திங்கள், 6 டிசம்பர், 2010

புர்கா அணிந்து ஒரு பெண்ணும், நீச்சலுடை அணிந்து ஒரு பெண்ணும் நின்றால்

  1. நண்பர் இப்ராஹிம்,

    பாலியல் குற்றங்களுக்கு காரணமான‌ தனியுடமை, ஆணாதிக்கம் எனும் இரண்டில்; தனியுடமைக்கு பாலியல் குற்றங்களோடு தொடர்பில்லை என்றும், ஆணாதிக்கம் என்ற ஒன்று உலகில் இல்லை என்றும் கூறியிருக்கிறீர்கள். \\பாலியல் வன்முறைக்கு தீர்வு ஆணாதிக்கத்தையும் தனியுடமையும் நீக்கவேண்டும் எனக் கூறியுள்ளீர்கள்.தனியுடமைக்கும் பாலியல் வன்முறைக்கும் என்ன வேண்டிக்கிடக்குது? .மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடா முனைவது ஏனோ? ஆணாதிக்கமாம்.மக்களின் அன்றாட வாழ்க்கைகளையும் அடிப்படைகளையும் தெரியாத புத்தகத்திலே முகம் புதைத்து வாழும் முற்ப்போக்குவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கண்டுபிடித்த வார்த்தை ஜாலம்தான் இந்த ஆணாதிக்கம்// இதுகுறித்த தெளிவு ஏற்படாதவரை பாலியல் குற்றங்கள் குறித்து விளங்கிக்கொள்ள முடியாது என்பதால், இது அவசியம் விளக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

    தனியுடமை என்பது பொருட்களோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல, அது பெண்களோடும் தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறது. ஏனென்றால், ஆண்கள் பெண்களையும் ஒரு பொருளாகவே பாவிக்கிறார்கள். மனிதகுல தொடக்கக் காலங்களில் வேட்டைக்கான கருவிகளைப் போலவே ஆண்களும், பெண்களும் பொதுவில் இருந்தனர். ஆண்கள் விரும்பிய பெண்களை கொள்ளலாம் என்பதுபோலவே பெண்களும் விரும்பிய ஆண்களைக் கொள்ளலாம் எனும் நிலை இருந்தது. அப்போது சமூகத்தை தலைமை தாங்கி நடத்தியவள் பெண். இந்தக்காலகட்டத்தில் பாலியல் குற்றங்கள் இல்லை. ஆனால் இந்த நிலை மாறி வேட்டைக் கருவிகள் தனிப்பட்ட மனிதனுக்கு சொந்தமாகத் தொடங்கியபோது அதாவது தனியுடமை ஆரம்பமானபோது கருவிகளைப் போலவே பெண்களையும் ஆண் சொந்தம் கொண்டாடத் தொடங்கினான். ஏனென்றால் பெண் சமூகத்தை தலைமை தாங்கியதை வீழ்த்தி, தலைமைப் பொறுப்பை ஆண் எடுத்துக்கொண்டான். இதுதான் பொதுவுடமையும் தனியுடமையும் பிரியும் காலகட்டம். பெண் தலைமை தாங்கியபோது சமூகம் பொதுவுடமையாய் இருந்தது. அதனால் அங்கு பாலியல் குற்றம் உட்பட எந்தக் குற்றங்களுக்கும் இடமில்லாமல் இருந்தது. ஆண் எந்த விதத்திலும் பெண்ணைவிட தாழ்ந்தவனாக கருதப்படவில்லை. அவரவர் பங்களிப்பை அவரவர் செய்து கொண்டிருந்தனர். இன்று நாம் வளர்த்தெடுத்திருக்கும் விவசாயம், கட்டடக் கலை, மருத்துவம் உள்ளிட்ட துறைகள் பெண்களின் கண்டுபிடிப்பாய் இருந்தது. ஆனால் பெண்ணிடமிருந்து தலைமை பிடுங்கப்பட்டபின்பு சமூகம் தனியுடமைக்கு மாறுகிறது. கிடைக்கும் பலன்களை பொதுவில் பகிர்ந்த நிலை மாறி தனித்தனி உடமைகளாய் மாறின. இந்த வழியில் தனக்கு பிடித்த பெண்ணை தன்னுடைய சொத்தாக கருதத்தொடங்கினான். பிற பொருட்களைப் போலவே பெண்ணையும் தன்னுடைய சொத்தாக கருதத்தொடங்கிய அந்தக் கணத்திலிருந்துதான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடங்கியது. பெண் தலைமை தாங்கியபோது ஆண் எந்தவிதத்திலும் அடிமைப்படுத்தப்படவில்லை. ஆனால், ஆண் தலைமை தாங்கியபோது படிப்படியாக பெண் என்பவள் ஆணின் தேவைகளுக்காவே பிறந்தவள் எனும் கருத்தாக்கம் நிறுவப்பட்டு, அடிமையாக்கப்பட்டாள். ஆகவே பாலியல் குற்றங்களுக்கான தொடக்கம் தனியுடமையில் இருக்கிறது. இதை மொட்டைத்தலை, முழங்கால் என நீங்கள் கருதினால், உங்கள் கருத்தை நிருவவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

    உலகில் ஆணாதிக்கம் என்ற ஒன்று இல்லை என்பது உலகை கண்கொண்டு பார்க்க மறுப்பவர்களின் கூற்றாகும். அனைத்து இடங்களிலும் பெண்கள் கீழ்மைப்படுத்தப்படுகிறார்கள். இதையே நான் உங்களுக்கு கேள்வியாக முன்வைத்தேன். \\உங்கள் கூற்றில் நீங்கள் உண்மையுடன் இருந்தால் ஆணைவிட பெண் முதன்மைப் படுத்தப்படும் சில அம்ச‌ங்களைக் கூறமுடியுமா?// என்று கேட்டிருந்தேன், இதைக் கண்டுகொள்ளாத நீங்கள், பதில் கூற முனையாத நீங்கள் ஆணாதிக்கம் இல்லையென்று மீண்டும் கூறுகிறீர்கள். தற்போதைய உலகின் பெண் பெற்றுக்கொண்டிருக்கும் சிற்சில சலுகைகளை கூட‌ மிகுந்த போராட்டத்தின் விளைவாகவே பெற்றார்கள். ஆணுக்கு அடங்கி நடப்பவளே நல்ல பெண் எனும் கருத்தைக் கொண்டிராத சமூகமோ, மதமோ உண்டா? ஒரே மாதிரியான வேலைக்கு ஆணைவிட குறைவாகவே பெண்ணுக்கு கூலி நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஏன்? ஆணுக்கு நிகரான சமூக மதிப்பு பெண்ணுக்கு வழங்கப்படாதது ஏன்? தான் பெற்ற குழந்தையைக்கூட ஆணுக்கு முதன்மைப்படுத்துவது ஏன்? பிரச்சனைகளில் பெண்களின் கருத்துக்கு மதிப்பளிக்கப்பட்டிருக்கிறதா? ஓட்டுப்போடும் உரிமை தங்களுக்கும் வேண்டும் எனக்கோரி பெண்கள் பல்லாண்டுகளாய் நடத்திய போராட்டம் தெரியுமா உங்களுக்கு? இன்னும் சில நாடுகளில் பெண்களுக்கு காரோட்ட அனுமதியில்லை புரியுமா உங்களுக்கு? சமூகம், உலகியல், பொருளாதாரம், நிர்வாகவியல் என நிலவும் அனைத்திலும் பெண்களுக்கு உரிய இடம் அளிக்கப்பட்டிருக்கிறதா? கேவலம் விளையாட்டுப் போட்டிகளில் கூட தங்களையும் இணைத்துக்கொள்ள‌ வேண்டும் என பெண்கள் போராடியதை உலகம் கண்டிருக்கிறது. இப்போதுதான் கடுமையான கட்டுப்பாடுகளையும் சூழல்களையும் மீறி சில பெண்கள் வெளிவரத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்களைச் சுட்டிக்காட்டி ஆணும் பெண்ணும் சமம் என்பது கூட ஆணாதிக்கத்தின் நுணுக்கமான செயல்பாட்டிற்கு சான்று. இப்படி சகல துறைகளிலும் வியாபித்திருக்கும் ஆணாதிக்கம் தான் தன்னுடைய இன்பத்திற்காக, ஆசைக்காக, சுகிப்பிற்காக ஒரு பொருளைவிட அற்பமாக கசக்கி நுகர்ந்து எறிகிறது. ஆணாதிக்கம் இல்லை என்பது உங்கள் நிலைப்பாடாக இருந்தால் இவைகளுக்கு என்ன விளக்கமளிப்பீர்கள்?

    அடுத்து, இஸ்லாத்தில் பெண்ணாதிக்கம் பாருங்கள் என்று ஹதீஸிலிருந்து ஒரு கதையை கூறியிருக்கிறீர்கள். அதன்படியே பார்ப்போம், அடையாளம் குறிப்பிடப்படாத அந்தப் பெண்ணைவிட குரானையும் அதன் சட்டவிதிகளையும் நன்கறிந்த ஆட்சித்தலைவரான உமர் ஆண்களுக்குள்ள பிரச்சனையை தீர்க்க முற்படுகிறார். எந்த ஒன்றையும் குரான் வழியே தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதை நன்கறிந்த உமருக்கு வேதத்தில் வழங்கியிருக்கும் பெண்களுக்கான ஒரு சலுகை குறித்து ஒரு பெண்தான் வாதாடியிருக்கிறார், போராடியிருக்கிறார். கூடியிருந்த ஆண்களில் யாருமில்லை. ஒரு வேளை உமருக்கு குரான் வசனங்கள் மறந்துவிட்டது என்றே கொள்வோம். பெண்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சலுகையை பறிக்கும் முயற்சி நடக்கிறது. அதை எதிர்த்து ஒரு பெண் குரல் கொடுத்திருக்கிறார். பின்னர் அந்த முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது. இதுதான் நீங்கள் கூறிய கதை. அதாவது பெண்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சலுகைப் பறிப்பிற்காக ஒரு பெண் போராடியிருக்கிறாள். இது எந்த விதத்தில் பெண்ணாதிக்கமாகும்? ஏற்கனவே தங்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகை தொடரவேண்டும் என்பதற்காக ஒரு பெண் குரல் கொடுப்பது உங்களுக்கு பெண்ணாதிக்கமாய் தெரிகிறது என்றால், புரிகிறதா உங்களுக்கு ஆணாதிக்கத்தின் வீரியம் என்ன என்பது. (இதில் ஜனநாயகம் குறித்த ஒரு ஒப்பீடு செய்திருக்கிறீர்கள் அது குறித்த தலைப்பில் நாம் விவாதிக்கும்போது எது ஜனநாயகம்? என்பதை நான் விளக்குகிறேன்)

    அடுத்து ஒழுக்க விதிகளைக் குறிப்பிட்டு ஆணாதிக்கமும் இல்லை பெண்ணாதிக்கமும் இல்லை என்று மறுத்திருக்கிறீர்கள். ஒரு கணவன் தன் மனைவியை அழைக்கும் போது மனைவிக்கு விருப்பமில்லாவிடினும் கணவனுக்கு உடன்பட்டே ஆகவேண்டும் என்பதுதான் அதிலிருப்பது. அழைக்கும் போது வரவில்லை என்றால் ஆண் வரம்புமீறிவிடுவான் என அதற்கு பொழிப்புரை வழங்கும் நீங்கள். இதையே திருப்பிப் போடுவோம். மனைவி அழைக்கும்போது கணவன் மறுத்தால்? இந்த விசயத்தின் ஏன் ஹதீஸில் ஒழுக்கவிதி இல்லை? ஆக பெண்ணின் உணர்ச்சிகள் குறித்து அக்கரைப்படாமல் கணவன் அழைத்துவிட்டால் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் உடன்பட்டே ஆகவேண்டும் என்பது ஆணாதிக்கம் இல்லாமல் வேறு என்ன? கணவனுக்கு மட்டும் காட்டவேண்டும் என அங்கு குறிப்பிடப்பட்டிருப்பது உடல் அங்கங்களையல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். ஆடை அலங்காரங்களைக் கூட கணவன் உள்ளிட்ட நெருங்கியவர்களைத்தவிர வேறு யாரும் காணக்கூடாது என்பது உடல் அங்கங்களை மறைக்கும் ஆடையில் கூட அவள் தனிப்பட்டு இருக்கக்கூடாது அதையும்கூட ஆணின் விருப்பத்திற்கேற்றவாறுதான் அணிந்துகொள்ள வேண்டும் எனும் ஆணாதிக்கத்தையல்லவா காட்டுகிறது. ஒரு ஆண் தான் விருப்பட்டு அணியும் ஆடை அலங்காரத்தை ய்யாரிடம் வேண்டுமானாலும் வெளிப்படுத்திக்கொள்வான் அதையே பெண் செய்யக்கூடாது என்றால் இதன் பொருள் என்ன?

    \\பெண்ணும் கிடைக்கும் வாய்ப்பு ஆணுககு கிடைக்காதபோது அவன் நிலைகுலைந்து விடுகிறான்.இப்படி பட்டவனை தண்டனை கொடுத்துத்தான் திருத்த முடியும் என்பது வரலாறு கண்ட உண்மை.மன நிலை மாற்றி திருத்திவிடுவோம் என்பதுகாகிதத்தில் எழுதப்படும் தத்துவம்// வரலாறு கண்ட உண்மை எது என்பதை \\இதில் இஸ்லாம் கூறும் தீர்வு என்ன? சட்டமும் தண்டனைகளும் …………. இஸ்லாமிய தீர்வு குறித்து பரிசீலனை செய்யத் தயாரா?// \\எடுத்துக்காட்டாக சௌதியையே கொள்வோம், இஸ்லாம் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை 1400 ஆண்டுகளுக்கும் அதிகமாக அங்கு இஸ்லாமிய சட்ட தண்டனை முறைகள் தான் அதிகாரத்தில் இருக்கிறது. இவ்வளவு நீண்ட காலமாக …………. சட்டம் என்பது மேற்பரப்பில்தான் செயல்படமுடியும்//இவ்வாறு தெளிவாக எடுத்துக்கூறிய பின்னரும் அது குறித்து எந்த விளக்கமோ மறுப்போ கூறாமல் மீண்டும் ‘வரலாறு கண்ட உண்மை’ என திரிப்பது உண்மையை கண்டுணர உதவாது.

    \\மன நிலை மாற்றி திருத்திவிடுவோம் என்பது// \\திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் என்ற சினிமபாட்டைப்போல் நீங்களும் கதை சொல்லுவதை விட்டு// கம்யூனிசம் கூறும் தனியுடமை, ஆணாதிக்கத்தை ஒழிப்பது என்பது திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் என்பதைவிட வேறுபாடானது. அது உங்களுக்கு புரியவில்லை என்றால் கேளுங்கள் விளக்குகிறேன். நான் கூறுவதை வேறொன்றாக திரிக்க வேண்டாம்.

    பாலியல் குற்றங்களில் ஆடை பிரதான பங்கு வகிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த நான் கேட்ட மூன்று கேள்விகளையுமே நீங்கள் பதில் கூறாமல் தவிர்த்திருக்கிறீர்கள். நான் கேட்டதற்கு பதில் கூறாமல் அதை வேறொன்றாக மாற்றி விளக்கம் கூறியுள்ளீர்கள். ஆனால் நீங்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் நீங்கள் கேட்டவாறே பதிலளிக்க நான் ஆயத்தமாயுள்ளேன். அதுதான் விவாத நேர்மையும் கூட.

    பழங்குடியினர் விசயத்தில் என்னுடைய ஒப்பீடு தவறு என்கிறீர்கள். அல்ல. நவீன சமூகம் சார்ந்தும் என கேள்வியை எழுப்பியிருக்கிறேன், பழங்குடியினரிடமிருந்தும் என் கேள்வியை எழுப்பியிருக்கிறேன். காரணம் பாலியல் குற்றங்கள் என்பது சமூகம் சார்ந்தோ, மதம் சார்ந்தோ, நவீனம் சார்ந்தோ வெளிப்படுவதில்லை. எல்லா சமூகத்திலும், எல்லா மதத்திலும், எல்லாக் காலங்களிலும் அது வெளிப்பட்டே வந்திருக்கிறது. பழங்குடியினரிடமும் பாலியல் சார்ந்த குற்றங்கள் இருக்கின்றன. கேள்வி அங்கு ஆடை முக்கியமானதாக இருக்கவில்லை என்பதை மட்டுமே இலக்காக கொண்டிருக்கிறது.  இருவேறு பெண்களிடம் ஒரு ஆண் கொள்ளும் காம உணர்வில் ஆடைகளுக்கு போதிய பங்களிப்பில்லை எனும் விசயத்திலும் முதல் முறை கேட்கும் போது இரண்டு ஆண் இரண்டு பெண் என திருப்பினீர்கள் இப்போதும் புர்கா, வாலிபால் உடை என்று திருப்பியிருக்கிறீர்கள். மேலதிகாரியுடன் தனித்திருக்கும் விசயத்திலும் பதில் கூறுவதை விட்டுவிட்டு, ஷைத்தான் எனும் உங்கள் மத உருவகத்தை நானும் அப்படியே வரித்துக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். ஆக இந்த மூன்று கேள்வியிலும் பதில் கூறுவதிலிருந்து தவிர்க்க முனைகிறீர்கள். கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூற வேண்டும் அல்லாவிடின் இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் கூறமுடியவில்லை என்பதாக எடுத்துக்கொள்ள நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இனி உங்கள் கேள்விகளுக்கு வருவோம். பழங்குடியின சமூகத்தில் முஸ்லீம் பழங்குடி, முஸ்லீமல்லாத பழங்குடி என்றுதான் ஒப்பிடவேண்டும் என்கிறீர்கள். அப்படியல்ல, நாம் எடுத்துக்கொண்டிருக்கும் தலைப்பு பாலியல் குற்றங்களுக்கு இஸ்லாம் கூறும் தீர்வா?, கம்யூனிசம் கூறும் தீர்வா? எது சரி? என்பது தான். முஸ்லீம் செய்யும் பாலியல் குற்றம், முஸ்லீம் அல்லாதவன் செய்யும் பாலியல் குற்றம் என்பதாக நமது தெரிவு இல்லை. முஸ்லீம் பழங்குடி, காபிர் பழங்குடி என்றெல்லாம் பிரித்துப்பார்க்க முடியாது. ஏனென்றால் பாலியல் குற்றங்களுக்கான தூண்டுதல் மத அடிப்படையில் ஏற்படுவதல்ல. ஒருவனிடம் எந்த அளவுக்கு ஆணாதிக்க கருத்துகள் ஊடாடியிருக்கிறது எனும் அடிப்படையில் ஏற்படுகிறது.

    ஒரு ஆணின் முன்நிற்கும் இருவேறு பெண்களில் புர்கா அணிந்து ஒரு பெண்ணும், நீச்சலுடை அணிந்து ஒரு பெண்ணும் நின்றால் நீச்சலுடை பெண்மீதே அவனுக்கு காம உணர்வு மிகுதியாக ஏற்படும். இதைக்கூறுவதில் எனக்கு தயக்கமொன்றுமில்லை. ஏனென்றால் உண்மைதான் அது. ஆனால் அதுவும் ஆணாதிக்க கருத்தியலின் வழியே. குறைவாக அணியும் பெண் அதிகம் எதிர்ப்பு தெரிவிக்காமல் இணங்குவாள் என்பது அவனது எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதாவது குறைவாக அணிபவள் அலைபவளாக இருப்பாள், எல்லாவற்றையும் மறைத்திருப்பவளே குடும்பப்பெண் என்று ஒரு பெண் அணியும் ஆடையைக் கூட அவளுடைய சொந்த விருப்பின்படி, வசதியின்படி அணிந்திருக்கிறாள் என எண்ண முடியாத அளவுக்கு ஆணாதிக்க கருத்தியல்கள் சமூகத்தில் நிறைந்திருக்கிறது. இதை நிங்கள் கேள்வி கேட்ட பின்னர் தான் கூறுகிரேன் என எண்ண வேண்டாம் நீங்கள் கேட்பதற்கு முன்னமே நான் இதை கூறியிருக்கிறேன். உங்கள் நினைவுக்காக இதோ \\இதற்கு பழக்கவழக்கம்,ஆடை போன்றவை வாய்ப்பை ஏற்படுத்தித்தருகின்றன//

    மேலதிகாரியுடன் ஒரு ஆண் இருக்கும் விசயத்தில் மூன்றாவது ‘ந‌பரான’ சைத்தான் ஆணிடம் தவறான சிந்தனைகளை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். நபர் என்பது உங்கள் மத விவகாரம். சைத்தான் என்பதை மனதில் ஏற்படும் சிந்தனைகள் எனக் கொண்டால் அதைத்தான் நான் ஆணாதிக்கம் என்கிறேன். இன்னும் விளக்கமாக பார்க்கலாம். குறைவான ஆடையணிந்த பெண் உயரதிகாரியாக இருக்கும் பட்சத்தில் வாலைச் சுருட்டிக்கொண்டிருக்கும் சைத்தான்; அந்தப் பெண் ஆணிடம் வேலை செய்யும் வேலைக்காரியாக இருந்தால் வேலையைக் காட்டிவிடும். ஆக இதில் ஆடை எனக்கொண்டாலும் சைத்தான் எனக் கொண்டாலும் பாலியல் குற்றம் என்பது யாரை சுகிக்கமுடியும், எப்படி தப்பிக்க முடியும் எனும் ஆணாதிக்க சிந்தனை அடிப்படையிலேயே அமைகிறது.

    \\நீங்கள் வர்க்க பேதங்களை நீக்கிய சமுதாயத்தை உருவாக்கிவிட்டாலும் கூட மனிதனின் உணர்வு பேதங்களை நீக்கிவிட முடியாது// தவறு. மனிதனின் காம உணர்வு சிந்தனை, அறிவு உள்ளிட்ட அனைத்தும் வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. ஒவ்வொருவரின் சிந்தனை செயல் பேச்சு அனைத்தின் பின்னேயும் வர்க்கம் இருக்கிறது. ஆணாதிக்கம் நீக்கப்படும் போது அதன் எச்சமான பாலியல் இச்சையும் நுகர்வாக இல்லாமல் இயல்பானதாய் மாறும். \\இஸ்லாமோ இரண்டாவது திருமணம் பண்ணுமாறு அழகான வழிகாட்டுகிறது// இது அழகான வழிகாட்டலல்ல, ஆணாதிக்க வழிகாட்டல். மனிதகுல வரலாற்றை திரும்பிப் பாருங்கள். மனிதனின் பலதாரவேட்கை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது, அதில் இஸ்லாமிய வடிவம் நான்கு திருமணங்கள். இவைபோன்ற அபத்தங்களுக்கெல்லாம் கம்யூனிசமே முடிவுகட்டும்.

    சட்டமா நிலைபாடா எது ஏட்டுச் சுரைக்காய் என்பதற்கு தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சட்டம் தான் ஏட்டுச்சுரைக்காயாக, மேலெழுந்தவாரியாக இருக்கிறது என்பதை விளக்கியிருந்தேன். அதற்கு விளக்கமோ, மறுப்போ உங்களிடமிருந்து வரவில்லை என்பதை நினைவூட்டுவதுடன், சோசலிசத்தை நாங்கள் எப்படி செயல்பாட்டுக்கு கொண்டுவரப்போகிறோம் அதற்கு எவ்வளவு காலம்பிடிக்கும், சோசலிசப் பாலத்தை நாங்கள் இழந்திருக்கிறோமா இல்லையா என்பன போன்றவையெல்லாம் நம்முடைய விவாதத்திற்கு அப்பாற்பட்ட விசயங்கள் என்பதை மீண்டுமொருமுறை உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்.
    செங்கொடி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.