ஞாயிறு, 14 நவம்பர், 2010

பிறை பார்த்து கொண்டாடுவோம் பெருநாளை .

பிறை பார்த்து கொண்டாடுவோம் பெருநாளை .

‘அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1909

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நோன்பு மற்றும் பெருநாட்கள் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் அமைந்து வருகின்றன. இதற்கு அடிப்படைக் காரணம், தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் சமீப காலமாக இலங்கை, சவூதி என்று பிற நாடுகளையோ அல்லது கேரளா, கர்நாடகா என்று பிற மாநிலங்களையோ பிறை விஷயத்தில் பின்பற்றாமல் தமிழக அளவில் பிறை பார்த்து நோன்பு வைத்து வருவதால் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை.

கடந்த நோன்பு மற்றும் நோன்புப் பெருநாளில் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்ததால் அல்லாஹ்வின் அருளால் தமிழகமெங்கும் ஒரே நாளில் நோன்பும், பெருநாளும் அமைந்தது.

தமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாதந்தோறும் பிறையைப் பார்த்து வருகின்றது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை (07.11.2010) அன்று பிறை தென்படுகிறதா என்று பார்த்த போது, தமிழகமெங்கும் மேகமூட்டமாக இருந்ததால் அன்று பிறை தென்படவில்லை.

‘மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1907

மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக முழுமையாக்குங்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் உத்தரவுப்படி நமக்கு முன்னால் உள்ள ஒரே வழி துல்கஅதா மாதத்தை முப்பதாக முழுமைப்படுத்துவது தான்.

இதன் அடிப்படையில், திங்கள்கிழமை துல்கஅதா மாதத்தின் முப்பதாம் நாள் ஆகும். செவ்வாய்கிழமை (09.11.2010) அன்று துல்ஹஜ் பிறை 1 ஆகும். எனவே 17ம் தேதி அரஃபா நோன்பும், 18ஆம் தேதி வியாழக்கிழமையன்று துல்ஹஜ் பிறை 10 அன்று ஹஜ் பெருநாளும் வருகின்றது.

அந்தந்த பகுதிகளில் பிறை பார்த்தே நோன்பு மற்றும் பெருநாட்களை முடிவு செய்ய வேண்டும் என்று மார்க்கம் கூறும் அடிப்படையில் நாம் செயல்படுவதால் எந்தக் குழப்பமும் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது என்பதைக் கவனத்தில் கொண்டு இந்த ஆண்டின் அரஃபா நோன்பு மற்றும் ஹஜ் பெருநாளை அமைத்துக் கொள்வோமாக!

பொதுவாக முஸ்லிம்களிடம், ஹஜ் பெருநாளுக்காகப் பிறை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணமும் இருந்து வருகின்றது. இது தவறாகும்.

காரணம், குர்பானி கொடுப்பவர்கள் பிறை தென்பட்டதிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை நகம், முடிகளைக் களையக் கூடாது என்பது நபி (ஸல்) அவர்களின் கட்டளையாகும். இத்துடன் துல்ஹஜ் பிறை 9ல் நோன்பு நோற்பதும் சுன்னத்தாகும்.

எனவே இந்த வணக்கங்களைச் செய்வதற்காக துல்ஹஜ் பிறை 1 துவங்கியதும் மக்களுக்குப் பிறையை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை யாரும் பிறையை அறிவிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். எனவே தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இந்த அறிவிப்பைச் செய்கின்றது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்ற ஹதீஸ் அடிப்படையில் 18.11.2010 வியாழக்கிழமை அன்று பெருநாள் கொண்டாடி, நமது குர்பானி கடமைகளை நிறைவேற்றுவோமாக!

ஒவ்வொருவரும் தத்தமது பகுதியில் பிறை பார்க்க வேண்டும். தமது பகுதி அல்லாத வேறு பகுதிகளில் பார்க்கப்படும் பிறை நமது பகுதியில் பார்த்த பிறையாக முடியாது.

”பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1906

பிறையை கண்களால் பார்த்துதான் நோன்பை துவக்க வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் வலியுறுத்துகிறது உலகில் எங்காவது பார்த்த பிறையை நாம் ஏற்றுக் கொள்ளலாமா? என்பதற்கும் இந்த ஹதீஸில் விடையிருக்கிறது.

உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்று பொருள் கொள்ள இந்த ஹதீஸின் பிற்பகுதியே தடையாக நிற்கிறது.

உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்ற வாசகமே அது.

உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்றால் இந்த பிற்பகுதி தேவையில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் எப்போதும் மேகமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத பகுதி இருக்கும். அங்கே பார்த்து உலகுக்கு அறிவிக்கலாம். உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் என்ற வாசகம் ஒவ்வொரு பகுதியிலும் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியே நிற்கிறது.

எனவே மேற்கண்ட ஹதீஸின் பொருள் இது தான். ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும். பிறை பார்த்து நோன்பை விட வேண்டும். மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பகுதியினரும் தத்ததமது பகுதியாக எதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற உரிமையை நபியவர்கள் மக்களிடம் கொடுத்துள்ளார்கள். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

”நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ

பகுதி எது என்பது குறித்து பலவிதமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. முடிவில் மொழியாலும் தனி நிர்வாகத்தாலும் ஒருங்கிணைக்க்கப்பட்டுள்ள தமிழகம் என்பது நமது பகுதி என்ற முடிவுக்கு நாம் வந்தோம். அது போல் சுன்னத் ஜமாஅத்தினரும் இந்த அடிப்படையில் தான் முடிவு செய்து வந்தனர்.

கடந்த பல வருடங்களில் வட மாநிலங்களில் பிறை பார்க்கப்பட்டு அவர்கள் நொன்பு நோற்ற போது தமிழகத்தில் உள்ள சுன்னத் ஜமாஅத்தினரும் நாமும் அதை ஏற்காமல் தமிழகத்தில் பிறை காணப்பட்டதன் அடிப்படையில் நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்து வந்துள்ளோம்.

டெல்லிக்கு ஒரு பெருநாள் சென்னைக்கு ஒரு பெரு நாள் என பல வருடங்களாக இருந்து வந்ததை நாம் மறந்து விட முடியாது.

அந்த அடிப்படையில் இந்த மாதம் தமிழகம் முழுவதும் நாம் சல்லடை போட்டு விசாரித்ததில் எங்கும் பிறை பார்க்கப்படவில்லை என்பது உறுதியானது. பிறை காணப்படாத போது இதற்கு முன் நாம் எவ்வாறு முடிவு எடுத்து வந்தோமோ அவ்வாறு முடிவு எடுப்பது தான் முரண்பாடு இல்லாத கொள்கை முடிவாக இருக்க முடியும்.

இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் எங்கும் பிறை காணப்படாத நிலையில் வட மாநிலங்களில் அறிவிக்கப்பட்டதைப் பின்பற்றி முடிவு செய்தால் எதிர் காலத்தில் ஆண்டு தோறும் மீண்டும் குழப்பங்கள் தொடர் கதையாகி விடும். நபிவழியை மீறியதாகவும் ஆகி விடும் என்று தெரிவித்துக் கொள்கிறது 

1 கருத்து:

  1. சகோதரரே அஸ்ஸலாமு அலைக்கும்.
    பிறை கண்டு நோன்பு வைக்கவும் பிறை காணாவிட்டால் ஷஃபான் மாதத்தை 30 நாட்களாகவும் கனக்கில் எண்ணவும் அடுத்து வரும் மாதமாகிய ரமலான் மாதமாகிய நோன்பைப் பற்றியே நமக்கு தெரிவிக்கின்றது. ஆனால் அரஃபா நோன்பென்பது ஹாஜிகளின் அரஃபா தினம் தான்.
    இந்த வருட அரஃபா தினம் என்பது ஸவுதியில் ஹாஜிகள் கூடும் தினமான 15/11/2010 திங்கள் கிழமை. அன்றைய தினம் ஹாஜிகளுக்கு சங்கையான நாளாகவும் ஹாஜிகள் அல்லாதவர்கள் நோன்பு வைக்கவும் தான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் தாங்களின் ப்ளாக்கரில் 17/11/2010 அன்று தான் அரஃபா நோன்பு என குறிப்பிட்டுள்ளீர்கள். முதலில் அரஃபா நோன்பு என்பது எதற்க்காக வைக்கப்படுகிறது, அரஃபா நோன்பா? அல்லது துல் ஹஜ் பிறை 9 நோன்பா? துல் ஹஜ் பிறை 9 நோன்பென்றால் ஏன் அரஃபா நோன்பென்று குறிப்பிட்டுள்ளீர்கள். அரஃபா நோன்பென்றால் ஏன் ஹாஜிகளின் அரஃபா தினமான 15/11/2010 அன்று நோன்பு இல்லை என்று, தாங்களின் விளக்கம் தந்தால் தெரியாத அனைவருக்கும் விளங்க வாய்ப்புள்ளது. வஸ்ஸலாம்
    இப்படிக்கு
    ஸவுதி அல்கோபரில் இருந்து நன்னி அப்துல் வஹாப்.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.