்குகிறது.
    ஹதீஸ்கள் கதையல்ல என்பதற்கு மடக்கி மடக்கி விளக்கமளித்துள்ளீர்கள். ஆனால் அந்த விளக்கங்கள் என் கேள்விகளுக்கு பதிலாக அமைந்திருக்கிறதா? இஸ்லாம் குறித்த தொடரில் ஹதீஸ்கள் பற்றி ஒரு அத்தியாயம் எழுதியுள்ளேன் அதை படித்துப்பாருங்கள். நீங்கள் உங்கள் நம்பிக்கையினூடாக கூறியவற்றை நான் ஏற்கனவே கூறிவிட்டேன். நான் இங்கு சில கேள்விகளை எழுப்பியிருக்கிறேன். அதற்குத்தான் பதில் வேண்டும். மனனம் செய்தார்கள் பாதுகாத்தார்கள் என்கிறீர்கள் அதைத்தான் நான் செவிவழிக்கதை என்கிறேன். சில யூதர்கள் குழப்பம் விளைவிப்பதற்காகவே முஸ்லீமாக மாறி ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்கள் என்கிறீர்கள், அதைத்தான் நான் பிரித்தறிய முடியாதபடி கலப்படமாகிவிட்டது என்கிறேன். முகம்மது இறந்த வெகுசில ஆண்டுகளிலே குரான் கற்பனை கலந்துவிட்டது எனும்போது நூறிலிருந்து நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து தொகுக்கத் தொடங்கிய ஹதீஸ்களில் என்ன உண்மைத்தன்மை இருக்கும்? எனக் கேட்டிருக்கிறேன் அதற்கு உங்கள் பதிலென்ன? புஹாரி அப்படி சோதித்தார் இப்படி சோதித்தார் என்கிறீர்கள். முகம்மது இறந்த பிறகான முதல் நூறாண்டுகால அறிவிப்பாளர்களை அதற்கும் நூறாண்டு பிற்பட்ட புஹாரி என்ன விதத்தில் சோதித்திருக்க முடியும்? எனக் கேட்டிருக்கிறேன் அதற்கு உங்கள் பதிலென்ன? ஹதீஸ்களின் சோதனையில் குரானோடு முரண்படுகிறதா எனக் காண்பதும் ஒரு அலகு என்கிறீர்கள். அறிவிப்பாளர்களின் வரிசையும் தன்மையும் தான் அலகுகளாக இருக்கின்றன. அவ்வாறில்லை என்றால், குரான் மாற்றப்பட்டிருக்கிறது என நேரடியாக பொருள் தரும் ஒரு ஹதீஸ் புஹாரியில் இடம்பெற்றதெப்படி? இந்திரா காந்தி கம்ப்யூட்டர் என ஏதேதோ சொல்லியிருக்கிறீர்கள். ஹதீஸ்களின் காலத்தைவிட தபரி போன்றவர்களின் சீராவிற்கு முகம்மதுவின் காலத்தோடு நெருங்கியிருக்கும் நிலையில் அவை புறக்கணிக்கப்பட்டதன் காரணம் காலத்தால் பின்னால் தொகுத்த ஹதீஸ்களோடு முரண்படுகிறது என்பதுதான் காரணமா? என்றால் மன்மோகன் சிங் காலத்தில் கம்ப்யூட்டர் இருக்கிறது என்பது தான் பதிலா?
    இஸ்லாத்தை அறிதல் என்பதன் பொருள் முஸ்லீம்களின் நம்பிக்கைகளை அப்படியே உள்வாங்கிக் கொள்வது என்பதல்ல. நான் இஸ்லாத்தை அறிந்திருக்கிறேன், என் கேள்விகளுக்கான பதில் தேடி அதன் விளக்கங்களூடே பயணிக்கிறேன். அதனால் தான் அறிந்திருப்பதாக கூறுகிறேன். இதற்கு முஸ்லீம்களின் நம்பிகைகள் எனக்கு அவசியமில்லை.
    வரலாற்று ஆய்வுகள் உண்மைக்கு அருகில் வரலாமே தவிர அறுதியிட முடியாது என்கிறீர்கள். அறுதியிட்டுக்கூற உங்களிடம் ஏதும் அறிவியல் பூர்வமான முறைகள் இருக்கிறதா? இருந்தால் கூறுங்கள் சோதித்துப் பார்த்துவிடுவோம். உண்மைதானா என்பதை அறிய வழியில்லாத கதைகளை வரலாறு என அடம்பிடிக்கிறீர்கள். ஆனால் அறிவியல் ரீதியான ஆய்வுகளை அருகில் வரலாம், பக்கத்தில் உட்காரலாம் என பசப்புகிறீர்கள். புராதன பெண்வழிச் சமூகம் குறித்து அறிய பல நூல்கள் இருந்தாலும் ஒரு நூலை மட்டும் நான் இப்போது குறிப்பிடுகிறேன். ஆசான் ஏங்கல்ஸின் “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” எனும் நூலை படித்துப்பாருங்கள். படித்து, ஹதீஸ் குறித்து நான் எழுப்பும் கேள்விகளைப்போல் அதில் எழுப்பமுடியுமா என முயன்று பாருங்கள்.
    முகம்மது முன்மாதிரி என்பதற்கும் விளக்கங்கள் தந்திருக்கிறீர்கள். புதிய சமூக ஒழுங்குக்கு எதை முன்மாதிரியாக காட்டினார் எனக் கேட்டேன். நீங்கள் சட்டங்களை நிறைவேற்றினார் என்று மடைமாற்றுகிறீர்கள். இஸ்லாம் எனும் வடிவத்திற்கு அவர் காட்டிய முன்மாதிரி ஒன்றுமில்லை, கோட்பாட்டு ரீதியாக அவர் காட்டிய மறுமை, கடவுள் என்பதுதான் அந்த வடிவத்திற்கு அவர் காட்டிய முன்மாதிரி. மறுமை, கடவுள் குறித்த மூட நம்பிக்கைகள் முகம்மது வருவதற்கு முன்பே மக்களிடம் ஊறிப் போனவை. ஆனால் கம்யூனிசம் கூறும் சமத்துவ சமூகம் என்பது மக்களிடம் இல்லாதது. அதனால் தான் உலகை புரட்சிகரமாக மாற்றியமைக்கும் தேவை குறித்துப் பேசுகிறது கம்யூனிசம். முகம்மது எப்படி சட்டமியற்றிக் காட்டினாரோ அதேபோல் சோசலிச அரசுகளும் சட்டமியற்றின. மக்களிடம் ஊறிப்போன மூடத்தனங்களை செப்பனிட்டுக் காட்டி கடவுள் மறுமை என செப்படி வித்தை காட்டியது போல் கம்யூனிசம் வித்தை காட்டவில்லை. மக்களின் துயரங்கள் அனைத்தும் எங்கிருந்து பிறக்கின்றன? எதனால் நிலைக்கின்றன? எப்படிப் போக்குவது? என ஆராய்கிறது, அதன் வழிமுறைகளை கோட்பாடாக முன்வைக்கிறது, அதை செயலூக்க, உலகை புரட்சிகரமாக மாற்ற போராடச் சொல்கிறது. பரிசீலித்துப்பார்த்தவர்கள் போராட முன்வருகிறார்கள். மூடத்தனங்களையும் சுரண்டல்தனங்களையும் மூட்டை கட்டி வைத்திருப்பவர்கள் முடங்கி நின்று எதிர்த்துப் பார்க்கிறார்கள். அவர்களை காலம் ஏளனம் செய்கிறது. நிற்க. முகம்மது குறித்து நீளமாக பாசுரம் வாசித்த உங்களால் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிந்ததா?
    உங்களின் அடுத்த திரிப்பு, நான் உங்களை பதில் கூறுமாறுதான் கேட்கிறேன். நான் விரும்பும் பதிலைக் கூறுங்கள் எனக் கேட்கவில்லை. நான் என்ன கேள்வி கேட்டிருக்கிறேனோ அதற்கான பதிலைக் கூறுங்கள், உங்கள் பதிலைக் கூறுங்கள். நான் என்ன கேட்கிறேன் என்பது உங்களுக்கு புரிந்துதான் இருக்கிறது, ஏனென்றால் மிகச்சரியாக நான் கேட்டிருப்பதைத் தவிர்க்கிறீர்களே. இப்படி நழுவி நழுவி கண்ணாமூச்சி விளையாடி நீங்கள் அடையப் போவது என்ன? உங்கள் எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள். ஏனென்றால் விவாதிக்க வந்தது எது சரி என்பதை முடிவு செய்வதற்கு காலம் கடத்துவதற்கல்ல. நான் என்ன கேட்டிருக்கிறேன் உணர்ந்து அதற்குப் பதில் தர வேண்டும். ஓரிரு வார்த்தைகளை வெட்டிப்பிடித்து பதில் என்ற பெயரில் எதையாவது கூறி வைப்பது விவாதமாகாது. கடைசி முறையாக உங்களிடம் விவாத நேர்மையை எதிர்பார்க்கிறேன்.
    செங்கொடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.