ஞாயிறு, 28 நவம்பர், 2010

செங்கொடியின் பதில்

  1. நண்பர் இப்ராஹிம்,
    முதலில் இஸ்லாத்திற்கும் கம்யூனிசத்திற்கு இடையிலுள்ள ஓர் அடிப்படையான வித்தியாசத்திலிருந்து தொடங்குகிறேன். இஸ்லாத்தின் வேதமான குரானில் சிலவகைக் குற்றங்களுக்கு இன்னின்ன தண்டனைகள் என்று சட்டவியல் தொகுப்பு இடம்பெற்றிருக்கும். இதைப்போல கம்யூனிசத்தில் சட்டங்கள் இடம்பெற்றிருக்காது. கம்யூனிசமானது சமூகத்தை நடப்பிலிருக்கும் அமைப்புமுறையை புரட்சிகரமாக மாற்றியமைப்பது குறித்த அழைப்பு. அந்த அடிப்படையில் புரட்சி மூலம் சோசலிச நடைமுறைக்கு வரும் ஒரு நாடு, அதன் சமூக சூழலுக்கு ஏற்ப சட்டங்களை நடைமுறைகளை வகுத்துக்கொள்ளும். சூழலுக்கேற்ப புதிய நடைமுறைகளை சேர்த்துக்கொள்வது இயங்கியலுக்கு அடிப்படையாகிறது. இஸ்லாத்தில் ஏற்கனவே குரானில் கூறப்பட்டவைகளை விரித்துக்கொள்ளலாமேயன்றி புதியவைகளை இணைக்கமுடியாது. இந்த வித்தியாசத்தை நீங்கள் அறிந்துகொண்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.
    பாலியல் குற்றங்கள் தற்போதைய சமூகத்தில் மட்டும் நடப்பவையல்ல. ஆணாதிக்கச் சிந்தனை என்று தொடங்கியதோ அன்றிலிருந்தே பாலியல் குற்றங்களும் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு காலகட்டத்திலும் பாலியல் குற்றங்களின் தன்மையும் வடிவங்களும் மாறிவந்திருக்கின்றன. பாலியல் மட்டுமல்ல எந்த ஒரு குற்றச்செயலையும் முழுக்கமுழுக்க தனிமனிதன் சார்ந்ததாக கம்யூனிசம் பார்ப்பதில்லை. குற்றம் புரிவதற்கான சூழல் சமூகத்தில் இருந்துகொண்டிருக்கும்வரை தனிமனிதனை மட்டுமே அதற்கு காரணமாக்கிவிட முடியாது. எனவே சமூகத்தை மாற்றுவதிலிருந்துதான் இதைத் தொடங்க முடியும். பாலியல் தேவைகள் என்பது உடல்சார்ந்து இனப்பெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இனப்பெருக்கம் மட்டுமே நோக்கமாக இருக்கும்வரை அங்கு குற்றம் என்பது இயல்பில் இருக்காது. ஆனால் அது நுகர்வாக மாறும்போது அதாவது ஆசை, இன்பம் என்பனபோன்ற வகைப்பாட்டுக்கு மாறும்போதுதான் அங்கு குற்றம் வருகிறது. ஆணாதிக்கம் எனும் சிந்தனை தோன்றாதவரை பெண்ணுடல் ஆசையாக, இன்பமாக, நுகர்வாக ஆகியிருக்காது. எனவே பாலியல் குற்றங்களுக்கு தனியுடமையும், ஆணாதிக்கமுமே காரணம். கம்யூனிசம் இந்த இரண்டும் இல்லாத சமூகத்தை அமைப்பதில் துடிப்புடன் இருக்கிறது. தனியுடமையிலும், ஆணாதிக்கத்திலும் தங்கியிருக்கும் எந்தச் சமூகத்தாலும் பாலியல் குற்றங்களைத் தவிர்த்துவிடமுடியாது என்பதுதான் கம்யூனிசத்தின் பார்வை. தனியொரு மனிதனுக்கு அளிக்கப்படும் தண்டனை என்பது நடந்துவிட்ட செயலுக்கான எதிர்வினையாகத்தான் அமையுமேயன்றி சமூக நோக்கில் அதன் காரணியை களைவதற்குப் பயன்படாது.
    இனி நீங்கள் கூறியிருக்கும் இஸ்லாமிய நிலைபாடு சரியானதா எனப்பார்க்கலாம். இஸ்லாம் பாலியல் குற்றங்களுக்கான காரணமாக தனிமனிதனையே கூறுகிறது. இது அடிப்படையிலேயே தவறானதாகும். ஆணும் பெண்ணும் தனித்திருப்பது, பெண்ணின் ஆடை ஆடவனின் ஆசையை தூண்டுவது, இன்றைய நுகர்வுக் கலாச்சாரப் பழக்கங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் போன்றவைகளை பாலியல் குற்றங்களுக்கான காரணங்களாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். இவை மேலோட்டமானவை. சமூகத்திலிருந்து இந்தக் காரணங்களை நீக்கிவிட்டால் பாலியல் குற்றங்கள் நீங்கிவிடுமா? இவைகள் தற்போது இருக்கும் பாலியல் குற்றங்களின் அளவை வேண்டுமானால் சற்று குறைக்கலாம். ஆனால் பாலியல் முறைகேடுகளை இவை நீக்கிவிடாது. இந்தக் காரணங்களுக்கு நடப்பிலிருந்து நீங்கள் எடுத்துக்காட்டுகள் தந்திருப்பதுபோலவே, இதற்கு எதிரான எடுத்துக்காட்டுகளையும் தரமுடியும். ஆணும் பெண்ணும் தனித்திருக்கையில், பெண் ஆணின் உயரதிகாரியாக இருக்கும் பட்சத்தில் மூன்றாவதாக இருக்கும் சைத்தானின் முயற்சிகள் பலனளிக்காது. மேலாடை அணியாத பழங்குடியின சமூகங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த சமூகத்தில் இருக்கும் ஆண்கள் ஆடைகுறைவு என்ற காரணத்தினால் பாலியல் அத்துமீறல்களைச் செய்வதில்லை. எனவே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காரணங்கள் அதாவது இஸ்லாம் கூறும் காரணங்கள் மேம்போக்கானவை.
    \\மூன்றவதாக அங்கு சைத்தான் இருக்கிறான்” என்ற நபிமொழி பாலியல் குற்றங்கள் நடப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் தீர்வுகளையும் ரத்தின சுருக்கமாக சொல்லும்//
    \\ஓரளவு அமல்படுத்தி கொண்டிருக்கும் சவுதிஅரபியாவில் உலக நாடுகளை ஒப்பிடுகையில் பாலியல் குற்றங்கள் மிகக்குறைவாக இருப்பது தெள்ளத் தெளிவானது// இந்த இரண்டு இடங்களிலும் குரான் குறிப்பிடும் தீர்வு என நீங்கள் முன்மொழிந்திருப்பது ௧) ஆணும் பெண்ணும் தனித்திருக்கக்கூடாது, ௨) பெண்கள் புர்கா அணிந்துகொள்வது. இந்த இரண்டுமே அடிப்படையற்றது. ஆணும் பெண்ணும் தனித்திருப்பது என்பது இன்றைய முதலாளிய சமூகத்தில் சாதாரணமானது. வெகுசில நிகழ்வுகளில் அவ்வாறு நடந்துகொள்ளலாம் என்பதால் ஆண் பெண் தனித்திருப்பதையே தவிர்க்கவேண்டும் என்பது சரியற்ற ஒன்றாகவே இருக்கும். பாலியல் குற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கும் ஆணாதிக்கப் பார்வைதான் பெண்கள் புர்கா அணிவதை தீர்வு என்று சொல்ல முடியும். பாலியல் வன்முறைக்கான குற்றத்தை ஆண்களிடம் வைத்துக்கொண்டு பெண்களை புர்கா அணியச் சொல்வது எப்படி தீர்வாக முடியும்?
    பிற நாடுகளைப்போலவே சௌதியிலும் பாலியல் குற்றங்கள் மலிந்துதான் கிடக்கின்றன. சௌதியில் பாலியல் குற்றங்களை பதிவு செய்வது அரிது என்பதால் குறைவானதாகத் தோன்றுகிறது.
    செங்கொடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.