திங்கள், 10 ஜனவரி, 2011

இப்பேரண்டம் பெருவெடிப்பிலிருந்து உருவானது என்பதே யூகம் தான்.

நண்பர் இப்ராஹிம்,

ஹதீஸ்கள் கதை என்றால் அது கதையல்ல என அந்த ஹதீஸிலிருந்தே ஆதாரம்(!) காட்டுகிறீர்கள். ஹதீஸ்கள் கதைகள் தாம் என நான் எந்த அடிப்படையில் கூறுகிறேன்? உங்களுக்கு எவைஎவைகளெலாம் நம்பிக்கைகளாக இருக்கிறதோ அவையவைகளை அதேவிதத்தில் நானும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பது சரியா? ஒரு ஹதீஸ் என்றால் அதற்கு தோராயமாக ஏழுபேர் அறிவிப்பாளர்களாக இருக்கிறார்கள். அதில் கடைசியிலுள்ளவர் தொகுத்தவரிடம் நேரடியாக கூறியவர் என்றால் கடைசி மூவரின் நடத்தைகள் ஓரளவுக்கு தொகுக்கப்பட்டுளன என்று கொண்டாலும் முதல் மூவரின் நடத்தைகளுக்கு எந்த நம்பகத்தனமையும் இல்லை. இதைத்தான் அந்த ஹதீஸிலிருந்தே வார்த்தைகள் கூட மாறாமல் மனனம் செய்யப்பட்டது என்று கூறுகிறீர்கள். அதாவது ஹதீஸின் நம்பகத்தன்மைக்கு அந்த ஹதீஸே சான்று. இது ஒரு புறமிருக்கட்டும், புஹாரி தோராயமாக ஆறு லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அதிலிருந்து 7500 ஐ தேர்ந்தெடுத்திருக்கிறார். தான் சேகரித்தவற்றிலிருந்து பெரும்பான்மையான ஹதீஸ்களை நீக்கியதற்கான அடிப்படை தனிமனித நடத்தைகள். அதிலும் எல்லா அறிவிப்பாளர்களின் நடத்தைகளயும் அவ்வாறு சோதித்தறியவில்லை, அது இயல்வதும் சத்தியமல்ல எனும் நிலையில். இதைத்தான் நீங்கள் அந்த ஹதீஸ்களிலிருந்தே எடுத்துக்காட்டி உங்கள் நம்பிக்கையைக் கூறுகிறீர்கள். ஹதீஸ்கள் வரலாறு என நம்பிவிட்டால் அங்கு பிரச்சனை ஒன்றுமில்லை. ஆனால் ஐயம் வந்தால் எந்த வழியில் சோதிப்பது? ஆக சோதித்தறிய எந்த வழிமுறைகளும் இல்லாத, வேறு எதிலும் இடம்பெறாத‌ இவைகளை வரலாறு என்பதா? செவிவழிக் கதைகள் என்பதா? என்ன ஒரு வித்தியாசம் ஹதீஸ்கதைகளுக்கு சொன்னது யாரெல்லாம் என்ற அட்டவணை இருக்கிறது, நடப்பு கதைகளுக்கு அவ்வாறான அட்டவணை இல்லை. அடுத்து உங்கள் எடுத்துக்காட்டுக்கு வருவோம், ஜோதிபாசு போலி கம்யூனிசவாதி என்பது ஒருபுறமிருக்கட்டும். ஜோதிபாசு நல்லவர், வல்லவர் தொடர்ச்சியாக சொல்கிறார்கள் எனக் கொள்வோம், ஒரு இருநூறு ஆண்டுகள் கழித்து ஒருவர் இன்னின்னார்களெல்லாம் ஜோதிபாசு நல்லவர் எனக் கூறினார்கள் என்று தொகுத்து எழுதி இது தான் ஜோதிபாசுவின் வாழ்க்கை வரலாறு என்று கூறினால் அதை அப்படி எடுத்துக்கொள்ளமுடியுமா? உலக அளவில் மன்னர்களின் வரலாறுகள் எப்படி எழுதப்பட்டுள்ளன. எழுதிய வரலாற்றுடன் கல்வெட்டுகள், கட்டிய கட்டிடங்கள் போன்றவைகளோடு சரிபார்த்து, பல்வேறு வரலாற்றசிரியர்கள் எழுதியதை ஒப்பீடு செய்து ஒரு தோராயமான உருவம் கொடுக்கப்பட்டுள்ளன. அதையும்கூட அறுதியானது என கூறிவிட முடியாது, இப்பொது இருப்பதற்கு எதிரான ஒரு சான்று கிடைத்தால், ஒரு கல்வெட்டோ, பட்டயமோ கண்டெடுக்கப்பட்டால் அதையொட்டி அந்த வரலாறு திருத்தப்படும். ஆனால் ஹதீஸ்களில் இப்படி எதுவும் இல்லை என்பதுடன், ஒற்றைக் கடவுளை, முகம்மதை நம்புபவர்களிடையே கூட எது உண்மையான ஹதீஸ் என்பதில் பேதமிருக்கிறது. இது தான் உண்மை என கூறுவதற்குக்கூட அந்த அறிவிப்பாளர் வரிசை தான் ஆதாரமாக இருக்கிறது. அடுத்து குரான் மாற்றப்பட்டிருக்கிறது எனும் பொருளில் கூட ஹதீஸ் இருக்கிறது, பால்குடி வசனம் குறித்து ஆய்ஷா அறிவித்த ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றிருக்கிறது. இதை அப்படியே வரலாறு எனக் கொண்டால் குரான் மாற்றப்பட்டுள்ளது என்பது உண்மையாகும். அப்படியில்லை என்றால் ஹதீஸின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும். அதனால் ஹதீஸ்களை அப்படியே வரலாறு என்பதைவிட ஹதீஸ்கதை என்பதே பொருத்தமானது.

ஆனால், தொடக்க கால மனிதகுல ஆய்வுகள் என்பவை இத்தன்மையவை அல்ல. இவைகளுக்கான ஆதாரம், இன்னார் சொன்னார், இப்படி பதிவு செய்யப்பட்டது என்று கூற முடியாது. ஏனென்றால் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தியவை அவை. தொல்லியல் ஆய்வுகள் மூலம் இதை உறுதி செய்கிறார்கள். ஒரு மட்பாண்டத்தின் துண்டொன்று கிடைத்தால் அதைக்கொண்டு பயன்படுத்திய மண், அந்த மண்ணில் விளைந்திருக்கக்கூடிய தாவரங்கள், அந்த தாவரங்களைச் சூழ்ந்திக்கும் விலங்கு வகைகள் என்று ஒன்றைத்தொட்டு ஒன்றாக அந்த ஆய்வுகள் விரிந்து கொண்டே செல்லும். உடைந்து ஒட்டிய ஒரு எலும்பைக் கொண்டு அவர்களின் சமூக வாழ்வையும் முடியாதவர்களை பேணியதையும் வெளிக்கொண்டுவந்திருக்கிறார்கள். ஈமச்சடங்குடன் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களைக் கொண்டு சமூகஉறவு முறைகள், ஆண் பெண் தொடர்புகளை முன்வைத்திருக்கிறார்கள். தொடக்கத்தில் மனிதவரலாறு பெண்வழிச் சமுதாயமாகவே இருந்தது என்பதற்கு எல்லா வரலாற்றாய்வாளர்களுமே சான்றுகளை வைத்திருக்கிறார்கள். தொன்மை மரபில் இறையியலின் தொடக்கமாக சூலடைந்த பெண்களை புனிதப்படுத்தும் சடங்குகள், உருவுகளைக் கண்டெடுத்திருக்கிறார்கள். இவைகளை அடிப்படையாகக் கொண்டு அறிவியல்முறையில் செய்யப்பட்ட யூகம் தான் ஆண் பெண் உறவு முறைகள், பெண்ணின் தலைமைத்துவம், பாலியல் தேவைகள் எப்படி பகிரப்பட்டன என்பன குறித்த ஆய்வுகள். ஆம் இவைகள் யூகம் தான். ஆனால் உலக வரலாற்றைச் சொல்ல இதைவிட சிறந்த முறைகள் இன்னும் காணப்படவில்லை. நாளை புதிய முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அந்த புதிய முறைகள் மூலமும் ஆய்வுகள் செய்து உறுதிப்படுத்தப்படும். இதை யூகம் என நீங்கள் ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் இப்பேரண்டம் பெருவெடிப்பிலிருந்து உருவானது என்பதே யூகம் தான். ஆனால் இந்த நிலைகளுடன் ஹதீஸின் நிலைகளை ஒப்பிட முடியுமா?

செவிவழிக்கதை கைவழிக்கதை என்பதெல்லாம் எதன் மூலம் பரவியது என்பதைக் கொண்டல்ல, அது அறிவியல் ரீதியாக இருக்கிறதா என்பதைக் கொண்டே முடிவு செய்ய முடியும். ‘ஏ’ யிடமிருந்து ‘பி’கேட்டார், ‘பி’ யிடமிருந்து ‘சி’ கேட்டார் என்பதைவிட ஏயிடமிருந்து கேட்டதைத்தான் பி சியிடம் சொன்னார் என்பதை சரிபார்க்க நம்பிக்கையைத்தவிர வேறொன்றுமில்லை. அதற்கு நம்பிக்கை போதுமானதல்ல என்பதற்கு புஹாரி எத்தனை ஹதீஸ்களை சேகரித்தார் எத்தனை ஹதீஸ்களை தள்ளினார் என்பதைப் பாருங்கள். ஹதீஸ்களின் நம்பகத்தன்மைக்கு அறிவிப்பாளர்களின் நடத்தைகள் மட்டும் போதுமானதல்ல. அறிவியல் ரீதியான உரைகல் வேண்டும் என்பதற்கு தான் சேகரித்தவற்றுள் அறிவியலலாத வழிமுறைகளிலேயே 98 விழுக்காடு ஹதீஸ்களை கற்பனை என்று ஒதுக்க வேண்டிய நிலையில் புஹாரி இருந்திருக்கிறார் என்பதே சான்று.

சரி ஒரு ஒப்பீட்டுக்காக இரண்டிலும் நம்பகத்தன்மை இல்லாமலிருக்கிறது என்று கொள்வோம். ஹதீஸின் வழிமுறையா? வரலாற்றாய்வு வழிமுறையா? எதை சரிகாண்பது எனும் நிலையில் நான் இரண்டையும் ஒரே விதத்தில் மதித்து அறிவியல் வழிமுறையை கொண்டு நிற்பதால் வரலாற்றாய்வு முறையை தேர்ந்தெடுக்கிறேன். ஆனால் நீங்களோ இரண்டையும் ஒரே நிலையில் வைக்காமல் ஐயத்தின் பலனை ஹதீஸில் சாதகமாகவும், வரலாற்றாய்வில் பாதகமாகவும் கொள்கிறீர்கள். ஹதீஸ் கதையில்லை என நீங்கள் கூறினால் அறிவியல் ரீதியான சான்றுகளை தாருங்கள் பரிசீலிக்கலாம். அல்லது வரலாற்றாய்வு முறைகளை அறிவியலுக்கு முரணானவை என நிருவுங்கள் பரிசீலிக்கலாம். பரிசீலித்து எது சரியோ அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஆய்வுகள் உண்மைக்கு பக்கத்தில் வரலாம், உண்மையாக முடியாது எனக்கூறும் நீங்கள் ஹதீஸில் கூறப்பட்டிருப்பவைகளே ஹதீஸின் உண்மைத்தன்மைக்கு ஆதாரம் என்கிறீர்கள். சிந்தனை செய்யுங்கள். அதே நேரம் ஏங்கல்ஸின் நூலை படிக்க முன்வந்திருக்கிறீர்கள், வரவேற்கிறேன். நாடகத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதல்ல அந்நூல். முழுவதும் படியுங்கள், பின்னர் பேசுவோம். இன்னும் நல்ல நூல்கள் நிறைய இருக்கின்றன.

\\நீங்கள் அப்படி என்ன பொல்லாத கேள்விகேட்டீர்கள்?//\\கம்யூனிசத்தின் தீர்வான இந்த அடிப்படைகள் தவறு என்றால், ஏன் இதுவரையான உலகில் பாலியல் குற்றங்களை தடுக்க முடியவில்லை?// என்பது தான் நான் வைத்த கேள்வி. இதற்குத்துணையாகத்தான் முகம்மது என்ன முன்மாதிரியைக் காட்டினார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. துணைக்கேள்விக்கு விரிவாக பதில் கூற முன்வந்த‌ நீங்கள் முதன்மையான கேள்வியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது ஏன்? துணைக்கேள்வியிலும் முகம்மது என்ன முன்மாதிரியைக் காட்டினார் என்றுதான் கேட்டிருக்கிறேன். ஆனால் நீங்களோ முகம்மது ஒரு அழகிய முன்மாதிரி என நீங்கள் கற்ற பாலபாடத்தை திரும்ப ஒப்பித்தீர்கள். முஸ்லீம்களுக்கு முகம்மது முன்மாதிரி. ஆனால் முகம்மது என்ன முன்மாதிரியைக் காட்டினார். நீங்கள் கூறுகிறீர்களே கம்யூனிசத்தீர்வை செயல்படுத்திக்காட்டுங்கள் பின்னர் பார்க்கலாம் என்று. முகம்மதுவின் கோரிக்கைக்கு அன்றைய அரபிகள் செவிசாய்க்க மறுத்து, நீங்கள் இஸ்லாத்தை செயல்படுதிக்காட்டுங்கள் பின்னர் பார்க்கலாம் எனக் கூறியிருந்தால் முகம்மது முஸ்லீம்களுக்கு முன்மாதிரியாக ஆகியிருக்க முடியாது. அவர் கூறுவதை பரிசீலித்து ஏற்றுக்கொண்டதால்தான் முஸ்லீமாக முடிந்தது. இதைத்தான் உங்களிடமும் கூறுகிறோம் கம்யூனிச கொள்கைகளை பரிசீலித்துப்பாருங்கள். முகம்மது தன் சமகால அரபுகளை ஒரு ஒழுங்கிற்கு கொண்டுவர விரும்பினார். அதற்காக போராடினார், அதை செயல்படுத்திக்காட்டினார். அவரிடம் தீர்வு என்று ஒன்றுமில்லை. ஏனென்றால் அவர் எதைக்கூறினாரோ அதை செயல்படுத்திய பின்னரும் குற்றங்கள் தொடர்கின்றன. அவர் சட்டங்களை இயற்றி ஒழுங்குபடுத்தினார் அவ்வளவுதான். இதைத்தான் சோசலிசமும் செய்திருக்கிறது. அது தெளிவாகவே கூறுகிறது. சட்டம் போடுவது தீர்வல்ல என்று. அதுதான் அழுத்தம் திருத்தமாக இன்றும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. அதைத்தான் அந்தக் கேள்வி கேட்கிறது ஏன் இன்னும் பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியவில்லை? சட்டங்கள் போட்டு சற்று குறைத்து விடுவதால் அது தீர்வாகி விடுமா? கம்யூனிசத்தை தவிர யாரிடமும் எந்தத்தீர்வும் இல்லை. அது கூறும் அடிப்படைகளை, தீர்வுகளை பரிசீலித்துப்பார்க்கும் துணிவு இல்லை. அதனால் தான் இஸ்லாமே தீர்வு என வாதம் செய்ய வந்த நீங்கள் கடைசி வரை குற்றங்கள் இருக்கும் அதை தவிர்க்க முடியாது என்கிறீர்கள். அது தான் மெய், இஸ்லாத்திடம் ஒரு தீர்வும் இல்லை. அது செய்வதெல்லாம் சட்டங்கள் போட்டு நழுக்கிச் செல்வது தான். இதை பரிசீலனை செய்யும் துணிவு ஏன் இல்லை?

நான் திரித்து பதில் கூறியிருக்கிறேனா? \\மிருகங்களிலும் பெண் இனங்களை ஆணினம் துரத்திக் கொண்டு அலைகின்றன அப்படியெனின் அதவும் ஆணாதிக்கமா? என்று கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறீர்கள்// இது உங்கள் கேள்வி. இதற்கு முன்னால் நான் பதிலளிக்கவில்லை என நீங்கள் குறிப்பிட்ட கேள்வி இதோ \\ஒரு பெண் நாயை பல ஆண் நாய்கள் துரத்துவதை சாதரணமாக காணலாம். இதை நீங்கள் ஆணாதிக்கம் என்பது சரியன்று.காமாதிக்கம் என்பதே சரி// நீங்கள் நாயைக் குறிப்பிட்டதால் தான் அதையே நானும் குறிப்பிட்டுப் பதில் சொல்லியிருக்கிறேன். ஆனால் இதை நான் நாயோடு முடித்துக்கொள்ளவில்லை. எல்லா விலங்குகளையும் பொதுமைப்படுத்தியே கூறியுள்ளேன். \\மனிதனின் உறவில் உடல்தேவையை விட மனத்தேவையே அதிக பங்கு வகிக்கிறது. ஆனால் மிருகங்களில் இந்த நிலை இல்லை, உறவுக்கான உடலியல் தேவை இல்லாத வரை எந்த ஆண்விலங்கும் பெண்விலங்கை அணுகாது// விலங்குக்கும் மனிதனுக்கும் கலவியில் உள்ள வேறுபாடு எது என்பதையும், ஆணாதிக்கம் எங்கு தொடங்குகிறது என்பதையும் தெளிவாக இது பிரித்துக்காட்டுகிறது. இதை ஏன் நீங்கள் பரிசீலனை செய்யவில்லை. உங்கள் கேள்விக்கே வருவோம். விலங்குகளில் ஏன் ஆண்கள் பெண்களை துரத்துகின்றன? பெண்கள் ஆண்களை துரத்துவதில்லை? பெண்களை கவர வேண்டிய தேவை விலங்களில் ஆண்களுக்கெ இயற்கையாக இருக்கிறது. ஆண் மான்களுக்கு கொம்பு, ஆண் யானைகளுக்கு கொம்பு, மதம், ஆண் மயிலுக்கு தோகை, ஆண்சிங்கத்திற்கு பிடறி, ஆண் குரங்குகள் பிற ஆண்களோடு சண்டையிட்டு வெல்ல வேண்டும் ஆனால் இவை விலங்குகளின் ஆணாதிக்காமாக ஆகாது. ஏனென்றால் அவைகள் மனத்தூண்டுதலாலல்ல, உடற்தூண்டுதலாலேயே செயல்படுகின்றன. மாறாக‌ மனிதனில் ஆணைக் கவருமாறு பெண் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். அலங்காரம் செய்துகொள்ள‌ம், கவர்ச்சியாக இருக்கவும் பெண் கட்டாயப்படுத்தப்படுகிறாள். ஆனால் தொடக்கத்தில் இந்த நிலை இல்லை. பெண்ணைக் கவர்வதற்காகவே ஆண் தன்னை பலசாலியாக்கிக் கொண்டான். அதனாலேயே பெண்ணை அடிமைப்படுத்திக் கொண்டான். ஆகவே விலங்குகளிடமல்ல மனிதர்களிடமே ஆணாதிக்கம் நிலவுகிறது என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, மனத்தேவைகளே அவனை வழிநடத்துகிறது, இரண்டு, இயல்பான பெண்ணை ஆண் கவர வேண்டும் என்பதை மாற்றி பெண்ணே ஆணைக் கவர வேண்டும் என்றாக்கியிருக்கிறான். இதற்கு பதில் கூறுகிறேன் என்று “எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் ஆண்கள் நல்ல சட்டையணிந்து தலைவாரிக்கொண்டு சைட் அடிக்கச் செல்வதில்லையா?” என்று கூறாதீர்கள், நான் கேட்பதிலுள்ள அடிப்படையை உணருங்கள்.

இஸ்லாத்தால் பாலியல் குற்றங்கள் ஒழிக்க முடியாது என்று ஒத்துக்கொண்டுவிட்டீர்கள். இப்போது கம்யூனிசம் கூறும் தீர்வு குறித்து பேச வேண்டும் என்றால், அதன் அடிப்படையான ஆணாதிக்கம், தனியுடமை என்பது குறித்த தெளிவுகள் வேண்டும். தொடக்கத்திலிருந்தே ஆணாதிக்கம் உலகில் இல்லை என மேலோட்டமாக கூறிவருகிறீர்கள். நெருக்கிப்பிடித்தால் இஸ்லாத்தில் இல்லை என்கிறீர்கள். இதில் உங்கள் நிலைபாடு என்ன? தெளிவாக கூறிவிடுங்கள் என்று கேட்டிருந்தேன், பதில் கூறவில்லை. நம்முடைய விவாதத்திற்கு இந்தக் கேள்வி மிக அவசியமான ஒன்று.

\\கம்யுனிசம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.மக்களுக்கு ஒவ்வாதது.அனைவரும் சமம்.எல்லாமே மக்களுக்கு சொந்தம் தொழிலாளியே மன்னன் .என்று மக்களை ஏமாற்றும் செப்படி வித்தை மக்களிடம் எடுபடாதது. மக்களின் சுதந்திரத்தை பறிக்கக் கூடியது.கொல்லப்பட்டவர்களின் கணக்கும் சர்வாதிகார தொழிலாளிக்கு மட்டுமே தெரியக் கூடியது என்பதால் மக்களால் அடித்து விரட்டப் பட்டது// இது இந்த விவாதத்தோடு தொடர்பில்லாத ஒன்று. நான் ஒன்றை கூறுகிறேன் என்றால் உங்கள் கேள்வியை ஒட்டி தேவைப்படுவதை எடுத்துக்கூறுகிறேன். அப்படிக்க்கூறினால் அதே போன்று நீங்கள் கூற வேண்டும் என்பதற்காக கூறுவது இது. எனவே இது போன்றவைகளை நான் அலட்சியம் செய்கிறேன். ஏற்கனவே ஹதீஸ்களை நோக்கி மெல்ல திரும்பத்தொடங்கியிருக்கும் விவாதத்தை பாலியல் குற்றங்களை நோக்கி திருப்பவேண்டிய தேவையும் இருக்கிறது. அடுத்து, நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கிறேன், எப்போது போராடப் போகிறேன், இணையத் தீர்வு போன்ற உங்கள் சொல்லாடல்களெல்லாம் இந்த விவாதத்திற்கு அவசியமற்றவை.

உங்கள் பதிவை \\இன்னும் பெயரை சொல்லாமலே ,ஊரை சொல்லாமலே நீங்கள் எவ்வளவு சுதந்திரமாக கருத்தை சொல்லி கொண்டிருக்கீறீர்கள் என்பதை அறிந்துள்ளேன்// என்று தொடங்கியுள்ளீர்கள். தன்னளவில் தனக்கு சுதந்திரத்தை மறுக்கும் ஒருவன் சுதந்திரமானவனாக இருக்க முடியாது. அதாவது என்னுடைய பல கேள்விகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறீர்கள் என்பதால் உங்கள் மனதில் தோன்றுபவைகளைக் கூட உங்களால் வெளிப்படுத்த முடியவில்லை என நான் கூறியிருந்தேன். அதற்கு நீங்கள் கூறியிருக்கும் பதில் தான் மேற்கண்டது. நான் எந்தப் பெயரில் இருந்தாலும் என்னுடைய எண்ணங்கள் சுதந்திரமாக வெளிவரும். தவிரவும் இணையத்தைப் பொருத்தவரை சொந்தப் பெயரில் எழுதினாலும், புனைபெயரில் எழுதினாலும் அனாமதேயம் தான். முகவரி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நாடோடி தான். பதில் கொடுக்க வேண்டுமென்பதுதான் முக்கியமேயன்றி அதில் புரிதல் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை என்பதை பொட்டிலறைந்தாற்போல் முதல் வரியிலேயே உணர்த்தி விட்டுத்தான் உங்கள் பதிவை ஆரம்பித்துள்ளீர்கள். இதுதான் தொடக்கத்திலிருந்து உங்களிடம் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பது கடைசியாக உங்கள் கவனத்திற்கு.

செங்கொடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.