புதன், 9 பிப்ரவரி, 2011


  1. நன்றி நண்பர் இப்ராஹிம்,
    \\ஆணாதிக்கத்தை, தனியுடமையை நீக்காமல் பாலியல் குற்றங்களை ஒழித்துவிட முடியுமா? என்பதிலோ ஆணாதிக்கம் தனியுடமையையை நீக்கிய பிறகும் பாலியல் குற்றங்கள் இருக்குமா என்பதிலோ உங்களுக்கு எவ்வளவு கேள்விகள் இருந்தாலும் என்னென்ன ஐயங்கள் இருந்தாலும் பதில் கூற, தீர்த்துவைக்க ஆயத்தமாக இருக்கிறேன். ஏனென்றால் விவாதம் அது குறித்துத்தான்//
    \\உங்கள் கேள்விகள் எதற்கும் நான் பதில் கூற மறுத்ததில்லை, விலகி ஓடவில்லை. இந்த விவாதத்தின் பாற்பட்டது இப்போது, அப்பாற்பட்டது பின்னர் என்று மட்டுமே கூறுகிறேன். அதில் தவறொன்றுமில்லை. சரி, பின்னர் நான் கூறவிருக்கும் பதில்களை இப்போது ஏன் கூறக்கூடாது? காரணம், உங்கள் போக்கு. பாலியல் குற்றங்களுக்கு எது சரியான தீர்வைக்கொண்டிருக்கிறது எனும் இந்த விவாதத்திலிருந்து நீங்கள் விலகிச் செல்ல விரும்புகிறீர்கள். சுள்ளென்ற வெயிலைப்போல் இந்த விவாதம் உங்கள் முதுகில் உறைக்கிறது. அதனால் அங்கும் இங்கும் இழுத்துச் சென்று தப்பிக்க விரும்புகிறீர்கள். எனவே தான் நான் இந்த விவாதத்திற்கு அப்பாற்பட்டவைகளை விலக்கி, இந்த விவாதத்தை முழுமை செய்யும் நோக்கில் வேறு எதற்கும் இப்போது பதில் கூற மறுக்கிறேன்//
    தமிழில் எழுதப்பட்டிருக்கும் இந்த எளிய கூற்றுகளை புரிந்து கொள்ளாததுபோல் நடிக்கும் உங்களுடன் விவாதிப்பதன் பயன் என்ன? உங்களின் கடைசி பதிவு உள்ளிட்டு தொடக்கத்திலிருந்து எதையும் உள்வாங்கி பதில் கூறுவது உங்களின் பழக்கமாக‌ இருக்கவில்லை. இதை பலமுறை உங்களுக்கு சுட்டிக்காட்டியிருக்கிறேன். விவாதத்திற்கு வரும் ஒருவர் விவாதத்தின் இரண்டு பக்கங்களை பற்றியும் அறிந்திருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒரு தகுதி. இஸ்லாமா? கம்யூனிசமா? எனும் இந்த விவாதத்தில், இஸ்லாம் கம்யூனிசம் என்ற இரண்டையும் நான் அறிந்திருக்கிறேன், விவாதிக்கிறேன். ஆனால் மறுமுனையில் கம்யூனிசம் குறித்து எதையுமே அறிந்துகொள்ளாமல் எந்த அடிப்படையில் விவாதிக்க வந்தீர்கள்? உங்கள் கையில் இருப்பது நெய்யா, விளக்கெண்ணெயா என்பதையும் நான் அறிந்திருக்கிறேன், என்கையில் இருப்பதையும் நான் அறிந்திருக்கிறேன். உங்கள் கையில் இருப்பது இன்னின்ன விதங்களில் விளக்கெண்ணெயாக இருக்கிறது என்று நான் கூறினால், என் கையில் இருப்பது இன்னின்ன விதங்களில் விளக்கெண்ணெயாக இருக்கிறது என்று நீங்கள் கூறவேண்டும், அதன் பெயர் தான் விவாதம். என் கையில் என்ன இருக்கிறது என்பது குறித்து எந்த அறிவும் இல்லாமல், அது விளக்கெண்ணெய் தான் என எந்த அடிப்படையில் நீங்கள் கூறமுடியும்? எனவே, இஸ்லாமே சிறந்தது என நீங்கள் கூறவேண்டுமென்றால் கம்யூனிசத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். முதலில் அதைப்பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொண்டு வாருங்கள், பின்னர் விவாதிக்கலாம்.
    தனியுடமையையும், ஆணாதிக்கத்தையும் நீக்காதவரை பாலியல் குற்றங்களை சமூகத்திலிருந்து அகற்றமுடியாது என்று ஒற்றை வாக்கியத்தில் நான் முடித்துக் கொள்ளவில்லை. அந்த இரண்டைத்தவிர பாலியல் குற்றங்களுக்கு வேறு காரணங்கள் இல்லை என்பதை உங்கள் வாதங்களைக் கொண்டே காட்டியிருக்கிறேன். இந்த இரண்டையும் தக்கவைத்துக்கொண்டு என்ன செய்தாலும் பாலியல் குற்றங்களை நீக்க முடியாது என்பதை நடப்புகளைக் கொண்டு எடுத்துக்காட்டியிருக்கிறேன். அவை இரண்டும் இல்லாத சமூகத்தில் பாலியல் குற்றங்கள் நிகழாது என்பதையும் பண்டைய வரலாற்றாதாரங்களையும் கூறியிருந்தேன். இதற்கு ஆதாரம் கேட்ட உங்களுக்கு, எந்த ஆய்வாளரின் நூலையும் நீங்கள் படித்துப்பார்க்கலாம் என் கூறியிருந்தேன், அப்படியான தேடலோ, முயற்சியோ உங்களிடம் கிஞ்சிற்றும் இல்லை. நீங்கள் படித்ததைக் கூறுங்கள் என்றீர்கள், பல நூல்களில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டேன். அதையும்கூட படித்துப்பார்க்க உங்களால் முடியவில்லை, நான்கு பக்கங்களைத் திருப்பிவிட்டு தீர்ப்பெழுதினீர்கள், ஆனாலும் ஆதாரமென்ன என கேட்கும் வக்கணையில் குறைவில்லை. இதை முன்னமே நான் குறிப்பிட்டிருந்தேன், ஆதாரமென்ன என நீங்கள் கேட்பதெல்லாம் அறிதலுக்காகவல்ல, நழுவலுக்காக என்று. முன்பும் ஒருவர் இப்படி வீராவேசமாக ஆதாரம் கேட்டார். கொடுத்தால், பின்னர் கேட்கிறார், “அதில் உங்கள் நண்பனின் தாயார் விபச்சாரி” என எழுதியிருந்தால் அதை ஏற்பீர்களா என்று.
    எனவே, இந்த விவாதத்திற்கு உட்பட்டு என்ன கேட்கவேண்டுமோ அதைக் கேளுங்கள். அல்லாதபட்சத்தில், இந்த விவாதத்தை முடித்துவிட்டு எதை நீங்கள் கேட்க விரும்புகிறீர்களோ அதை தலைப்பாக தேர்ந்தெடுத்த‌ பின்னர் கேளுங்கள். உங்களைப் போல் நழுவலோ, தப்பித்தலோ, கண்டுகொள்ளாமல் கடந்து போதலோ என்னிடம் இருக்காது. இந்த உறுதிமொழியை உங்களால் தரமுடியுமா?
    இந்த விவாதத்தை தொடர்வதற்காக உங்களுக்கு நான் அளிக்கும் கடைசி வாய்ப்பு இது. எதிர்வரும் வியாழனுக்குள்(10/02/2011) இந்த விவாதத்திற்கான நேரிய பதிலை நீங்கள் அளிக்க வேண்டும். மாறாக உங்கள் வழமையான முறையையே மீண்டும் தொடர்வீர்களென்றால், இதுவே நான் உங்களுக்கு கூறும் கடைசி பதில்.
    செங்கொடி

செங்கொடி    
\///ஆணாதிக்கத்தை, தனியுடமையை நீக்காமல் பாலியல் குற்றங்களை ஒழித்துவிட முடியுமா? என்பதிலோ ஆணாதிக்கம் தனியுடமையையை நீக்கிய பிறகும் பாலியல் குற்றங்கள் இருக்குமா என்பதிலோ உங்களுக்கு எவ்வளவு கேள்விகள் இருந்தாலும் என்னென்ன ஐயங்கள் இருந்தாலும் பதில் கூற, தீர்த்துவைக்க ஆயத்தமாக இருக்கிறேன். ஏனென்றால் விவாதம் அது குறித்துத்தான்///
ஆணாதிக்கத்தினால் பாலியல்  குற்றங்கள் நடை பெறவில்லை என்றும் காம ஆதிக்கத்தினால் தான் குற்றங்கள் நடை பெறுகின்றன என்ற எனது வாதத்தை சரியான ஆதாரங்களால் மறுக்க முடிய வில்லை.
அடுத்து   பொதுவுடைமை தாம்பத்திய வாழ்க்கை [பண்ணை வாழ்க்கை] என்பது இனி நடை முறை சாத்தியம் அன்று.பண்டைய காலத்தில் இலை தழைகளை மனிதன் உண்டு வந்தான் ,ஒரு நோயும் இல்லை.ஆதலின் இனி அதுபோன்று உணவை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் என்றால் எந்த மனிதனும் அதற்க்கு உடன்பட மாட்டான். பிறகு எப்படி அந்த காலம் போல் பெண் தலைமயிலான வாழ்க்கையை கொண்டு வரமுடியும்.அன்று நடந்தது ஒரு இயற்கையே .மேலும் பாலியல் குற்றங்கள் அப்போது நடை பெறவில்லை என்றே கூறியுள்ளீர்கள்.அதற்க்கான ஆதாரம் கேட்டால் நழுவி செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளீர்கள். உங்கள் கொள்கைகளை உங்களது அமைப்புகள் மூலம் நடத்த்தி காட்டுங்கள் என்றால் தனி ஒரு நாட்டாலே முடியாது உலகம் முழுவதும் அமல் படுத்தினாலே நடைமுறை சாத்தியம் என்பதும் உங்கள் கூற்று. இந்த கொள்கை அல்ல எந்த எளிமையான கொள்கையும் கூட உலகம் முழுவதும் நடை முறைபடுத்துவது சாத்தியமா?பதில் சொல்லுங்கள் 
சமூக சூழ்நிலைக்கேற்ப சட்டம் வகுப்பீர்கள் என்றால் இப்போதைய இந்திய சூழ்நிலைக்கேற்ப எப்படி சட்டம் வகுப்பீர்கள்?
சட்டத்தால்பாலியல் குற்றங்களை நடைமுறை படுத்த முடியாது என்று ஒரு புறம் வாதத்தை வைத்துக் கொண்டு ,இன்னொரு புறம் சமூக சூழ்நிலைகேற்ப சட்டம் எனவும் புரட்டியுள்ளீர்.எது சரி?
விவாதம் இது குறித்துத்தான் என்றால் இவற்றுக்கு ஏன் பதில் தரவில்லை.
"நீக்கிய பிறகு " என்பதல்ல கேள்வி ;நீக்க முடியுமா?என்பதே கேள்வி 


 ///சுள்ளென்ற வெயிலைப்போல் இந்த விவாதம் உங்கள் முதுகில் உறைக்கிறது./// 
இதுவரை உங்கள் கொள்கை நடைமுறை படுத்த இயலாத சினிமா கதையாகத்தான் வருகிறது .உங்கள் கூற்றும் அவ்வாறே வழி மொழிகிறது பிறகு எப்படி எனக்கு சுள்ளென்று உறைக்கும்? 


கம்யுனிச பாதையான சோசலிசமே படுத்துவிட்டது கம்யுனிசம் எப்படி சாத்தியம் ?என்றால் அதாவது ஐந்தாவது வகுப்பே தேறவில்லை எப்படி ப்ளஸ் டூவில் 1200 /1200 பெற முடியும் என கேட்டால் பதிலில்லை ,மரக்கட்டை யார்?
///என் கையில் என்ன இருக்கிறது என்பது குறித்து எந்த அறிவும் இல்லாமல், அது விளக்கெண்ணெய் தான் என எந்த அடிப்படையில் நீங்கள் கூறமுடியும்///
நெய் மணக்கும் விளகெண்ணை நாறும் , பிரியாணிக்கு நெய் தேவை ,என்னிடம் அது இருக்கிறது ,இல்லை அது விளகெண்ணை என்று சொன்னால் அதை ஆட்சேபிக்க எனக்கு உரிமை உண்டு .என் கையில் நெய் இருக்கும்போது பிறர் கையில் இருக்கும் பொருள் நெய்யா ?விளகெண்ணையா ? என்று நான் ஏன் ஆராய வேண்டும்? எனக்கு மேலோட்டமாக பார்க்கும்போது கம்யுனிசம் விளக்கெண்ணை யாக தெரிகிறது அதை நீங்கள் மறுத்து விவாதத்திற்கு அழைக்கும்போது நீவிராகே வழிய வந்தால் உங்கள் கையில் இருப்பது விளக்கெண்ணை இல்லை என்பதை நிருபிப்பது உமது வேலை. நான் அதை வாங்கி நுகர வேண்டிய அவசியமில்லை .மேலோட்டமான கேள்விகளுக்கே பதில் இல்லை எனும்போது இன்னும் நான் படித்து கேட்டால் ..... படித்து கேட்டாலும் ,முழுவதும் படித்து கேளுங்கள் என்பீர்கள் .இந்த ஒரு நூல் மட்டும் படித்தால் போதுமா?அதற்க்கான விளக்கம் என்று இன்னும் சில நூல்களை படியுங்கள் என்பீர்கள். .படித்த நூலில் ஆரம்பமே கோணல் என்றால் பதிலைக் காணோம் . 
உங்கள் விளக்கெண்ணையை நீங்களாகவே முன்வைத்து பகுத்தாய்ந்து அதில் கலப்படமற்ற விளக்கெண்ணை என்று நிருபியுங்கள் .விளக்கெண்ணை  ஓரிரு நோய்களுக்கு மருந்தாகும் .அது நோயுள்ள உங்களுக்கு அதுவே சரியாக இருக்கும் ஆரோக்கியமாக உள்ள நாங்கள் எங்களிடம் உள்ள நெய்யை வைத்து பிரியாணி சமைத்து கொள்கிறோம்.
விருப்பம் எனின் பதில் சொல்லுங்கள் இல்லையெனில் உங்கள் சோசலிசம் போல் நீங்களும் ..... 


///அவை இரண்டும் இல்லாத சமூகத்தில் பாலியல் குற்றங்கள் நிகழாது என்பதையும் பண்டைய வரலாற்றாதாரங்களையும் கூறியிருந்தேன். இதற்கு ஆதாரம் கேட்ட உங்களுக்கு, எந்த ஆய்வாளரின் நூலையும் நீங்கள் படித்துப்பார்க்கலாம் என் கூறியிருந்தேன்///
பண்டைய வரலாற்று ஆதாரங்களை கூறியிருந்தால் நான் ஏன் ஆதாரம் கேட்க போகிறேன்?,
பண்டைய கால வாழ்க்கை யில் பாலியல் குற்றங்கள் நடை பெறவில்லை என்பதற்கான ஆதாரங்கள் தாருங்கள்,
பொதுவுடைமை தாம்பத்திய வாழ்க்கை பற்றி விளக்கம் சொல்லுங்கள்.
நீங்கள் விளக்கம் அளித்த லிவ்விங் டுகெதர் தனி நபர் அளவில் நடை முறை படுத்த கூடியது தானே நீங்கள் ஏன் அவ்வாறு வாழ வில்லை?
குழந்தைகளை அரசு தொட்டிலில் விடுவதை அப்புறம் பார்ப்போம் .முன்மாதிரியாக நீங்கள் உங்களது திருமண வாழ்க்கையை உதறிவிட்டு லிவிங் டூகேதராக வாழுங்கள்.உங்களை பார்த்து ஒவ்வொரு சவடால் தோழர்களும் வாழுங்கள் அது அவ்வாறே உலகம் முழுவதும் பரவட்டுமே அதற்கப்புறம் தொட்டில் குழந்தை திட்டத்தை ஜெயலலிதா பிரதமராகி நாடு முழுவதும் ,பின்னர் உலகம் முழுவதும் வந்துவிடும் 

 ////ஒப்பீட்டளவில் திருமண முறையை விட சேர்ந்து வாழ்தல் முறை முற்போக்கானதுதான்////
இந்த தீர்வு இஸ்லாமிய சட்டப்படி பாலியல் குற்றம் 
.////௧) ஆணாதிக்கம் நீக்கப்பட்டு ஆணும் பெண்ணும் சமம் எனும் நிலை ஏற்பட்டிருக்க வேண்டும், ௨) குழந்தைகளை வளர்ப்பதும், பராமரிப்பதும் பெற்றோரின் கடமை என்பதிலிருந்து விடுபட்டு அரசின் கடமை என்றாக வேண்டும். இந்த இரண்டும் முதலாளித்துவ அமைப்பான இன்றைய உலகில் சாத்தியமில்லை என்பதால் லிவிங் டுகதர் எனும் சேர்ந்து வாழ்தல் ஏற்கத்தக்கதல்ல /// {லிவ்விங் டுகெதர் பற்றிய கேள்விபதில் பகுதியில் }
உங்களது கம்யுனிச தீர்வு இன்றைய உலகில் சாத்தியமில்லை என்பது உங்கள் கூற்று .நிகழும் உலகில் நிலவும் பாலியல் குற்றங்களுக்கு கம்யுனிச தீர்வு இப்போது சாத்திய படாது என்று நீங்களே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். நிகழும் உலகில் நிலவும் பாலியல் குற்றங்களை மிகுந்த அளவில் இஸ்லாமிய சட்டங்களால் மட்டுமே  குறைக்க முடியும் என்பது பெய்சல்காலத்து  சவூதி அரசை  முன்னுதாரணமாக கொண்டு இன்னும் சீரிய முறையில் செயல் படுத்தினால் லட்சத்திற்கு ஒன்றாக பாலியல் குற்றங்கள் குறைந்துவிடும் .புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே 



நண்பர் இப்ராஹிம்,

இப்போதும் உங்கள் போக்கில் மாற்ற‌ம் இல்லை என்றாலும், சற்று முயற்சியெடுத்து ஒரு தொகுப்பாக உங்கள் வாதத்தை தந்திருக்கிறீர்கள் என்பதால் பதில் தர எண்ணுகிறேன்.

காம ஆதிக்கம் என்ற புதுப்பெயெர் சூட்டி நீங்கள் அளித்த காம உணர்வு, மிருகக் காமம் உள்ளிட்ட அனைத்தையும் தகுந்த முறையில் மறுத்து விளக்கியிருக்கிறேன். நீங்கள் இல்லை எனக் கருதுவீர்களாயின், காம ஆதிக்கம் தான் பாலியல் குற்றங்களுக்கு காரணம் என நீங்கள் எடுத்துவைத்த வாதங்களை உங்கள் கடந்த பதிவுகளிலிருந்து தேதியோடு மேற்கோள் காட்டுங்கள். நானும் உங்களுக்கு கூறியிருக்கும் மறுப்புகளை மறு விளக்கங்களை தேதியோடு எடுத்துக்காட்டுகிறேன். ஏனென்றால் வட்டத்திற்குள் சுற்றுவது போல மீண்டும் மீண்டும் கூறியது கூறலை தடுக்கலாமல்லவா? காம ஆதிக்கம் தான் பாலியல் குற்றங்களுக்கு காரணம் என இன்னும் நீங்கள் கருதினால் மேலதிகமாக ஒரு கேள்வி. காமம் என்றால் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. ஆணுக்கு மட்டுமே காமம் உரியது என்று நீங்கள் கருதமாட்டீர்கள் என நினைக்கிறேன். அப்படிக் கருதினால் அதன் பெயெர்தான் ஆணாதிக்கம் எனப்து நான் கூறாமலேயே உங்களுக்கு விளங்கும். இருபாலருக்கும் பொதுவாக இருக்கும் காமத்தின் ஆதிக்கத்தினால் தான் பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன என்றால் நடக்கும் பாலியல் குற்றங்களில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமாக ஆண் பெண்ணின் மீது செய்யும் பாலியல் குற்றமாகவே இருப்பது ஏன்? இந்தக் கேள்விக்கு பதில் கூறிப்பாருங்கள், பிறகு நான் விளக்கமளிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் ஆணாதிக்கம் தான் பாலியல் குற்றங்களுக்கு காரணம் என்பது உங்களுக்கு விளங்கும்.

\\அடுத்து பொதுவுடைமை தாம்பத்திய வாழ்க்கை ………. அன்று நடந்தது ஒரு இயற்கையே// இதில் நீங்கள் கூறியிருப்பதென்ன? பண்டைய காலம் போல் இலைதழைகளை தின்று உடுத்திக்கொண்டு பழைய வாழ்க்கைக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என நான் எங்கு கூறியிருக்கிறேன். எடுத்துக்காட்ட முடியுமா? பெண் தலைமையிலான சமுதாயம் திரும்ப ஏற்படுத்தப்படவேண்டும் என எங்கு நான் கூறியிருக்கிறேன். மேற்கோள் காட்ட முடியுமா? நீங்கள் செய்யும் கற்பனைகளெல்லாம் எந்த இலக்கை நோக்கி செய்யப்படுகின்றன, என்பதை மீண்டும் மீண்டும் நான் கூறிக்கொண்டிருக்க விரும்பவில்லை. நான் கூறியிருப்பதெல்லாம் மனிதன் எந்த நிலையிலிருந்து மாறி வந்திருக்கிறான் என்பதைத்தான். அதை அடிப்படையாகக் கொண்டு எந்த நிலைக்கு மனிதன் மாறிச் செல்ல வேண்டும் என்பதைத்தான். ஆணாதிக்கம், தனியுடமையை நீங்கிய உலகிறகு மனிதன் மாறும் போதுதான் நாம் விரும்பும் நிலை வரும் என்பதைத்தான். ஆக நான் கூறியிருப்பதை விட்டுவிட்டு கூறாததை நீங்களாகவே கற்பனை செய்து என்மீது திணிக்க முற்படுகிறீர்கள். தொடர்ந்து ஆதாரம் கேட்டால் நழுவுவதாக கூறியிருக்கிறீர்கள். தவறு. தரப்பட்ட ஆதாரங்களை படித்துப்பார்க்கும் குறைந்தபட்ச ஆர்வமோ தகுதியோ கூட உங்களுக்கு இல்லை. இது குறித்து கடந்த ஜனவரி 8 லேயே விரிவான பதிலை அளித்திருக்கிறேன். இதோ, \\தொடக்க கால மனிதகுல ஆய்வுகள் ……. உருவானது என்பதே யூகம் தான்// ஆம். பல நூல்களைப் படிக்க வேண்டியதிருக்கும், தொல்லுயிர் எச்சங்கள் பற்றி அறிய வேண்டியதிருக்கும், பழங்கால ஆய்வுகள் நடந்த விதம் குறித்த புரிதல்களை பெறவேண்டியதிருக்கும். இவை எதுவுமே இல்லாமல் வாழைப்பழத்தை நேரடியாக வயிற்றில் போட்டுவிடவேண்டும் என எதிர்பார்ப்பது முறையல்லவே. இது ஒருபுறமிருக்கட்டும், பழங்கால வாழ்முறை பற்றிய உங்கள் புரிதல் என்ன? உங்கள் கருத்து என்ன? அவற்றை நீங்கள் கூறலாமே. வெறுமனே நான் கூறுவதிலிருந்து சிலவற்றை எடுத்து பதில் கூறுவதோடு முடித்துவிடாமல், உங்கள் கருத்தையும் கூறினால் தானே வாதத்திற்கு முழுமையாகும்.

சாத்தியமா? சாத்தியமில்லையா? என்றொரு கேள்வியையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்கள். ஆணாதிக்கத்தையும், தனியுடமையையும் நீக்கமுடியும். தற்போது உலகிலுள்ள மனிதர்கள் அவர்கள் எந்தக் கொள்கையைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் தனியுடமையை ஆராதிப்பவர்களாகவே இருந்துவருகிறார்கள். இப்படி தனியுடைமையை ஆராதிப்பவர்கள் கூட தங்களுக்கு வேண்டியவர்கள் எனும்போது அதில் விலக்களிக்க முன்வருகிறார்கள். ஒரு குடும்பமாக பொதுவுடமையை பேணுகிறார்கள். தனியுடமை என்பது நேரடியாக வாரிசு என்ற அடிப்படையில் மட்டும் நில்லாது, சொத்து விரியும்போது, அனுபவரீதியாக இன்னும் அதிகம் பேர் அதனால் பலனடைவதை அனுமதிக்கிறார்கள். ஆக இங்கு தனியுடமை என்பது குறைந்த அளவிலேனும் பொதுவுடமையை நோக்கிப் ப‌யணிக்கிறது. இதை விரிவடையச் செய்யமுடியும். அதே போல் ஆணாதிக்கம் முற்றிய மனிதனாக இருந்தாலும் தனக்கு நெருக்கமான, உறவின் முறையுள்ள, அறிமுகமான பெண்கள் எனும்போது அங்கு ஆணாதிக்கம் அனீயப் பெண்கள் போல வீரியத்துடன் செயல்படுவதில்லை. ஆக, ஆணாதிக்கமும் தனியுடமையும் நிறைந்த மனிதர்களிடமும் அதற்கு எதிரான தன்மைகளும் இன்னும் மிச்சமிருக்கிறது. எனவே ஒருகாலத்தில் இல்லாதிருந்து பின் மனிதனை ஆக்கிரமித்த ஆணாதிக்கமும் தனியுடமையும் இன்னும் முழுமையாக மாற்றிவிடாது மிச்சமிருக்கும் நிலையில் மீண்டும் அதை சரியான திசையில் மாற்றியமைப்பது முழுக்க சாத்தியமல்ல என்று கூறமுடியாது. தவிரவும் இதுவரை உலகில் அமைந்த எந்த அரசும் ஆணாதிக்கத்தையும், தனியுடமையையும் நீக்கும் திசையில் அடியெடுத்து வைக்கவே இல்லை. மாறாக அவற்றை ஊட்டி வளர்த்திருக்கின்றன. ஆனால் சோசலிச அரசு ஏற்பட்டால் தனியுடமையை நீக்குவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து அனைத்து வழிகளிலும் அதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பதால் அது மிக விரைவாகவே சாத்தியப்படும். சாத்தியப்படாது என எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என்பதை விளக்கமுடியுமா உங்களால்?

கொள்கை என்பதையும் நடைமுறை என்பதையும் குழப்பிக்கொள்கிறீர்கள். \\எந்த எளிமையான கொள்கையும் கூட உலகம் முழுவதும் நடை முறைபடுத்துவது சாத்தியமா?// உலகத்தின் அனைத்து மனிதர்களும் ஒரே கொள்கையின் கீழ் இருக்கமாட்டார்கள். ஆனால் ஒரே நடைமுறையின் கீழ் இருக்கமுடியும். ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனிக் கொள்கைகள் இருக்கின்றன. அந்தந்த கொள்கையை பின்பற்றுபவர்கள் அந்தந்த மதங்களில் இருப்பார்கள், ஆனால் அனைவரிடமும் கடவுள் நம்பிக்கை எனும் நடைமுறை இருக்கும். ஆணாதிக்கம் என்பது கொள்கையல்ல நடைமுறை. எங்கள் கொள்கைகளை எந்த மத நம்பிக்கையுடையவர்களையும் விட தீவிரத்தன்மையுடன் நாங்கள் பின்பற்றுகிறோம். ஏனென்றால் அது பரிசீலித்து சரியானது எனும் ஏற்பினால் எழுவது, நம்பிக்கையிலிருந்து எழுவதல்ல. ஆனால் எதை நடைமுறைப்படுத்துவது? நடைமுறையிலிருக்கும் ஆணாதிக்கத்தை நீக்குவது குறித்து பேசினால் நீங்கள் செயல்படுத்திக்காட்டுங்கள் என்பது அறியாமை. ஒப்பீட்டளவில் பொதுவுடமைவாதிகள் ஆணாதிக்கச் சிந்தனை இல்லாதவர்களாக இருந்தாலும், சமூகத்தில் ஆணாதிக்கம் நீடித்திருக்கும்வரை அது நடைமுறைக்கு வராது.

\\சட்டத்தால்பாலியல் குற்றங்களை நடைமுறை படுத்த முடியாது என்று ஒரு புறம் வாதத்தை வைத்துக் கொண்டு ,இன்னொரு புறம் சமூக சூழ்நிலைகேற்ப சட்டம் எனவும் புரட்டியுள்ளீர்.எது சரி?// இது புரட்டலல்ல, அவ்வாறு காட்ட வேண்டும் என்பதற்கான உங்கள் திரித்தல். ஆணாதிக்கத்தையும், தனியுடமையும் நீக்காதவரை சட்டத்தால் பலனில்லை என்பதுதான் எங்கள் நிலை. ஆனால் நீக்குவதுவரை என்ன செய்வது? பாலியல் குற்றங்களை அங்கீகரிக்க முடியுமா? அங்குதான் சட்டமுறையின் கீழான கட்டுப்படுத்தல் வருகிறது. சட்டம் என்பது தற்காலிகமான ஆறுதலைத்தான் வழங்கமுடியும், ஒருபோதும் அது தீர்வாகமுடியாது. ஆனால் சட்டம்போடுவதைத்தவிர வேறெதையும் செய்ய்முடியாத நிலையிலிருக்கும் நீங்கள், தீர்வு என நீட்டி முழக்குகிறீர்களே. புரட்டல் என்பதன் பொருள் என்ன என்பதை அதில் தேடிப்பருங்கள் கிடைக்கும்.

உங்களின் விளக்கெண்ணெய் விளக்கம் உண்மையிலேயே விளக்கெண்ணெய் விளக்கமாகவே இருக்கிறது. உங்கள் கையில் இருப்பது நெய்யல்ல விளக்கெண்ணெய் தான் என்பதை நான் மிகவிரிவாக இஸ்லாம் கற்பனைக்கோட்டை தொடர்வாயிலாக தெளிவுபடுத்தி வருகிறேன். அறிவியல், அற்புதங்கள் என்பதோடு மட்டும் முடிந்துவிடாமல் அது காட்டும் வாழ்நெறி, சட்டங்கள் என அனைத்திலும் அத்தொடர் விரியும். இதை மறுக்கமுடியாமல் தான் நீங்கள் கேள்விபதில் பகுதியில் கேள்விகளை வைத்தீர்கள். அதற்கு பதில் கூறப்பட்ட பிறகும் தொடர்ந்தீர்கள். அது விவாதத்திற்கான பகுதியல்ல என்பதால் தான் உங்களுக்கு விவாதத்திற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி விளக்கெண்ணெயல்ல, நெய்தான் என்பதை நீங்கள் நிருவியிருக்க வேண்டும். மாறாக நீங்கள் என்கையிலிருப்பது விளக்கெண்ணெய் என அவதூறு கூறினீர்கள். அதை நிரூபியுங்கள் என்றால், முதலில் அது நெய்தான் என நீங்கள் நிருபியுங்கள், திறந்து காட்டுங்கள். பிறகு அதை நான் விளக்கெண்ணெய் என காட்டுகிறேன் என்றீர்கள். இப்போதோ உங்கள் கையிலிருப்பதை நான் ஏன் ஆராயவேண்டும் என்கிறீர்கள். நீங்கள் கூறுவது என்ன என்பது உங்களுக்காவது புரிகிறதா? தொடக்கத்திலிருந்து இதைத்தான் நான் கூறிக்கொண்டிருக்கிறேன். பதில் கூறவேண்டும் என்பதற்காக எதையாவது உளறிவைக்காதீர்கள். என்ன கேட்கப்பட்டிருக்கிறது? அதற்கு என்ன பதில் கூறவேண்டும் என்பதை சிந்தித்து பதில் கூறுங்கள்.

லிவிங் டுகதர் குறித்து நான் என்ன கூறியிருக்கிறேன் என்பதை விளங்கிக்கொள்ளாமலேயே பதில்கூற முயன்றிருக்கிறீர்கள். இதை ஏன் நீங்கள் பின்பற்றவில்லை என்றும் கேட்கிறீர்கள். சாத்தியமில்லை என்று கூறிவிட்டேன் என்றும் கூறுகிறீர்கள். மீண்டும் மீண்டும் இதைத் தான் உங்களிடம் கோரிக்கொண்டிருக்கிறேன். என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை முதலில் உள்வாங்கிக் கொள்ளுங்கள். இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் லிவிங் டுகதர் முறை சரியான பலனைத் தராது என்பதால் அது ஏற்புடையதல்ல என்றுதான் நான் கூறியிருக்கிறேன். எதை நான் ஏற்பில்லை என்கிறேனோ அதை ஏன் நீங்கள் செய்யவில்லை என்பதும், முதலாளித்துவ சமூகத்தில் சாத்தியமில்லை என்றால் அதையே நான் சாத்தியமில்லை எனக்கூறிவிட்டதாக கதையளப்பதும் உங்கள் மன்நிலையின் சீர‌ற்ற தனமையை காட்டுகிறது.

திருமண வடிவத்தை விட லிவிங் டுகதர் முற்போக்கானது தான். இது இஸ்லாமிய அடிப்படையில் குற்றம் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஒரு ஆணாதிக்க பிற்போக்கு மதவாத சட்டத்தில் பெண்ணுரிமை குறித்த முற்போக்குகள் குற்றமாகத்தான் பார்க்கப்படும். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. இஸ்லாமிய சட்டத்தின்படி என்ன நிலை, சோசலிச சட்டத்தின்படி என்ன நிலை என்றுபார்ப்பதற்கு இந்த விவாதமல்ல எதுசரி என்றுபார்ப்பதற்குத்தான் இந்த விவாதம். இதை முதலில் நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் விதந்தோதும் சவுதியில் அரச குடும்பத்தினரே பாலியல் குற்ற‌ங்களில் எந்த அளவுக்கு ஈடுபடுகிறார்கள் என்பதை அதாவது சட்டத்தை காக்கவேண்டியவர்களே எந்தாளவுக்கு அதை மீறியிருக்கிறார்கள் என்பதை வெறும் சட்டவாதமே இன்னும் சாத்தியப்படவில்லை என்பதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது. அவைகளை அறிந்துகொள்ளாமல் நீங்கள் எழுதுவதைப் பார்த்து பரிதாபம்தான் வருகிறது.