திங்கள், 27 டிசம்பர், 2010

, செங்கொடியின் பதில்கள்

  1. நண்பர் இப்ராஹிம்
    \\அவைகள் கதைகள் என்று அவதூறு பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் கதை என்பதற்கு ஆதாரம் தாருங்கள்// ஹதீஸ்கள் என்பவை கதைகள் தாம். முகம்மது இறந்து சற்றேறக்குறைய நூறிலிருந்து நூற்றைம்பது ஆண்டுகள் கழித்துத் தான் ஹதீஸ்களின் தேவை எழுகிறது. அதாவது மதக்கொள்கைகளே ஆக முதன்மையானவை எனும் நிலையிலிருந்து மாற்றம் பெற்று இஸ்லாமிய ஆட்சித்தலைமை சமூக, அறிவியல் ஆய்வுகளை முற்படுத்தத்தொடங்கிய வேளைகளின் போதாமையை நிறைவு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டவைகள் தான் ஹதீஸ்கள். ராஷிதீன் கலீபாக்களின் காலத்தில் தபரி போன்ற வரலாற்றாசிரியர்கள் எழுதிய முகம்மதின் வரலாறை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இஸ்லாமிய உலகம், அதைவிட காலத்தால் பிந்திய அப்பாஸிய கலீபக்கள் காலத்தில் தொகுக்கப்பட்ட ஹதீஸ்களை குரானுக்கு அடுத்த இடத்தில் ஏற்றுக்கொள்ளும் மர்மம் என்ன? இன்றைக்கு முதன்மையாக கருதப்படும் புஹாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஆறு நூல்களும் ஹதீஸ்களை தொகுக்கத் தொடங்கி நூறு ஆண்டுகள் கழிந்த பிறகு வந்தவை அதாவது முகம்மது இறந்து தோராயமாக இருநூற்றைம்பது ஆண்டுகள் கழிந்த பிறகு தொகுக்கப்பட்டவை. இதில் கவனிக்கப்படவேண்டிய அம்சம், முன்னர் தொகுக்கப்பட்டிருந்த ஹதீஸ்களில் எது சரியானது என அறிந்து கொள்ள முடியாத படிக்கு கலப்படமாகிவிட்டதால் அதை தெளித்தெடுக்க ஏற்பட்ட வழிமுறைகள் தான் அறிவிப்பாளர்களின் வரிசை மற்றும் குணநலன்கள். இதைத்தான் நீங்கள் லட்சத்திற்கும் அதிகமான மனிதர்களின் செயல்கள் ஆய்வு என விதந்தோதுகிறீர்கள். புஹாரி போன்றவர்களிலிருந்து முன்னோக்கி நூற்றைம்பது ஆண்டுகளுக்குள் அறிவித்தவர்கள் பற்றி மெய்யா பொய்யா என ஆராய்வதற்கு வாய்ப்பிருக்கிறது (அதுவும் குறைந்த விழுக்காடு) என்பதை ஓரளவு ஒப்புக்கொண்டாலும் அதற்கு முந்தைய நூறாண்டுகள் அதாவது முகம்மது இறந்த பிறகான முதல் நூறாண்டு அறிவிப்பாளர்களின் மெய்ப்பாடு குறித்து எந்த நம்பகத்தன்மையும் இல்லை. காரணம் ஹதீஸ்களை தொகுக்க வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டதே முகம்மது இறந்து நூற்றைம்பது ஆண்டுகள் கழித்துத்தான். அதுவரை செவி வழிக் கதைகள் தான். முகம்மது இறந்து சில ஆண்டுகளிலேயே குரான் வசனங்களில் கலப்படம் ஆகிவிட்டது என்பதால் எழுதி தொகுத்து பல பகுதிகளுக்கும் அனுப்பப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்ட நிலையில் நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து தொகுக்கத் தொடங்கிய ஹதீஸ்கள் அப்படியே உண்மையானவை என்பதை நீங்கள் தான் மெச்சிக்கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் ஷியா, சன்னி பிரிவுகளே தனித்தனியான ஹதீஸ் தொகுப்புகளை பயன்படுத்துகையில், அதுவே உண்மையானவை என்கையில் ஒரு பிரிவினரின் ஹதீஸ்களை உண்மை வரலாறு என்பதை எப்படி ஏற்க முடியும்? ஹதீஸ்களின் உள்ளடக்கத்தைக் கொண்டு அதை ஏற்பதா வேண்டாமா என ஆய்வு செய்து கொண்டிருக்கும் நிலையில், வெறும் அறிவிப்பாளர்களின் வாழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட ஹதீஸ்களை வரலாறு என்று எப்படி ஏற்பது? ஹதீஸ்களை அப்படியே வரலாறு என்று எடுத்துக்கொண்டால் குரானே ஐயத்திற்கிடமாகிவிடும். எடுத்துக்காட்டாக ஆய்ஷாவின் பால்குடி வசனம் பற்றிய ஹதீஸ். அதனால் தானே குரானோடு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என நீங்கள் தர்க்கித்து வருகிறீர்கள். பின்னர் எந்த அடிப்படையில் ஹதீஸ்கள் அப்படியே வரலாறு என எங்களை ஏற்கச்சொல்கிறீர்கள்? குரானின் சில வசனங்களை மக்காவில் சொன்னதா? மதீனாவில் சொன்னதா? என்பதைக்க்கூட ஹதீஸைக் கொண்டு பிரித்தறிய முடியாதிருக்கும் நிலையில் முகம்மதின் வாழ்வை திறந்த புத்தகமாக வைத்திருக்கிறது என்பதெல்லாம் உங்களது நம்பிக்கையாகத்தான் இருக்கமுடியுமேயல்லாது வரலாறாக இருக்கமுடியாது.
    இவ்வாறல்லாது, தொன்மைக்கால மனிதகுல ஆய்வுகள் அறிவியல் தன்மை வாய்ந்தவை, அவை செவி வழிக் கதைகளல்ல. தொன்மங்கள், தொல்லுயிர் எச்சங்கள், படிவுகள் போன்றவைகளை ஆராய்ந்து இன்றும் இருக்கும் பழங்குடியினரின் கலாச்சார மூலங்களை, அவைகளுக்கான வேர்களை தேடி ஒப்பிட்டு, காலந்தோறும் கிடைக்கும் புதுப்புது ஆதாரங்களைக் கொண்டு உறுதிப்படுத்தி எழுந்த முடிவுகளை கதைகளைப் போல் தள்ளிவிட முடியாது. ஏனென்றால் பழங்காலத்தைக் கண்டுணர இதைவிட சிறந்த ஆய்வுமுறை உலகில் இல்லை. அப்படியே உங்களால் இதை விட சிறந்த ஆய்வு முறையை உங்களால் கூற முடிந்தாலும் அதன் வழியிலும் பரிசீலனைக்கு உட்படுத்தி ஆய்வு செய்வதுதான் அறிவியல்.
    இவைகளை கற்கவோ பரிசீலனை செய்யவோ நீங்கள் முன்வராதிருக்கும் நிலையில் ஆதாரம் தா எனக் கேட்பது பதில் சொல்வதினின்றும் நழுவும் உத்தி என நான் குறிப்பிட்டால் அதையே நீங்களும் குறிப்பிட வேண்டும் என்பதற்காக \\ஆதாரம் கேட்டால் அதைத் தருவதுதான் சரி.ஆதாரம் தராமல் இருக்க இப்படி ஒரு உத்தியா?// என்றிருக்கிறீர்கள். ஆனால் ஒன்றை மறைத்துவிட்டீர்கள். அது \\நீங்கள் ஆதாரம் கேட்டபோது நூல்களின் பட்டியலையே என்னால் தந்திருக்க முடியும். ஆனால் அவற்றை நீங்கள் கம்யூனிச நூல்கள் என்று எளிதாக ஒதுக்கிவிடுவீர்கள் என்பதால்தான் பண்டைய சமூக வளர்ச்சி குறித்த எந்த ஆய்வாளரின் நூலையும் நீங்கள் படித்துப்பார்க்கலாம்// உங்களுக்கு தமிழ் தெரியும் தானே. இதன் பொருள் என்ன என்பது உங்களுக்கு விளங்கவில்லையா?
    சோசலிச ரஷ்யா குறித்தும் கம்யூனிச இயக்கங்கள் குறித்தும் நீங்கள் கேட்பது அறிந்து கொள்வதற்காகவோ, அதில் தவறிருக்கிறது என சுட்டிக்காட்டுவதோ உங்கள் நோக்கமல்ல என்பதை உங்கள் வார்த்தைகளை கொண்டே தொகுத்துக் காட்டியிருந்தேன். அதோடு மட்டுமல்லாது, \\சோவியத் ரஷ்யாவிலோ, மகஇக விலோ எத்தனை பெண் தலைவர்கள் ……. என்ன செய்யப் போகிறீர்கள்?// என்றும் கூடுதலாக கூறியிருந்தேன். ஆனால் நீங்களோ இவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. உங்கள் நோக்கம்; பதில் சொல்லியது போலும் இருக்க வேண்டும், கேட்ட கேள்வியிலிருந்து நழுவியும் இருக்க வேண்டும் என்பது தான். நேர்மையிருந்திருந்தால் உங்களால் \\ஆணாதிக்க ஒழிய அரும்பாடு படும் ….. தெரிந்து கொள்ள கேட்பது தவறா?// இப்படிக் கூறியிருக்க முடியாது.
    \\ஒரு குழந்தையும் உண்டு என்று நான் கேள்விபட்டது உண்மையா?// நீங்கள் கேள்விப்படுவதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இது போன்று மார்க்சிய ஆசான்கள் குறித்த அவதூறுகள் கொஞ்சமல்ல, ஏராளம், ஏராளம் உலவிக்கொண்டிருக்கின்றன உலகில். அத்தனைக்கும் ஆதாரபூர்வமான மறுப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது.
    குழந்தை வளர்ப்பு மையங்களில் எந்த பேதமுமின்றி நிர்வாகத்தில் பங்களித்த தோழரின் குழந்தைகளும், தொழிற்சாலையில் உற்பத்தியில் பங்களித்த தோழரின் குழந்தைகளும் ஒன்றாகவே வளர்ந்தனர். குழந்தைகளுக்கிடையில் எந்த பேதமும் காட்டப்படவுமில்லை, கற்பிக்கப்படவுமில்லை. மற்றப்படி பாலியல் தேவையை பொதுவுடமை அடிப்படையில் தீர்வு கண்டார்களா? தனியுடமை அடிப்படையில் தீர்வுகண்டார்களா? என்பதற்கு ஏற்கனவே நான் ஓரளவு பதிலளித்துள்ளேன், \\ஆணாதிக்க வடிவங்கள் தான். அவை நீக்கப்பட வேண்டியவைகள். ஆனால் எப்போது எப்படி என்பதில் தான் அதன் வீரியத் தன்மை தங்கியிருக்கிறது// இது குறித்து மேலதிக விபரங்களுக்கு கேள்வி பதில் பகுதியில் லிவிங் டுகதர் குறித்து நான் அளித்திருக்கும் பதிலைப் பார்வையிடுங்கள். மற்றப்படி, பண்ணை, வாக்கிங் மேரேஜ் எனத்தொடங்கி நீங்கள் வெளியிட்டிருப்பதெல்லாம் உங்கள் மனவிகாரங்களே. ஏனென்றால், கம்யூனிசம் கூறும் சமூக மாற்றம் என்பது நொடியில் மாற்றப்படும் ஒன்ற‌ல்ல. ஒவ்வொரு படித்தரங்களாக உயரும் அனைத்திற்கும் முன்நிபந்தனைகள் இருக்கின்றன. ‘குன்’ என்றதும் ஆகிவிடும் எனும் உங்கள் வெற்று நம்பிக்கையைப்போல் இதை நீங்கள் கருதிவிட வேண்டாம். மாறாக நீங்கள் கொண்டிருக்கும் கடவுள் நம்பிக்கைதான், மனிதனை சிந்தனையற்று மிருகங்களைப் போல், பொம்மையைப் போல் உலவ விட்டிருக்கிறது.
    \\ஒரு தீர்வுக்கும் முன்மாதிரியையோ, சோதனையோ பரிட்சித்து பார்ப்பதுதான் பொது நியதி.அதே போன்று கம்யுனிச தீர்வுக்கு காட்டுங்கள்//\\இஸ்லாத்தின் தீர்வைவிட சிறந்த தீர்வை நிகழும் உலகில் ஆதாரத்துடன் காட்டுங்கள்// கம்யூனிச தீர்வான தனியுடமையையும், ஆணாதிக்கத்தையும் நீக்குவது தான் பாலியல் குற்றங்களை முற்றிலும் களைவதற்கு சரியானது என்பதை அதன் அடிப்படையை வைத்தே புரிந்து கொள்ளலாம். பாலியல் குற்றங்களின் அடிப்படையாக இருப்பது தனியுடமை, ஆணாதிக்கச் சிந்தனைகளே. அவைகளை நீக்காதவரை பாலியல் குற்றங்களை தடுக்க முடியாது என்பதற்கு, இந்த அடிப்படையை புரிந்துகொள்ளாமல் ஏதேதோ காரணங்களைக் கூறி சட்டங்களைத் தீட்டிய அனைத்து சித்தாந்தங்களும், கொள்கைகளும், மத மூட நம்பிக்கைகளும் இன்றுவரை பாலியல் குற்றங்களை தடுக்க முடியாமல் தோல்வியடைந்திருப்பது ஒன்றே போதுமான ஆதாரமாகும். இங்கு தேவை அதை நேர்மையாக பரிசீலித்துப் பார்க்கும் திற‌ம் மட்டுமே. ஒற்றைக் கேள்வி, கம்யூனிசத்தின் தீர்வான இந்த அடிப்படைகள் தவறு என்றால், ஏன் இதுவரையான உலகில் பாலியல் குற்றங்களை தடுக்க முடியவில்லை? முடிந்தால் பதில் கூறிப் பாருங்கள். இல்லை, நீங்கள் நடத்திக் காட்டிய பின்னர் தான் நாங்கள் வருவோம், என்றால் அதற்கும் உங்களிடம் ஒற்றைக் கேள்வி, முகம்மது ஒரு புதிய சமூக ஒழுங்கை படைக்க விரும்பி தன் மதத்தை பிரச்சாரம் செய்த போது எந்த முன்மாதிரியைக் காட்டினார்? எந்த ஒரு புதிய கொள்கையுமே சமூகப் பிரச்சனைகளுக்கு தம் தீர்வை முன்வைக்கும் போது அதை கோட்பாடாகத்தான் முன்வைக்க முடியும். அதைத்தான் கம்யூனிசமும் செய்திருக்கிறது. உங்களால் அதை பரிசீலிக்க முடியுமா என்பதுதான் பிரச்சனை. பரிசீலித்துப் பார்த்து அதில் தவறு கூற முடிந்தால் கூறுங்கள், முடியவில்லை என்றால் ஏற்றுக் கொள்ள முன்வாருங்கள். மாறாக உங்களுக்கு கன்னித்தீவு கதை சொல்ல விருப்பம் என்றால், அது இந்த விவாதக் களத்தில் உங்களுக்கு எந்த விதத்திலும் பயன்படப்போவதில்லை.
    \\நாம் நிகழும் உலகை பற்றி தான் இங்கே பேசுகிறோம்,முன்பு இருந்ததை சொல்லுவதை விட இப்போது என்ன இல்லை என்று சொல்லுங்கள்// இதைத்தான் நான் பல இடங்களில் வைத்து விட்டேன். ஆணுக்கு இருக்கும் உரிமைகளுக்குச் சமமாக பெண்ணுக்கு இல்லை, மட்டுமல்லாது பெண்ணுக்கு வழங்கப்படும் சிற்சில சலுகைகள் கூட ஆணாதிக்கத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறேன். தங்களுடைய சம்பளப்பணத்தை ஆண்களாலும் சுதந்திரமாக செலவு செய்யமுடியவில்லை(அவ்வாறல்ல என்றாலும்) என்பது வேறு. நான் கேட்டது ஆண்கள் சுதந்திரமாக செலவு செய்வது போல் பெண்களால் செய்யமுடியுமா? என்பதுதான். ஒருவனுடைய சம்பளப்பணத்தை அவன் விருப்பப்படி செலவு செய்வதற்கு தனிப்பட்ட முறையில் சில நிர்ப்பந்தங்கள் இருக்கலாம். இது எல்லோருக்கும் பொருந்தக்கூடியதும் அல்ல. ஆனால் ஒரு பெண் தன் சம்பளப்பணத்தை தன்னுடைய விருப்பப்படி செலவு செய்ய முடியாததற்கு வேலை செய்யும் எல்லாப் பெண்களுக்கும் பொதுவில் இருக்கும் காரணம் ஆணாதிக்கம். ஒரு பெண்ணால், தந்தையை, சகோதரனை, கணவனை மீறி எதையும் செய்துவிட முடியாது. இந்த விவாதத்தின் தொடக்கத்திலிருந்தே என்னுடைய கேள்விகளுக்கு நேரடியான பதிலை விடுத்து கேள்வியை திரித்து பதில் சொல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறீர்கள் அதற்கு இதுவும் ஒரு அத்தாட்சி.
    \\மிருகங்களிலும் பெண் இனங்களை ஆணினம் துரத்திக் கொண்டு அலைகின்றன அப்படியெனின் அதவும் ஆணாதிக்கமா? என்று கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறீர்கள்// இதில் நான் பதில் சொல்ல மறுப்பதாக கூறியுள்ளீர்கள். தவறு, அந்த பதிவில் நான் \\தனித்தனியே விளக்க வேண்டுமென்றாலும் நான் ஆயத்தமாக இருக்கிறேன்// என்று குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் என்றால் விரிவாக விளக்கியிருப்பேன். அதனாலென்ன இப்போது கூறுகிறேன். மிருங்களின் பாலியல் உறவை ஆணாதிக்கம் என்று தனித்து கூறமுடியாது. மனித உறவுகளை அப்படி அழைப்பதற்கான முதன்மையான காரணம் மனிதன் உடலுறவு என்பதை உடலியல் தேவையின் அடிப்படையில் என்பதலிருந்து மாற்றி மனவியல் அடிப்படையில் கொண்டுவந்து விட்டான். மனிதனின் உறவில் உடல்தேவையை விட மனத்தேவையே அதிக பங்கு வகிக்கிறது. ஆனால் மிருகங்களில் இந்த நிலை இல்லை, உறவுக்கான உடலியல் தேவை இல்லாத வரை எந்த ஆண்விலங்கும் பெண்விலங்கை அணுகாது, அருகருகே இருந்தாலும் கூட. மனிதனோ மனைவியுடன் கலந்த அடுத்த சில நிமிடங்களிலேயே வேறொரு பெண்ணுடன் வாய்ப்புக்கிடைத்தால் அதை தவறவிடமாட்டான். ஏனென்றால் அவனுக்கு உடலியல் தேவையை விட மனவியல் தேவையே முதன்மையாக இருக்கிறது. அடுத்து மார்கழி மாத நாய்க்கூட்டத்தை பார்த்து விட்டு அது ஆணாதிக்கமா என்கிறீர்கள். இதை விலங்களின் பொதுக்குணமாக கூறவியலாது. காடுகளில் சுதந்திரமாக உலவும் எந்த மிருகமும் இப்படி ஒன்றின் பின்னே பத்து விரட்டுவதில்லை. இங்கு வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களில் பெரும்பாலும் ஆண் நாய்களே, பெண்நாய்களை அதிகம் வளர்ப்பதில்லை. இதனால் ஏற்படும் பற்றாக்குறையினாலேயே ஒன்றை பல விரட்டுகின்றன. இதை ஆணாதிக்கம் என்றும் கூற முடியாது, இதைக்கொண்டு ஒப்பீட்டு மனிதனின் பாலியலலைதலை ஆணாதிக்கமல்ல என தள்ளவும் முடியாது. \\பெண் களுக்கென்று இயற்கையான சில குணங்கள் உண்டு என்பது போல் ஆண்களுக்கும் இயற்கையான குணங்களில் காம வெறியுனர்வும் ஒன்று// இதில் நீங்கள் என்ன கூறவருகிறீர்கள்? காம உணர்வு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது தான். ஆனால் ஆண் வெளிப்படுத்துவது போல் பெண்ணால் வெளிப்படுத்த முடியாது. அப்படி வெளிப்படுத்துவது ஒழுக்கமல்ல என்றுதான் கற்புநெறி கொண்டு பெண்களை அடக்கி வைத்திருக்கின்றனர். அதே நேரம் அதை ஆண் வெளிப்படுத்தினால் அது வீரமாக கருதப்படும். இது ஆணாதிக்கத்தின் விளைவேயன்றி ஆண்பெண் இயற்கையல்ல.
    நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் முறையாக நான் பதிலளித்து வருகிறேன். ஆனால் அவைகளைக் கவனிக்காமல், பொருட்படுத்தாமல், அவைகளிலிருக்கும் உள்ளீடை புரிந்துகொள்ள முயலாமல், தொடர்ந்து வெறொன்றுக்கு நழுவி வருகிறீர்கள். பல முறை இவைகளை சுட்டிக்காட்டியும் நீங்கள் உங்கள் வழமையை தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள். தவிரவும் நான் எழுப்பும் கேள்விகளையும் நீங்கள் நீங்கள் வேறொன்றாக திரித்து வருகிறீர்கள். அல்லது கூறப்பட்டிருக்கும் பதிலின் ஏதாவது ஒரு வாக்கியத்தை எடுத்துக்கொண்டு அதற்கு எதையாவது பதிலாகக் கூறிவிட்டு ஒட்டுமொத்தமாக நான் கூறவந்திருக்கும் கருத்தை புறக்கணித்து விடுகிறீர்கள். இவை விவாதத்தின் நோக்கத்தையே பாழடிக்கக் கூடியதாகும் என்பதை உணருங்கள்.
    இதுவரை, ஆணாதிக்கமும் தனியுடமையும் பாலியல் குற்றங்களுக்கான அடிப்படையாக இருக்கிறது என்பதை தெளிவாக விளக்கியுள்ளேன். இதை நீங்கள் வலிமையுடன் மாற்றுக்கருத்துகளைக்க்கூறி உங்களால் மறுக்க முடியவில்லை. அதேநேரம் மேலோட்டமாக நீங்கள் கூறும் நடப்பு வாதங்களை நான் தெளிவாக மறுத்திருக்கிறேன். ஆணாதிக்கமே இந்த உலகில் இல்லை என வாதிடுகிறீர்கள். இதை மறுத்து உலகில் ஆணாதிக்கமே நிலவுகிறது என்பதை எடுத்துக்கூறினால் அதை மறுக்க முடியாது இஸ்லாத்தில் இல்லை என நழுவுகிறீர்கள். இப்போதும் கூட \\பெண்கள் தகப்பன் இறந்தால் கொள்ளி வைக்க முடியுமா?கணவன் இறந்தால் மல்லி வைக்க முடியுமா?என்பதெல்லாம் என் முன் உள்ள கேள்விகள் அல்ல// என கூறியுள்ளீர்கள். பின் இது யார் முன் உள்ள கேள்வி? ஆணாதிக்கம் இந்த உலகில் இல்லை என கூறுவது நீங்கள் தானே, அப்படியென்றால் இது உங்கள் முன் உள்ள கேள்விதான். இல்லை என்றால் தெளிவாக கூறிவிடுங்கள். உலகில் ஆணாதிக்கம் இருக்கிறது ஆனால் இஸ்லாத்தில் இல்லை என்பதுதான் என் நிலை என்று. இஸ்லாத்தில் இருக்கும் ஆணாதிக்கத்தை நான் உங்கள் கண் முன்னே காட்டுகிறேன். ஆனால் இதைச் சொன்னால் அது அதைச்சொன்னால் இது என்று நழுவாதீர்கள். கடந்த எனது பதிவில் இருந்த பலவற்றிற்கு பதில் கூறாது நகர்ந்து விட்டீர்கள். கேட்கப்படும் கேள்விகளும், அளிக்கப்படும் பதில்களும் உங்களின் பரிசீலனைக்காக அதை நீங்கள் சுலபமாக நீங்கள் நழுவ விட்டுவிட முடியாது. ஒன்று மறுக்க வேண்டும் அல்லது ஒப்புக்கொள்ள வேண்டும். இனியாகிலும் இதை நீங்கள் கவனத்தில் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
    தொடர்ந்து இஸ்லாத்தில் மந்திரம் இல்லை, வாட்ச்மேன் வாட்ச்உமன் என்றெல்லாம் கூறியுள்ளீர்கள். இஸ்லாமிய திருமணத்தில் கூறப்படும் நிக்காஹாஹ கஃபில்து எனத்தொடங்குவதை ஏன் மந்திரம் என அழைக்கக்கூடாது? வாட்ச்உமன்கள் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கவில்லை என்பதால் அது இல்லை என்றாகிவிடாது. இஸ்லாத்தில் யாரிடத்தில் கொடுத்தால் சரியாக இருக்கும் என்று ஆண்களுக்கு கொடுக்கப்படுபவை எப்படி ஆணாதிக்கமாக இருக்கிறது என்பதை தேவைப்பட்டால் விளக்குகிறேன்.
    அடுத்து முக்கியமான விசயத்திற்கு நகர்வோம், \\கடைசி நாள் வரை குற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் என்று இஸ்லாம் உண்மை நிலையை சொல்லுகிறது,அதற்க்கான தண்டனைகளை சொல்லுகிறது// ஆக கடைசி வரை இஸ்லாத்தால் பாலியல் குற்றங்களை ஒழிக்க முடியாது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். நன்றி. இங்கு பாலியல் குற்றங்களுக்கு எது சரியான தீர்வு எனும் இந்த தொடக்க விவாதத்தில்; இஸ்லாத்தால் கடைசி வரை தீர்வு காண முடியாது மாறாக தண்டனை பயம்காட்டி ஓரளவு குறைக்க மட்டுமே முடியும் என ஏற்றுக்கொண்டதன் மூலம் ஒரு பகுதி முடிவுக்கு வருகிறது. இஸ்லாமா? கம்யூனிசமா? என்பதில் இஸ்லாத்தால் முடியாது என்பது தெளிவாகிவிட்டது. கம்யூனிசத்தால் எப்படி முடியும் என்பது மட்டுமே மிச்சமிருக்கிறது. அதுவும் ஆணாதிக்கம், தனியுடமை குறித்த என்னுடைய கேள்விகளுக்கு நேர்மையாக நீங்கள் பதில் கூறும் போது தெளிவாகிவிடும்.
    செங்கொடி
    பின்குறிப்பு: உமர் குறித்து நான் குறிப்பிட்ட ஹதீஸுக்கு ஆதாரத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் அது குறித்து விரிவாக பதிவு செய்கிறேன்.