சனி, 11 டிசம்பர், 2010

  1. நண்பர் இப்ராஹிம்,
    நான் நடுவராக மாறவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளீர்கள். நடுவராவதற்கான எந்த எத்தனங்களையும் நான் செய்யவில்லை, செய்வதில்லை. ஆனால் வாதியாக இருந்து வாதங்களை வைப்பதோடு ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? எடுத்துவைத்த வாதங்களுக்கு பதிலை எதிர்பார்ப்பதும், கிடைக்காத போது அதை வலியுறுத்துவதும் கூட வாதியின் உரிமைகளில் உள்ளதுதான். அந்த உரிமையில் தான் உங்களின் பதில்கூறும் முறைமையை விமர்சித்தேன். அதில் தவறேதும் இருப்பதாக நான் கருதவில்லை.
    உங்கள் மீது நான் வைக்கும் குற்றச்சாட்டு. நான் கேட்கும் கேள்விகளை, விளக்கங்களை வேறொன்றாக திரித்து மறுப்பளிக்கிறீர்கள் என்பது. இரண்டு வேறு வேறு நிலையில் இருக்கும் இருவர், எந்த நிலை சரி என்பது குறித்து விவாதிக்கையில்; ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் கேட்டவிதத்தில் பதில் கூறினால்தான் எது சரி எனும் முடிவை நெருங்க முடியும். மாறாக, கேள்வி ஒரு திசையிலும், பதில் வேறொரு திசையிலுமாக இருந்தால் அதனால் எந்தஒரு பலனும் ஏற்படப் போவதில்லை என்பதுடன் முடிவையும் அடையமுடியாது. என்னுடைய பதில்களைப் பாருங்கள் உங்களுடைய கேள்வியை நான் திரித்திருக்கிறேன் என கூற முடியுமா நீங்கள்? ஆனால் உங்கள் பதில்……? இதோ எடுத்துக்காட்டுகிறேன்.
    ௧) ஒரு பெண் ஆடையைக் குறைப்பதும், உடலை வெளிக்காட்டிக்கொள்வதே அழகு என நினைப்பதும் ஆணாதிக்கமா? பெண்ணாதிக்கமா? உலகில் பெண்ணாதிக்கம் என்ற ஒன்று எப்போதும் நிலவில் இருந்ததேயில்லை என்பதுதான் வரலாறு. ஆதியில் சமூகத்தை பெண் தலைமை தாங்கி வழிநடத்தினாள், அதன் பிறகிலிருந்து இன்றுவரை ஆண் பெண்ணை அடிமைப்படுத்தி தன்னுடைய ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வருகிறான். இதை நீங்கள் மறுக்கிறீர்களா? உங்கள் கருத்து சரியானது என நீங்கள் நினைத்தால் அது எப்படி என்பதை விளக்குங்கள்
    ௨) இனப்பெருக்கம் எனும் உண்மையான நோக்கம் மறைந்து ஆசை, இன்பம், காதல், காமம் என உடலுறவின் தளம் மாறியபோதுதான் பாலியல் குற்றங்களாக அது உருத்திரிந்தது. இதை நீங்கள் ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? மறுக்கிறீர்கள் என்றால் எப்படி?
    ௩) இதில் இஸ்லாம் கூறும் தீர்வு என்ன? சட்டமும் தண்டனைகளும். 1400 ஆண்டுகளுக்கும் அதிகமாக இஸ்லாம் கூறும் தீர்வு நடைமுறையில் இருந்தும் பாலியல் வறம்பு மீறல்களை ஒன்றும் செய்யமுடியவில்லை. இதுதான் நீங்கள் சிந்திக்க வேண்டிய இடம். குறுகிய காலமே நடைமுறையில் இருந்த சோசலிச நாடுகளின் மீது கேள்வி எழுப்பும் நீங்கள், நீண்டகாலம் நடைமுறையில் இருந்த பின்னரும் தோல்வியை தழுவியுள்ள இஸ்லாமிய தீர்வு குறித்து பரிசீலனை செய்யத் தயாரா?
    ௪) ……..ஆகவே பாலியல் குற்றங்களுக்கான தொடக்கம் தனியுடமையில் இருக்கிறது. இதை மொட்டைத்தலை, முழங்கால் என நீங்கள் கருதினால், உங்கள் கருத்தை நிருவவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது
    ௫) ……..இப்படி சகல துறைகளிலும் வியாபித்திருக்கும் ஆணாதிக்கம் தான் தன்னுடைய இன்பத்திற்காக, ஆசைக்காக, சுகிப்பிற்காக ஒரு பொருளைவிட அற்பமாக கசக்கி நுகர்ந்து எறிகிறது. ஆணாதிக்கம் இல்லை என்பது உங்கள் நிலைப்பாடாக இருந்தால் இவைகளுக்கு என்ன விளக்கமளிப்பீர்கள்?
    ௬) ……..பெண்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சலுகைப் பறிப்பிற்காக ஒரு பெண் போராடியிருக்கிறாள். இது எந்த விதத்தில் பெண்ணாதிக்கமாகும்? ஏற்கனவே தங்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகை தொடரவேண்டும் என்பதற்காக ஒரு பெண் குரல் கொடுப்பது உங்களுக்கு பெண்ணாதிக்கமாய் தெரிகிறது என்றால், புரிகிறதா உங்களுக்கு ஆணாதிக்கத்தின் வீரியம் என்ன என்பது.
    ௭) பாலியல் குற்றங்களில் ஆடை பிரதான பங்கு வகிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த நான் கேட்ட மூன்று கேள்விகளையுமே நீங்கள் பதில் கூறாமல் தவிர்த்திருக்கிறீர்கள். நான் கேட்டதற்கு பதில் கூறாமல் அதை வேறொன்றாக மாற்றி விளக்கம் கூறியுள்ளீர்கள்.
    இன்னும் பட்டியலிடலாம். இவைகளுக்கெல்லாம் முறையான பதிலை நீங்கள் கூறியிருக்கிறீர்களா? கூறியிருந்தால் என்னுடைய கேள்வியும் உங்களுடைய பதிலும் ஒத்திசைந்திருக்கிறதா என ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரு விசயத்தை விளக்கி அதிலிருந்து கேள்வியை எடுத்துவைத்தால் நான் எழுதியிருப்பதில் ஒரு வரியை எடுத்துக்கொண்டு அதற்கு நான் கேட்பதற்கு தொடர்பில்லாத விளக்கத்தை அளித்திருப்பீர்கள்.
    ஆகவே உங்களின் நிலைப்பாட்டிலிருந்து நான் கேட்டிருக்கும் கேள்விகளுக்கும் விளக்கங்களுக்கும் பதிலையும் மறுப்பையும் தாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே ஓரிரு முறைகள் உங்கள் பதிலின் தன்மையை சுட்டிக்காட்டிவிட்டு என் பதில்களை தொடர்ந்திருந்தேன், ஆனால் நீங்கள் அவைகளை கண்டு கொள்ளவில்லை என்பதால்தான் நான் பதிலளிப்பதை நிறுத்திவைத்துவிட்டு உங்கள் பதில்களின் மீதான விமர்சனத்தை மட்டும் வைத்திருந்தேன். அதன் பிறகான உங்களின் பின்னூட்டத்திலும் உங்கள் பதில்களை நீங்கள் ஒப்பிடவோ சரிபார்க்கவோ இல்லை என்பதால் தான் மீண்டும் இந்த விளக்கத்தை அளித்திருக்கிறேன். புரிந்துகொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
    செங்கொடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.